மகா சிவராத்திரி விழா: இன்று இரவு முழுவதும் சாமி தரிசனத்துக்கு ஏற்பாடுகள்
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சாமி தரிசனத்துக்கு அவ்வப்போது தடை விதிக்கப்பட்டு வந்தது. இதனால் சிவராத்திரி கொண்டாட்டங்களும் தடைபட்டு இருந்தன.
இந்தநிலையில் கொரோனா பரவல் முழுமையாக குறைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு மகா சிவராத்திரி கொண்டாட்டத்துக்கு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தமிழக அரசே ஏற்பாடு செய்துள்ளது.
மகா சிவராத்திரியையொட்டி தமிழகம் முழுவதும் இன்று சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டங்கள் இன்று களைகட்டி இருந்தன. சிவராத்திரியையொட்டி இன்று பகலிலும் பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து அனைத்து சிவன் கோவில்களிலும் இன்று இரவு சிறப்பு பூஜைகள் மற்றும் சாமிதரிசனத்துக்கு விடிய, விடிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல கோவில்களில் இன்று இரவு முழுவதும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. இதில் சிறுவர், சிறுமிகள் வேடமிட்டு பங்கேற்கிறார்கள். மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலில் இன்று சிவராத்திரி விழாவுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரவு முழுவதும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. 1-ம் கால அபிஷேகம் இரவு 10 மணிக்கு தொடங்குகிறது. அதன் பிறகு 2-ம் கால அபிஷேகம் 12 மணிக்கும், 3-ம் கால அபிஷேகம் நள்ளிரவு 1 மணிக்கும், 4-ம் கால அபிஷேகம் நாளை அதிகாலை 4 மணிக்கும் நடைபெறுகிறது. கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில், சென்னை மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும்.
இதனால் இன்று இரவு அதிகளவில் பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருவொற்றியூர் தியாக ராஜசுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு முதலில் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதன் பிறகு சகஸ்ர லிங்கம், நட்சத்திர லிங்கம், ஜம்பு லிங்கம், ஆகாசலிங்கம், அருணாசலேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், நந்தவ னேஸ்வரர் சுவாமிகளுக்கு இரவு 7.30 மணியளவில் அபிஷேகம் நடைபெற உள்ளது.
இரவு 8.30 மணிக்கு திருவொற்றீஸ்வரர் சுவாமிக்கு 1-ம் கால அபிஷேகம் நடக்கிறது. இரவு 11 மணிக்கு 2-ம் கால அபிஷேகமும், நள்ளிரவு 1 மணிக்கு 3-ம் கால அபிஷேகமும், நாளை அதிகாலை 3 மணிக்கு 4-ம் கால அபிஷேகமும் நடைபெறுகிறது.
திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரருக்கு இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை சங்காபிஷேகம் நடைபெறுகிறது.
சிவராத்திரியை முன்னிட்டு மங்கள வாத்தியம் இசைக்கப்படுகிறது. பள்ளி மாணவ- மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி, பக்தி பாடல்கள், திருமுறை பாராயணம் ஆகியவையும் பாடப்படுகிறது. இன்னிசை பக்தி பாடல்களும் திருவொற்றியூர் கோவிலில் இசைக்கப்பட உள்ளன.
புழல் விளாங்காடுபாக்கம் கிராமத்தில் உள்ள வேதபுரீஸ்வரர் -திரிபுர சுந்தரி உடனுறை ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று சமபந்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு முதல் கால பூஜையும், இரவு 9 மணிக்கு 2-ம் கால பூஜையும் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு 3-ம் கால பூஜை மற்றும் நாளை அதிகாலை 4.30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், கிராம மக்களும் செய்துள்ளனர்.
சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் இன்று இரவு 9 மணிக்கு முதல் கால பூஜை நடைபெறுகிறது. பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு 2-ம் கால பூஜையும், 2 மணிக்கு 3-ம் கால பூஜையும், நாளை அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள துண்டு பிரசுரங்களில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பக்தர்கள் அனைவரும் முககவசம் அணிந்து வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வடபழனி வேங்கீஸ்வரர் ஆலயத்திலும் சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் என்பதால் இன்று இரவு கோவில் நிர்வாகம் சார்பில் தரிசனத்துக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கும் 4 கால பூஜைகள் இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நடைபெறுகிறது.
கோயம்பேடு குருங்காலீஸ்வரர் கோவிலில் இன்று மாலை 6 மணி முதல் ஆன்மீக சொற்பொழிவு, பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதிகாலை 5 மணிவரை பூஜைகள் நடைபெறுகின்றன.
வளசரவாக்கம் சிவன் கோவிலிலும் மகா சிவராத்திரி பூஜைகளுடன் நாட்டிய நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
பாடி சிவன் கோவிலில் சிவராத்திரி பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது. இந்த கோவிலிலும் இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன.
இந்த கோவிலில் வழக்கமான நாட்களிலேயே கூட்டம் அதிகமாகக் காணப்படும். இன்று இரவு மகா சிவராத்திரியையொட்டி அளவுக்கதிகமாக பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில், பாரி முனையில் உள்ள மல்லீஸ்வரர் ஆலயத்திலும் சிவராத்திரி பூஜைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை மாதவரம் சிவன் கோவிலில் இன்று இரவு 10 மணிக்கு முதல் கால பூஜை நடைபெறுகிறது. இதன் பிறகு இரவு 12 மணிக்கும், நள்ளிரவு 2 மணிக்கும் அடுத்தடுத்து பூஜைகள் நடைபெறுகிறது. நாளை அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால பூஜை நடைபெறுகிறது.
பிரசித்தி பெற்ற திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் இன்று மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 4 கால பூஜையும், அபிஷேகமும் நடைபெறுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் இன்று இரவு அதற்கேற்ற வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று வேளச்சேரி தண்டீஸ்வரர் மற்றும் பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் ஆலயங்களிலும் மகாசிவராத்திரி பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மகாசிவராத்தியையொட்டி இன்று காலையிலேயே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இன்று இரவு அனைத்து சிவன் கோவில்களும் பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும். இதனை கருத்தில் கொண்டு அனைத்து சிவன் கோவில்கள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.