ஆக்ஸிஜன் நிரப்ப துபாய்க்கு கன்டெய்னர்களை கொண்டு சென்றது விமானப்படை விமானம்
இந்திய விமானப்படையில் உள்ள ஜம்போ சரக்கு விமானங்கள், காலியாக உள்ள கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் டேங்கர்களை, கடந்த ஏப்ரல் 22ம் தேதி முதல், நாட்டின் பல இடங்களுக்கு கொண்டு செல்கின்றன. ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டபின் அந்த டேங்கர்கள் சாலை வழியாகவோ அல்லது ரயில் மூலமாகவோ அனுப்பப்படுகின்றன. தற்போது, காலி கன்டெய்னர்கள், விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்திய விமானப்படையின் ஐஎல்-76 ரக விமானம், மூன்று காலி கிரையோஜெனிக் கன்டெய்னர்களை ஜாம்நகரிலிருந்து, துபாயில் உள்ள அல் மக்தோம் என்ற இடத்துக்கு கொண்டு சென்றுள்ளது. அங்கு திரவ மருத்துவ ஆக்ஸிஜன் நிரப்பப்படும். இந்தப் பணியில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட பின், இந்த கன்டெய்னர்கள் கப்பல் மூலம் இந்தியா கொண்டு வரப்படும். காலி கன்டெய்னர்களை விமானம் மூலம் கொண்டு செல்வதன் மூலம், பயண நேரம் குறையும்.