850 மெகாவாட் நீர் மின்சக்தி திட்டத்தில் ரூ 5281.94 கோடி முதலீடு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல்

0
283

850 மெகாவாட் நீர் மின்சக்தி திட்டத்தில் ரூ 5281.94 கோடி முதலீடு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல்

புதுதில்லி, ஜனவரி 20, 2021

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் செனாப் ஆற்றின் மீது 850 மெகாவாட் ‘ரேட்டல்’ நீர் மின்சக்தி திட்டத்தில் ரூ 5281.94 கோடி முதலீடு செய்வதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய நீர் மின் கழகம் மற்றும் ஜம்மு  காஷ்மீர் மாநில மின்சார மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாக முறையே 51% மற்றும் 49% பங்களிப்புடன் நிறுவப்பட இருக்கும் புதிய கூட்டு நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்திற்காக நிறுவப்படவுள்ள கூட்டு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு ரூ 776.44 கோடி நிதியுதவியை இந்திய அரசு வழங்கவுள்ளது. தனது சொந்த நிதியில் இருந்து ரூ 808.14 கோடியை தேசிய நீர் மின் கழகம் முதலீடு செய்யும்.

அறுபது மாதங்களுக்குள் நிறுவப்படவுள்ள இந்தத் திட்டத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், மின் தொகுப்பை சமன் செய்வதிலும், விநியோக நிலைமையை சீர்படுத்துவதிலும் உதவும்.

இந்த திட்டத்தின் கட்டுமான நடவடிக்கைகளின் மூலம் 4,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைத்து, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக அமையும்.

மேலும், நாற்பது வருடங்கள் திட்ட சுழற்சியின் போது, ரூ 5289 கோடி மதிப்பிலான இலவச மின்சாரமும், நீர் பயன்பாட்டு கட்டணமாக ரூ.9581 கோடியும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு கிடைக்கும்.