கடந்த காலாண்டில் இந்தியன் வங்கியின் வருவாய் ரூ.4 ஆயிரத்து 903 கோடி

கடந்த காலாண்டில் இந்தியன் வங்கியின் வருவாய் ரூ.4 ஆயிரத்து 903 கோடி

சென்னை, பிப்.13- இந்தியன் வங்கியின் இயக்குனர் குழுமத்தின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 2017-18-ம் ஆண்டுக்கான 3-வது காலாண்டு (அக்டோபர் முதல் டிசம்பர்) மற்றும் 9 மாதம் வரையிலான (ஏப்ரல் முதல் டிசம்பர்) இந்தியன் வங்கியின் நிதிநிலை அறிக்கை மற்றும் லாப-நஷ்ட கணக்கு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பின்னர் இதுதொடர்பாக இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர் கிஷோர் காரத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வங்கியின் மொத்த வருவாய் கடந்த டிசம்பர் 31-ந்தேதி அன்றுடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.4 ஆயிரத்து 903.08 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.4 ஆயிரத்து 557.26 கோடியாக இருந்தது. 9 மாத காலத்தில் மொத்த வருவாய் ரூ.14 ஆயிரத்து 565.29 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.13 ஆயிரத்து 649.24 கோடியாக இருந்தது.

வங்கியின் இயக்க லாபம் காலாண்டில் 18.42 சதவீதம் அதிகரித்து ரூ.1,209.22 கோடியாக உள்ளது. 9 மாத காலத்தில் 30.94 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ.3 ஆயிரத்து 837.23 கோடியாக அதிகரித்துள்ளது.

மூலதனங்கள் மீதான சந்தை மதிப்பு சரிவு, பத்திர வருவாய் மற்றும் இதர ஒதுக்கீடுகள் காரணமாக நிகர லாபம் கடந்த காலாண்டை விட ரூ.70.41 கோடி குறைந்துள்ளது. இந்த காலாண்டு நிகர லாபம் ரூ.303.06 கோடி ஆகும்.

9 மாத காலத்தை ஒப்பீடும் போது நிகர லாபம் 3.78 சதவீதம் உயர்ந்து, ரூ.1,127.01 கோடியாக உள்ளது. வங்கியின் கடன்கள் ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 120 கோடியாக இருக்கிறது. இதில் வீட்டு வசதி கடன்-23.12 சதவீதம், வாகன கடன்-28.96 சதவீதம், விவசாய கடன்-21.48 சதவீதம், சிறுகுறுந்தொழில் கடன் -38.35 சதவீதம், கார்ப்பரேட் கடன்-13.97 சதவீதம் என கடன்கள் அடங்கும்.

‘டிஜிட்டல்’ பண பரிவர்த்தனையில் மத்திய அரசு நிர்ணயித்த இலக்கை எட்டி பொதுத்துறை வங்கிகளில் இந்தியன் வங்கி முதலிடத்தை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது நிர்வாக இயக்குனர்கள் எம்.கே.பத்தசார்யா, ஏ.எஸ்.ராஜூவ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *