ஞானபுரீயில் அனுமன் ஜெயந்தி திரளான பக்தர்கள் தரிசனம்…

0
243

ஞானபுரீயில் அனுமன் ஜெயந்தி திரளான பக்தர்கள் தரிசனம்…

திருவாரூர் : ஞானபுரீ ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி தேவஸ்தானத்தில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா மற்றும் சீதா திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அருகே உள்ளது திருவோணமங்கலம். இங்கு, ஞானபுரீ சித்திர கூட ஷேத்திரத்தில், ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

ஆஞ்சநேயருக்கு வலது புறம் லட்சுமி நரசிம்மர், இடது புறம் கோதண்ட ராமர், சீதாதேவி, லட்சுமணர், பவ்யா ஆஞ்சநேய சுவாமி எழுந்தருளி உள்ளனர். சீதா கல்யாண உற்சவம் சங்கடஹர மங்கள மாருதி தேவஸ்தானத்தில் மார்கழி மாத மூல நட்சத்திர திருநாளான நேற்று, ஹனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.

இதை முன்னிட்டு கடந்த 19ம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஹனுமன் ஜெயந்தி திருநாளான நேற்று, விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமி மலர் அலங்காரத்தில், வெள்ளிக் கவசத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

காலை 10:00 மணிக்கு ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மஹா சுவாமிகள் முன்னிலையில் விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், சீதா கல்யாண உற்சவமும் நடைபெற்றது.

தொடர்ந்து ஆச்சார்ய மஹா சுவாமிகள், ஹனுமன் ஜெயந்தி மற்றும் சீதா திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

மேலும் திருமாங்கல்ய சரடு, மஞ்சள் கிழங்கு, குங்குமம், பூஜிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றை அருட்பிரசாதமாக வழங்கினார்.முன்னதாக, உஞ்சவிருத்தி பஜனை, சீதா திருக்கல்யாண உற்சவத்தை உடையாளூர் டாக்டர் கல்யாணராமன் பாகவதர் மற்றும் அவரது குழுவினர் செய்தனர்; சீதா கல்யாண உற்சவத்திற்காக பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர்.

திரளான பக்தர்கள்ஆஞ்சநேயர் சுவாமியையும், திருக்கல்யாண உற்சவத்தையும் கண்டு தரிசித்து திருவருளையும், குருவருளையும் பெற்றனர். மாலையில் ஆஞ்சநேய சுவாமி வெள்ளி ரதத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். திரளான பக்தர்கள் ரதத்தை வடம் பிடித்து இழுத்தனர்.

விழா ஏற்பாடுகளை தேவஸ்தான ஸ்ரீ காரியம் சந்திரமவுலீஸ்வரர், தர்மாதிகாரி ரமணி அண்ணா மற்றும் அறங்காவலர் ஜெகன்நாதன் செய்திருந்தனர். நாமக்கல்நாமக்கல் கோட்டையில், புராதன சிறப்புப் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, ஒரே கல்லால் உருவான, 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி, நின்ற நிலையில், சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, ஒரு லட்சத்து எட்டு வடைமாலை நேற்று சாற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்தனர்.