தமிழகத்தில் ஊரடங்கு படிப்படியாக தளர்வு: மருத்துவ குழு பரிந்துரை

தமிழகத்தில் ஊரடங்கு படிப்படியாக தளர்வு: மருத்துவ குழு பரிந்துரை

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை மத்திய உள்துறை அமைச்சகம் சில தளர்வுகளுடன் நீட்டித்தது. மேலும் தளர்வுகள் குறித்த முடிவை அந்தந்த மாநில அரசுகளே எடுக்கலாம் எனவும் கூறியிருந்தது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் அத்தியாவசிய கடைகளை தவிர்த்தும் சில கடைகள் திறக்கப்பட்டன. இதில் பெரும்பாலான பகுதிகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை எனவும் புகார்கள் எழுந்தன. இதனிடையே மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, பொது ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் இது குறித்த அறிவிப்பு மே 18-க்கு முன்னர் அறிவிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

தமிழகத்தை பொருத்தவரை பெரும்பாலான தளர்வுகள் அமலுக்கு வந்த நிலையில், அடுத்ததாக மக்களுக்கான போக்குவரத்து, மால்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் முதல்வரிடம் ஆலோசனை நடத்திய மருத்துவர் குழு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து கவலைப்பட வேண்டாம்; அதிகளவில் பரிசோதனை செய்வதால்தான் அதிக பாதிப்புகளை கண்டறிய முடிகிறது. பணியிடங்களில் தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தமிழகத்தை பொருத்தவரை பொது முடக்கத்தை படிப்படியாகத்தான் தளர்த்த வேண்டும் என  முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளோம் என்றனர்.

Please follow and like us: