ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஜூலை 14ஆம் தேதி டோக்கியோ செல்கிறது இந்திய அணி…

0
269

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஜூலை 14ஆம் தேதி டோக்கியோ செல்கிறது இந்திய அணி…

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தேர்வாகியுள்ள இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணி, ஜூலை 14ஆம் தேதி விமானம் மூலம் டோக்கியோ செல்கிறது.

யூ திங்க் அறக்கட்டளை மற்றும் சன்ஷைன் சீனியர் செகண்டரி பள்ளி இணைந்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தேர்வாகியுள்ள இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு விழாவினை நடத்தினர். இணைய வழியில் நடந்த இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக சன்ஷைன் சீனியர் செகண்டரி பள்ளியின் இயக்குனரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகளுமான திருமதி.செந்தாமரை சபரீசன், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.ராஜீவ் மேத்தா, இந்தியாவின் பசுமை நாயகன் என அழைக்கப்படும் யூ திங்க் அறக்கட்டளையின் நிறுவனர் திரு.கே.அப்துல் கனி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில், இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டீ சந்த், டேபில் டென்னிஸ் வீரர் ஷரத் கமல், வாள்வீச்சு வீராங்கனை சி.ஏ.பவானிதேவி, நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் மற்றும் படகுப்போட்டி வீரர்களான வருண் தக்கார் மற்றும் கே.சி.கணபதி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து சன்ஷைன் சீனியர் செகண்டரி பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள், ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடினர். அப்போது மாணவ மாணவியரின் கேள்விகளுக்கு பதிலளித்த இந்திய ஒலிம்பிக் வீரர்கள், கடின உழைப்பும், முயற்சியும் இருந்தால் விளையாட்டில் சாதிக்க முடியும் என்று மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டினார். மேலும், அனைத்து பள்ளிகளிலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே அளவிற்கு, மாணவர்களுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தையும் ஊக்குவித்து, பயிற்சியும் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். அதேசமயம், பெற்றோர்களும் மாணவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து, அவர்களது லட்சியத்தை அடைய உறுதுணையாக இருந்தால், மாணவர்களால் விளையாட்டுத்துறையில் நாட்டிற்கு பெருமை சேர்க்க முடியும் என்று தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தெரிவித்தார். மற்றொரு தமிழக டேபிள் டென்னிஸ் வீரரான சத்யன் ஞானசேகரன் ரசிகர்களின்றி போட்டியில் விளையாடுவது சவாலானதாக இருக்கும் என்றும், இந்திய மக்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது ஆதரவை கொடுப்பது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி கூறுகையில், ஒரு பெண்ணாக விளையாட்டுத்துறையில் சாதிக்க, நிறைய சவால்களை சந்தித்ததாக தெரிவித்தார். விழாவில் பேசிய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த், ஐந்து சகோதரிகள் ஒரு சகோதரர் உட்பட மொத்தம் 9 பேர் கொண்ட மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து தாம் வந்ததாகவும், பயிற்சியாளர் கூட இல்லாமல் இருந்த நிலையில், தன்னுடைய திறமையைக் கண்டு உதவிய அரசுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சூழலில் வீடியோ பதிவை அனுப்பியிருந்தார். அதில் இன்றைய காலகட்டத்தில் கல்வியும், விளையாட்டும் மாணவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது என தெரிவித்ததோடு, தாம் விளையாட்டுத்துறையில் தன் தாய்நாட்டை பெருமைப்படுத்தியதாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ALSO READ

Tokyo Olympics 2020: First batch of Indian athletes to depart for Japan on 14 July

விழாவில் கலந்து கொண்டு பேசிய இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா, இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 10க்கும் மேற்பட்ட ஒலிம்பிக் மெடல்கள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், டோக்கியோ ஒலிம்பிக்கில் தேர்வாகியுள்ள இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய இந்திய அணி, ஜூலை 14ஆம் தேதி விமானம் மூலம் டோக்கியோ செல்ல இருப்பதாக தெரிவித்த அவர், அங்கு 17ஆம் தேதி வரை கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பார்கள் என்றும், அதன்பிறகு பயிற்சி மேற்கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.