ஸ்கெட்ச் சினிமா விமர்சனம்: பொங்கல் ரேசில் ஸ்கெட்ச் போட்டு தூக்கினது வண்டியை அல்ல விக்ரமை

ஸ்கெட்ச் சினிமா விமர்சனம்

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் வழங்க மூவிங் பிரேம் தயாரிப்பில், விஜய் சந்தர் கதை, திரைக்கதை, வசனம் இயக்கத்தில் வெளி வந்திருக்கிறது ஸ்கெட்ச்.

விக்ரம், தமன்னா, சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், கபாலி விஷ்வாந்த், பி.எல்.தேனப்பன், பாபுராஜா, வினோத், வேல ராமமூர்த்தி, பிரியங்கா, மதுமிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை-எஸ்.எஸ். தமன், ஒளிப்பதிவு- சுகுமார், பாடல்கள் -கபிலன், விவேக், விஜய்சந்தர்,கலை -மாயா பாண்டியன், எடிட்டிங்-ரூபன், நடனம்-பிருந்தா, தஸ்தாகீர், ஸ்டன்ட்- சுப்ரீம் சுந்தர், ரவிவர்மன், தயாரிப்பு நிர்வாகம்-ஏ.ராமச்சந்திரன், பிஆர்ஒ – மௌனம் ரவி.

வடசென்னையில் சேட்டிடம் வாகனங்களை கடனுக்கு வாங்கி பாக்கி கட்டாதவர்களின் வண்டிகளை ஸ்கெட்ச் போட்டு தூக்கி வருவதில் விக்ரமும் மூன்று நண்பர்களும் கில்லாடிகள். எந்த வண்டியாக இருந்தாலும் விக்ரமிடம் வேலையை ஒப்படைத்தால் காரியம் கச்சிதமாக முடியும் என்ற பெயரோடு வலம் வருகிறார். இந்த சமயத்தில் நீண்ட நாளைய ஆசையான ரௌடி குமாரின் வண்டியை தூக்க விக்ரமை சாமர்த்தியமாக பேசி சேட் அனுப்புகிறார். விக்ரமும் முதலாளி சேட்டின் ஆசையை நிறைவேற்ற தங்கச்சங்கிலி பரிசும் கிடைக்கிறது. இதனால் ரௌடி குமாரின் பகையை சம்பாதித்துக் கொள்ளுகிறார் விக்ரம். இதனிடையே விக்ரமின் நண்பர்கள் மூன்று பேர் ஒன்றன் பின் ஒன்றாக கொலை செய்யப்படுகின்றனர். இதை செய்தது ரௌடி குமார் என்று கண்டுபிடிக்கிறார் விக்ரம். ரௌடி குமாரை ஸ்கேட்ச் போட்டு தூக்க நினைக்கும் விக்ரமை விட போலீஸ் அதிதீவிரமாக இருக்கிறது. விக்ரம் இதில் ஜெயித்தாரா? விக்ரமிற்கே தெரியாத மறைமுக எதிரிகளால் பழி தீர்க்கப்பட்டாரா? என்பதே மீதிக்கதை.

விக்ரம் ஸ்கெட்ச் என்ற கதாபாத்திரத்தில் ஏற்கனவே பார்த்த அடிதடி ஆக்ஷன் களத்தில் இறங்கினாலும், பழைய வெற்றியும், உற்சாகமும் காணாமல் போய் கொண்டிருக்கிறது.

தமன்னா பாடல்களுக்கு மட்டுமே என்பதால் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
சூரி ஒரு சில காட்சிகள் வந்தாலும் படத்திற்கு தேவையே இல்லாதது.

ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், கபாலி விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேல ராமமூர்த்தி, பிரியங்கா, மதுமிதா மற்றும் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் எண்ணிக்கையில் கூடுதலாக இருந்தும் பயன் ஒன்றும் இல்லை.

எஸ்.எஸ்.தமனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

சுகுமாரின் ஒளிப்பதிவில் அதிரடி சண்டை காட்சிகளும், சேசிங் காட்கிகளும் அசத்தல் ரகம்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்-விஜய் சந்தர். பார்த்து சலித்து போன தாதா கதையை மீண்டும் கையிலெடுத்து அதில் க்ளைமேக்சில் மட்டும் கூட இருந்தே குழி பறிக்கும் மெசேஜை திணித்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. அடிதடி ஆக்ஷன் கலந்த மசாலா கதையை வைத்து ரசிகர்கள் தலையில் மிளகாய் அரைத்து விட்டார் இயக்குனர் விஜய் சந்தர்.

மொத்தத்தில் கலைப்புலி எஸ்.தாணு வி கிரியேஷன்ஸ் வழங்க மூவிங் பிரேம் சேர்ந்து பொங்கல் ரேசில் ஸ்கெட்ச் போட்டு தூக்கினது வண்டியை அல்ல விக்ரமை.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *