வட்டி விகிதத்தை குறைக்க தென்மாநில சிறு – குறு – நடுத்தர தொழில்  நிறுவன அமைப்புகள் கோரிக்கை!

வட்டி விகிதத்தை குறைக்க தென்மாநில சிறு – குறு – நடுத்தர தொழில்  நிறுவன அமைப்புகள் கோரிக்கை!

சென்னையில் 2018 பிப். 14 முதல் 15 வரை நடைபெற்ற
சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்புகளின் கூட்டம் வலியுறுத்தல் பொதுவான  கோரிக்கை மனு மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு

சென்னை, பிப்.15, சென்னையில் 2018 பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்ற தென் மாநிலங்களை சேர்ந்த சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவன அமைப்புகளின் கூட்டத்தில் வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக இந்த அமைப்புகள் சார்பில் மத்திய அரசுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது, இனி ரூ.5 கோடி முதல் விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களை குறு நிறுவனங்களாகவும் ரூ.5 கோடி முதல் ரூ.25 கோடி வரை விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களை சிறுதொழில் நிறுவனங்களாகவும் ரூ.25 கோடி முதல் ரூ.250கோடி வரை விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களை நடுத்தர தொழில்நிறுவனங்களாகவும் வகைப்படுத்த அரசுக்கு இந்த அமைப்புகள் கோரிக்கைவிடுத்துள்ளன. மேலும் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மானியத்தை அதிகரிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

சிறு,குறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் சப்ளை செய்த பொருட்களுக்கான பாக்கித்தொகையை விரைவாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்காமல் வங்கிகளின் வாராக்கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியாது, வாரக்கடன் விதிமுறைகளை 90 நாட்கள் என்பதற்கு பதில் 180 நாட்கள் என்று மாற்றியமைக்கப்படவேண்டும், வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை 8விழுக்காடாக குறைக்கவேண்டும். சிறு,குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய நிதியமைச்சகம் குறைக்கவேண்டும். வாங்கும் பொருட்களுக்கு குறித்த காலத்திற்குள் பணம் தரமறுக்கும் பொதுத்துறை மற்றும் அரசுத்துறை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நீதித்துறை அதிகாரம் கவுன்சில்களுக்கு வழங்கப்படவேண்டும்.

குறு.சிறு, தொழில்நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி திட்டம் ரூ.2கோடி வரை கட்டாயமாக்கப்பட வேண்டும், ரூ.2 கோடி வரை கடன் உத்தரவாதம் கேட்கக்கூடாது, இயந்திரங்களை வாங்க வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தும் காலத்தை 10 ஆண்டுகளாகவும் நிலம் மற்றும் கட்டிடங்களுக்கான கடன்களை திருப்பிசெலுத்தும் காலம் 15 ஆண்டுகளாகவும் மாற்றியமைக்கப்படவேண்டும். ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சிறப்பு வட்டி மானியம் வழங்கவேண்டும், ஆர்டர்கள் கொடுத்தால் அதை நிறுவனங்கள் செய்து முடிக்க குறித்த காலத்திற்குள் வங்கிகள் நிதி ஒதுக்கவேண்டும்.

விரைவாக கடன்கள் வழங்க வங்கிக்கிளைகள் தோறும் சிறு,குறு,நடுத்தர தொழில்நிறுவனங்களை கொண்ட கமிட்டிகள் அமைக்கப்படவேண்டும். நீதிமன்ற தலையீடு இல்லால் வாரக்கடன்களை வசூலிக்க வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கும் சர்பயிசி சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெறவேண்டும். ரூ.2கோடி வரை கடன் பெற்றுள்ள நிறுவனங்களுக்கு இந்த சட்டத்தில் இருந்து உடனடியாக விலக்கு அளிக்கவேண்டும். நலிவடைந்த சிறு,குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களை புணரமைக்க இதுவரை எந்த விதிமுறைகளும் இல்லை.

மேலும் நலிவடைந்த நிறுவனங்கள் கவுரவமாக தொழிலில் இருந்து வெளியேற வகை செய்யும் கொள்கை வகுக்கப்படவேண்டும். வேளாண் பொருட்களை அடிப்படையாக கொண்டு பருவ காலத்தில் மட்டும் செயல்படும் குறு.சிறு, தொழில்நிறுவனங்களுக்கு இஎஸ்ஐ, பிஎஃப் போன்றவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்படவேண்டும். குறு.சிறு, தொழில்நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பொதுத்துறை மற்றும் பாதுகாப்பு தளவாட ஆலைகள் 30 விழுக்காடு கொள்முதல் செய்யவேண்டும்.குறு.சிறு, தொழில்நிறுவனங்கள் தொகுப்பாக செயல்படும் போது அவற்றுக்கான ஆர்ட்களை கொள்முதல் செய்து தரும் முன்னோடி அமைப்பாக தேசிய சிறு தொழில்கவுன்சில் (என்.எஸ்.ஐ.சி) செயல்படவேண்டும். ரூ. 25 கோடி வரை விற்றுமுதல் கொண்ட சிறு,குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியை எளிதாக தாக்கல் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படவேண்டும். இயற்கை சீற்றங்களில் பாதிக்கப்படும் சிறு,குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு உதவி செய்ய தேசியபேரிடர் மேலாண்மை நிதியில் இந்நிறுவனங்களையும் சேர்க்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா), கர்நாடகா சிறு தொழில்கள் சங்கம் (கேஏ.எஸ்எஸ்ஐஏ), இந்திய சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சம்மேளனம் (எஃப்எஸ்எம்இ), தெலுங்கானா சிறு தொழில் நிறுவன அமைப்புகளின் சம்மேளனம் ( எஃப்.இ.டி.எஸ்.ஐ.ஏ) ஆந்திரபிரதேச சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் சம்மேளனம் (எஃப்ஏபிஎஸ்ஐஏ),கேரள மாநில சிறு தொழில்கள் சங்கங்கள் (கேஎஸ்எஸ்ஐஏ) உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் சென்னையில் வியாழனன்று (பிப். 15) செய்தியாளர்களிடம் இந்த தகவல்களை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *