கருடா ஏரோஸ்பேஸ் தலைமை நிர்வாக அதிகாரி அக்னீஸ்வர் ஜெயபிரகாஷ் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பாதுகாப்பு ட்ரோன் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்து உரையாடினார்.
இந்தியாவின் முன்னணி ட்ரோன் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜெயபிரகாஷ், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் சமீபத்தில் நேரடியாக சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது, இந்தியாவில் பாதுகாப்பு ட்ரோன்களை உருவாக்குவதில் கருடா ஏரோஸ்பேஸின் பங்கு குறித்து விரிவாக எடுத்துரைத்தார். வேளாண் மற்றும் நுகர்வோர் ட்ரோன்களின் சந்தையில் முதன்மையாக விளங்கும் கருடா, அடுத்த 2 ஆண்டுகளில் பாதுகாப்பு பிரிவில் படிப்படியான ஒரு முன்னேற்றம் அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை அவர் வெளிப்படுத்தினார்.
எச். ஏ. எல் மற்றும் பி. இ. எம். எல் ஆகிய நிறுவனங்களின் ஆலோசனையுடன், 30,000 சதுர அடி பரப்பளவில் அதிநவீன ட்ரோன் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் சோதனை வசதிகளைக் கொண்ட, ஒரு புதிய பிரத்யேக பாதுகாப்பு ட்ரோன் ஆய்வகம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சருடன் ஜெயப்பிரகாஷ் விவாதித்தார். ட்ரோன் மோட்டார், பேட்டரிகள் மற்றும் டிரான்ஸ்மிட்டர்கள் போன்ற முக்கியமான பாகங்களை, உள்நாட்டிலேயே தயாரிக்கும் உற்பத்தி திறன்களை இந்த ஆய்வகம் கொண்டிருக்கும். கருடா ஏரோஸ்பேஸ் ஐ. எஸ். ஆர் திறன்களைக் கொண்ட ட்ரோன்கள், ஸ்வார்ம் ட்ரோன்கள், டெட்டர் ட்ரோன்கள் மற்றும் நீருக்கடியில் செயல்படும் ட்ரோன்களைக் கூட உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான அக்னிஷ்வர் ஜெயப்பிரகாஷ் இதுகுறித்து தெரிவிக்கும்போது, 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை, உலகின் ட்ரோன் மையமாக மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வை குறித்து விவாதிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமையடைவதாகக் கூறினார். உலகத்திற்காக இந்தியாவில் தயாரிப்போம் என்ற கருடா ஏரோஸ்பேஸின் திட்டமும் பாதுகாப்புத்துறை அமைச்சரால் பெரிதும் பாராட்டப்பட்டது என்று கூறிய அவர், ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தை செயல்படுத்த கருடாவின் செயல்பாடுகளை விரிவுபடுத்த பாதுகாப்புத் துறை அமைச்சர் தனது முழு ஆதரவை வழங்கியதாகவும் தெரிவித்தார்.
பாதுகாப்பு ட்ரோன் தொழில்நுட்பத்தின் முக்கிய பங்கையும், பிரதமர் நரேந்திர மோடியின் உலகத்திற்கான தொலைநோக்குப் பார்வையையும் இந்த கலந்துரையாடல் வெளிப்படுத்தியது என்றும், பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் ஆயுதப் படைகளுக்கான தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்துவதில் கருடா ஏரோஸ்பேஸ் முன்னணியில் இருக்கும் என்றும் அக்னீஸ்வர் ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.
பிரான்சை தலைமையிடமாக கொண்ட தாலெஸ், இஸ்ரேலை சேர்ந்த அக்ரோயிங் மற்றும் கிரேக்கத்தின் ஸ்பிரிட் ஏரோநாட்டிக்ஸ் போன்ற நிறுவனங்களுடனான கருடா ஏரோஸ்பேசின் சமீபத்திய கூட்டாண்மை குறித்தும் இந்த சந்திப்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கும், கட்டமைக்கப்பட்ட தொழில்நுட்ப பரிமாற்ற கூட்டாண்மை மூலம் உலகிற்கு ஏற்றுமதி செய்வதற்கும், கருடா உறுதிபூண்டுள்ளது. இது உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான செலவுகளைக் குறைக்கும் என்பதோடு இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.