தமிழ்ப்பேராயம் விருது வழங்கும் விழா: ஆர்வேர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.16 இலட்சம் பாரிவேந்தர் வழங்கினார்

தமிழ்ப்பேராயம் விருது வழங்கும் விழா: ஆர்வேர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.16 இலட்சம் பாரிவேந்தர் வழங்கினார்

தமிழகத்தின் பிற பல்கலைக்கழகங்களில் இல்லாத அமைப்பாகத் தமிழ்ப்பேராயம் என்ற அமைப்பு கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் செயல்பட்டுவருகிறது. ஐந்தாம் தமிழ்ச்சங்கம் என்று சொல்லப்படும் அளவிற்குத் தமிழ்வளர்ச்சிக்கான பல்வேறு பணிகளை ஆற்றிவரும் தமிழ்ப்பேராயம் ஆண்டுதோறும் 12 தலைப்புகளில் ரூ. 22-இலட்சம் பெறுமான விருதுகளை வழங்கிவருகிறது.

அதன்படி, 2017ஆம் ஆண்டிற்கான தமிழ்ப்பேராயம் விருது வழங்கும் விழா, இன்று (31.01.2018) இந்நிறுவனத்தின் காட்டாங்குளத்தூர் வளாகத்தில் நடைபெற்றது. 

SRM பல்கலைக்கழக நிறுவனர் வேந்தர் டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் விழாவிற்குத் தலைமையேற்று விருதாளர்களுக்கும் பதிப்பகத்தாருக்கும் விருதுகளை வழங்கினார்.

தமிழ்ப் படைப்பாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள், ஆகியோருக்கும் தமிழ்ப்பணியாற்றும் சங்கங்கள், தரமான இதழ்கள் ஆகியவற்றிற்கும் விருதுகளை வழங்கியதுடன் தமிழ்மொழிக்காகப் பல்வேறு நிலைகளில் பணியாற்றி உலக அளவில் புகழ்பெற்ற இரண்டு தமிழறிஞர்களுக்குப் பாரிவேந்தர் பைந்தமிழ் விருதும் பரிதிமாற் கலைஞர் விருதும்  இவ்விழாவில் வழங்கப்பட்டது.

2017ஆம் ஆண்டிற்கான தமிழ்ப்பேராயம் விருது பெற்றவர்கள் விவரம்:

வாழ்நாள் சாதனையாளருக்கான பாரிவேந்தர் பைந்தமிழ் விருது சோ.ந.கந்தசாமிக்கும், சிறந்த தமிழறிஞருக்கான பரிதிமாற் கலைஞர் விருது கா.செல்லப்பனுக்கும் வழங்கப்பட்டது. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது மு.ராஜேந்திரனுக்கும் (வடகரை), பாரதியார் கவிதை விருது ப.முத்துசாமிக்கும் (மலையினும் மானப் பெரிது), அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது உதயசங்கருக்கும் (பச்சை நிழல்), ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருது டி.என். ராமச்சந்திரனுக்கும் (The poetical works), பெ.நா.அப்புசாமி அறிவியல் தமிழ் விருது ப.மு.நடராசனுக்கும் (நீர் மேலாண்மை) வழங்கப்பட்டது.

ஆனந்த குமாரசாமி கவிக்கலை விருது மற்றும் முத்துத்தாண்டவர் தமிழிசை விருது பெ.சுப்பிரமணியனுக்கும் (கொங்கு நாட்டுப்புற இசைக் கருவிகள்), விபுலானந்தர் படைப்பிலக்கிய விருது அகளங்கனுக்கும் (முற்றத்துக் கரடி), ஆ.பெ.ஜெ.அப்துல்கலாம் இளம் ஆய்வறிஞர் விருது ப.திருஞானசம்பந்தத்துக்கும் (பதினெண் கீழ்க்கணக்கின் யாப்பமைதி), சுதேசமித்ரன் தமிழ் இதழ் விருது தமிழ் லெமூரியா இதழுக்கும் வழங்கப்பட்டது.

மேலும், தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருதுகள் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் (தமிழகம்), பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் (அயல் மாநிலம்), தைவான் தமிழ்ச் சங்கம் (அயல் நாடு) ஆகிய தமிழ் சங்கங்களுக்கு வழங்கப்பட்டது.

இவ்வாண்டு இவ்விழாவிற்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் அமெரிக்காவில் உள்ள ஆர்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய உதவும்வண்ணம்  ரூ.16 – இலட்சம் நிதி உதவியை நிறுவனர் வேந்தர் அவர்கள் சார்பிலும் தமிழ்ப்பேராயத்தின் கீழ் செயல்பட்டுவரும் பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றத்தின் சார்பிலும் விழாவில் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் க. பாண்டியராஜன் அந்நிதியைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். சென்னை உயர்நீதி மன்றத்தின் மேனாள் நீதியரசர் கே.என். பாஷா விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பாரிவேந்தரின் தமிழ்ப்பணிகளைப் பாராட்டியதோடு விருது பெற்றவர்களையும் வாழ்த்திப் பேசினார். ஆர்வேர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்புக் குழு உறுப்பினர் திரு. ஆறுமுகம் நிதிவழங்கிய வேந்தர், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோரை வெகுவாகப் பாராட்டினார். விழாவிற்குத் தலைமையேற்ற நிறுவனர் வேந்தர் பாரிவேந்தர் தமிழ்ப்பேராயம் தகுதியின் அடிப்படையில் நடுநிலையோடு விருதுகளை வழங்கிவருவதாகக் குறிப்பிட்டுப் பேசியதுடன் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

தமிழ்ப்பேராயத் தலைவர் தி.பொ. கணேசன், பதிவாளர் நா. சேதுராமன், தேர்வாணையர் எஸ். பொன்னுச்சாமி மற்றும் அனைத்துப் புலங்களின் இயக்குநர்கள், புலத்தலைவர்கள், துறைத்தலைவர்கள் ஆகியோருடன் பெருமளவிளான மாணவர்கள், தமிழறிஞர்கள் விழாவில் பங்கேற்றனர். முன்னதாகப் பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்ற மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ALSO READ:

Rs. 16 lakhs donated to Harvard Tamil Chair by Paarivendhar at the SRM Tamilperayam Award Funtion – 2017

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *