ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி: நடிகர் விஷால் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி: நடிகர் விஷால் அறிவிப்பு

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

கடந்த மாதம் 27-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்றைய தினம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் சுயேச்சைகள் மட்டுமே மனுதாக்கல் செய்தனர்.

நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மனுதாக்கல் செய்தனர்.

காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. தே.மு.தி.க., பா.ம.க. கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் ஜெ.தீபா வருகிற 4-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நடிகர் விஷாலை வேட்பாளராக நிறுத்த முக்கிய அரசியல் கட்சி முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், விஷால் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காமல் சுயேச்சையாகவே தேர்தலில் களமிறங்கப் போவதாக கூறப்படுகிறது.

நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன் ஆகியோர் ஏற்கனவே நேரடி அரசியலில் களமிறங்கி இருக்கும் நிலையில், அடுத்ததாக விஷாலின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே நடிகர் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கும் விஷால், அரசியலில் வெற்றி பெற்று சாதனை படைக்கிறாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Please follow and like us: