தமிழக சட்டப்பேரவை தேர்தல்: உதயநிதிக்கு வாய்ப்பு தருவது குறித்து ஸ்டாலின் முடிவெடுப்பார் – கே என் நேரு

0
546

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: உதயநிதிக்கு வாய்ப்பு தருவது குறித்து ஸ்டாலின் முடிவெடுப்பார் – கே என் நேரு

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரு கட்டமாக நடைபெறுகிறது. இதனையடுத்து தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. திராவிட கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. கட்சிகள் தரப்பில் தொண்டர்களிடம் இருந்து விருப்பமனுக்களும் பெறப்பட்டு வருகின்றன.

தி.மு.க இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு விருப்பமனு தாக்கல் செய்தார். எனவே அவர் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. சேப்பாக்கம் தொகுதி திமுகவுக்கு சாதகமாக இருப்பதால் அவர் அங்கு களமிறங்குவார் என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் மு.க.ஸ்டாலினை முதல்வர் ஆக்குவதுதான் என்னுடைய இலக்கு. எம்.எல்.ஏ ஆவது என்னுடைய இலக்கு அல்ல. தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை’ என்று உதயநிதி ஸ்டாலின் அவருக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்ததாக ஒரு தகவல் வெளியானது.

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது உதயநிதிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த நேரு இது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வேண்டியது என முடித்துக்கொண்டார்.