கந்தசஷ்டி விழா – திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்!

0
751

கந்தசஷ்டி விழா – திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முருகன் ஆலயங்களில் கந்த சஷ்டி விழா கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், இன்று மாலை நடைபெற உள்ளது.

இதில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் விழா மிகவும் பிரசித்திபெற்றது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கான விழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கடற்கரைக்குப் பதிலாக கோவில் கிரி பிரகாரத்தின் கிழக்குப் பகுதியில் சூரபத்மனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், வழக்கம்போல கடற்கரையிலேயே நடத்த உத்தரவிடக் கோரி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணையில் ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், வழக்கம்போல இந்த ஆண்டும் கடற்கரையிலேயே சூரசம்ஹாரம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும், திருக்கல்யாண நிகழ்ச்சி கோவில் உள்பிரகாரத்தில் மகா தேவர் சன்னதி அருகே சனிக்கிழமை இரவு நடைபெறும் என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்வுகளை அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்துவைத்தனர்.திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா நாட்களில் நாள்தோறும் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இதேபோல, கோவில் வளாகம், மண்டபம் மற்றும் விடுதிகளில் தங்குவதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. கோயில் நிகழ்ச்சிகள் அனைத்தையும் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோவில் மற்றும் கோயில் வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வெளியூர் நபர்கள் மற்றும் வாகனங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் திருச்செந்தூரில் உள்ள விடுதிகள், மடங்கள் மற்றும் மண்டபங்களில் யாரும் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.