கலகலப்பு-2 சினிமா விமர்சனம்

கலகலப்பு-2 சினிமா விமர்சனம்

அவ்னி மூவி மேக்கர்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரித்திருக்கும் கலகலப்பு-2 படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுந்தர்.சி.

இதில் ஜீவா, ஜெய், மிர்சி சிவா, கேத்ரின் தெரிசா, நிக்கி கல்ராணி, ராதாரவி, விடிவி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர்,முனீஷ்காந்த், சதீஷ்,மனோபாலா, சிங்கமுத்து, சிங்கம் புலி, வையாபுரி, சந்தானபாரதி, அனுமோகன், காஜல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-திரைக்கதை-வேங்கட்ராகவன், ஒளிப்பதிவாளர்-யு.கே. செந்தில்குமார், வசனம்-பத்ரி, இசை-ஹிப்ஹாப் தமிழா, பாடல்-மோகன்ராஜ், படத்தொகுப்பு-ஸ்ரீகாந்த், கலை பொன்ராஜ், சண்டை-திணேஷ், நடனம்-ஷோபி, பிருந்தா, ஒப்பனை-செல்லத்துரை, ஆடை-ராஜேந்திரன், பாலு, ஸ்டில்ஸ்-வி.ராஜன், தயாரிப்பு மேற்பார்வை-பால கோபி, நிர்வாக தயாரிப்பு-ஏ.அன்பு ராஜா, மக்கள் தொடர்பு-ரியாஸ் அஹமது.

அமைச்சர் மதுசூதன ராவின் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற முக்கியமான தகவல்கள் அடங்கிய லேப்டாப்பை ஆடிட்டர் முனீஸ்காந்திடம் கொடுக்க அங்கிருந்து காசிக்கு தப்பித்து செல்கிறார். பின்னர் காசியிலிருந்து முனீஸ்காந்த் 5 கோடி பணம் கொடுத்தால் தான் லேப்டாப்பை ஒப்படைப்பேன் என்று ;அமைச்சரை மிரட்டுகிறார். இதனால் அமைச்சர் இன்ஸ்பெக்டர் ராதாரவியை பணத்தை மீட்க காசிக்கு அனுப்புகிறார். காசியில் முனீஸ்காந்தை தேடி இன்ஸ்பெக்டர் ராதாரவி அலைந்து கொண்டிருக்கிறார். முனீஸ்காந்த் இவரிடமிருந்து தப்பித்து செல்ல, அமைச்சரே அடியாட்களுடன் காசிக்கு விரைகிறார்.

தன் குடும்ப கஷ்டத்தில் தவிக்கும் ஜெய்க்கு சாமியாராகும் அவரது தந்தை பூர்வீக சொத்து காசியில் இருப்பதாகவும் அதை லீசுக்கு எடுத்த நபரிடம் சென்று மீட்டுக்கொள்ளுமாறு தகவல் தருகிறார். இதனால் ஜெய் காசிக்கு பயணமாகி தன் குடும்ப சொத்தின் விபரங்களை சேகரிக்க தாசில்தார் ஆபிசுக்கு செல்ல, அங்கே நிக்கி கல்ராணியுடன் கண்டதும் காதல் கொள்கிறார்.

காசியில் மேன்ஷன் நடத்தும் ஜீவாவிற்கு தன் தங்கை திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார். அந்த சமயத்தில் சதீஷ் தன் தங்கை கேத்ரின் தெரிசாவுடன் பெண் பார்க்க வர, ஜீவாவிற்கு கேத்ரின் தெரிசாவுடன் காதல் மலர்கிறது. இதனால் தன் தங்கைக்கு சதீஷை திருமணம் செய்து வைத்து விட ஜீவா முயல்கிறார்.
இதனிடையே ஜெய் பூர்வீக சொத்து ஜீவா வைத்திருக்கும் மேன்ஷன் தான் என்பதையறிந்து ஜீவாவுடன் சமரம் பேசிக்கொள்கிறார். ஜீவாவையும், ஜெய்யையும் ஏமாற்றி பணத்தை அபேஸ் செய்த மிர்சி சிவாவை தேடிச் காரைக்குடிக்கு வருகின்றனர்.

காரைக்குடியில் நிக்கிகல்ராணியை மிர்சி சிவாவிற்கு கட்டிக் கொடுக்க அவரின் தந்தை விடிவி கணேஷ் முடிவு செய்கிறார். இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி மிர்சி சிவாவிடமிருந்து பணத்தை ஜீவாவும், ஜெய்யும் மீட்டார்களா? அமைச்சருக்கு காணாமல் போன லேப்டாப் கிடைத்ததா? இரண்டு ஜோடி காதலர்கள் இணைந்தார்களா? என்பதே பல கிளைக்கதைகள் இணைந்து கலகலப்பூட்டும் க்ளைமேக்ஸ்.

ஜீவா ஜோவியலாக பேசி கஸ்டமர்களை ஏமாற்றி தங்க வைப்பதில் கில்லாடியாகவும், தங்கையின் திருமணம் நடந்தால் தான் தன் காதல் ஜெயிக்கும் என்று போடும் திட்டங்களும் சரி, பணத்தை மீட்க சண்டை, துரத்தல் என்று இளமை துள்ளலோடு செய்திருக்கிறார். கேத்ரின் தெரிசாவும் தன் பங்கிற்கு கிளாமரில் துள்ளம் ஆட்டம் போட்டிருக்கிறார்.

ஜெய் காமெடி கதாபாத்திரத்தை ஈடு செய்ய முடிற்சித்திருக்கிறார். அவரின் ஜோடியாக வரும் நிக்கி கல்ராணி அழகு பதுமையாக கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார்.

மிர்ச்சி சிவா பாதி படத்திற்கு மேல் தான் என்ட்ரி கொடுத்தாலும் அதைமனதில் பதியும்படி நகைச்சுவை களமாக மாற்றி விடுகிறார்.

ராதாரவி, மதுசூதனன் ராவ், முனீஷ்காந்த், விடிவிகணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம்புலி, சிங்கமுத்து, வையாபுரி, சந்தான பாரதி, அனுமோகன், ஜார்ஜ்,காஜல் என்று ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளம் பட்டையை கிளப்பினாலும் காமெடியன்களுக்கு பஞ்சம் வைக்காமல் சில சீரியஸ் ரோல் நடிக்கும் வில்லன்களையும் காமெடியன்களாக இறுதியில் மாற்றி விடுகின்றனர்.

யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு கலர்ஃபுல் காம்பினேஷனில் காசியையும், கரைக்குடியையும் காக்டெயிலாக மாற்றி விடுகிறார்.

ஹிப்ஹாப் தமிழாவின் இசையில் பாடல்கள் துள்ளல் ஆட்டம் போட்டாலும் சில இடங்களில் கதைக்கு தடைக்கற்களாக இருப்பது உணர முடிகிறது.

வேங்கட்ரகாவனின் குழப்பிமில்லாத திரைக்கதையும், பத்ரியின் பஞ்ச் வசனத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை.

எழுத்து,இயக்கம்-சுந்தர்.சி. இவரின் படங்கள் எப்பொழுதுமே பொழுது போக்கு, காமெடிக்கு உத்தரவாதம். இதில் வித்தியாசம் என்னவென்றால் முதல் பாதியில் காசிக்கு கதைக்களம் பயணிக்க மீதி காரைக்குடியி;லும், ரெயில்வே ஸ்டேஷனில் முடிகிறது. காதல், அரசியல்வாதி, பண மோசடி இதைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள், துரத்தல் சண்டைக்காட்சிகள் சாமியார்களை கலாப்பது என்று காமெடி கலந்து சுந்தர்.சி சிறப்பாக இயக்கியிருந்தாலும் சில இடங்களில் கத்திரி போட்டிருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பை கூட்டியிருக்கும்.

மொத்தத்தில் அனைவரும் பார்க்க தூண்டும் காமெடிக்கு உத்தரவாதம் இந்த கலகலப்பு-2

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *