இந்த ஆண்டு இறுதிக்குள் முழு அளவில் மெட்ரோ ரெயில்

இந்த ஆண்டு இறுதிக்குள் முழு அளவில் மெட்ரோ ரெயில்

சென்னை, ஜன. 9–
இந்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரெயில் திட்டத்தில் மீதியுள்ள பகுதியும் பயன்பாட்டிற்கு வரும் என்று தமிழக சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் கவர்னர் தனது உரையில் கூறியதாவது:–
சென்னைப் பெருநகர மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உருவெடுத்துள்ள சென்னை மெட்ரோ ரெயில் திட்டம், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதற்கட்டத்தில் மீதமுள்ள சுரங்க வழித்தடங்களும் 2018–ம் ஆண்டின் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும். வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர்–விம்கோ நகர் வரையிலான 9 கிலோ மீட்டர் நீளத்திற்கான முதற்கட்டத்தின் விரிவாக்கப் பணிகளும் விரைவாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் மேலும் மூன்று மெட்ரோ ரெயில் வழித்தடங்களை 107.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஏற்படுத்துவதற்காக, 79,962 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்திற்கு அயல்நாட்டு முகமையின் நிதியுதவியைப் பெறுவதற்காக மாநில அரசு அனுமதி வழங்கி மத்திய அரசிற்குப் பரிந்துரை செய்துள்ளதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயிலின் இரண்டாம் கட்ட திட்டப் பணிகளுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கவேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கவர்னர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *