ராம நவமி அன்று, அயோத்தி மாநகரில் தேர் ஓட, தமிழகத்திலிருந்து நகரத்தார்கள் ஏற்பாடு!

ராம நவமி அன்று, அயோத்தி மாநகரில் தேர் ஓட, தமிழகத்திலிருந்து நகரத்தார்கள் ஏற்பாடு!

  • ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திரம் மேலாண்மைக் கழகம் சார்பில், ரூ. 40 லட்சம் செலவில் மரத்தேரை வடிவமைத்து அனுப்பி வைத்தனர்!

  • 1882 முதல் 1942 வரையிலான 60 ஆண்டுகள் அயோத்தியில் நகரத்தார்களால் நடத்தப்பட்ட தேர்த் திருவிழா, மீண்டும் இந்தாண்டு விமரிசையாகத் தொடர்கிறது!

சென்னை, 19 மார்ச் 2020

நகரத்தார்களால் ஒருங்கிணைந்து நடத்தப்படும் அமைப்பான – ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திரம் மேலாண்மைக் கழகம், ராம நவமி தினமான வரும் ஏப்ரல் 2-ஆம் தேதியன்று, அயோத்தி மாநகர் வீதிகளில் தேர் உலா வர ஏற்பாடு  செய்துள்ளது.

ரூ. 40 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மரத்தேர் 18.5 அடி உயரமும், 9 அடி அகலமும் கொண்டது. 8 பட்டைகளும், 8 தூண்களும் உடைய இந்த ரதத்தில் 210 சுவாமி பொம்மைகள் செதுக்கப்பட்டுள்ளன. காரைக்குடியைச் சேர்ந்த – தமிழக அரசு விருது பெற்ற ஸ்தபதி திரு. ஏஆர்.கே. ஏகாம்பர ஆசாரியின் தலைமையிலான குழு, 66 நாட்களில் இந்த ரதத்தினை உருவாக்கி சாதனை படைத்துள்ளது .

ரதத்தின் சிற்பங்கள் கோயிலில் உள்ள அமைப்பையே உடையன என்பது சுட்டிக் காட்டத்தக்கது. திருமாலின் பத்து அவதாரங்களும், அனுமனின் அழகிய தோற்றமும், கண்ணனின் அழகும், இராமாயானக் காட்சிகளும் கண்கொள்ளாக் கலை வண்ணத்துடன் அமைந்து ரதத்திற்கு அழகு சேர்த்துள்ளன.

1882-ஆம் ஆண்டு முதல், 1942-ஆம் ஆண்டு வரையிலான 60 ஆண்டுகள், அயோத்தியில் ராம நவமி அன்று திருவிழாவை நடத்தி தேர் இழுத்திருக்கிறார்கள் நகரத்தார் சமூகத்தினர். இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து இந்த விழா நிறுத்தப்பட்டது. அந்த ரதம் பழுதடைந்துவிட்டதால், தற்போது 77 ஆண்டுகள் கழித்து புதிய ரதத்தினை உருவாக்கி அயோத்தி மாநகரத்தில் தேர்த் திருவிழாவினைக் கொண்டாட இருக்கிறது, ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை  நகரச்சத்திரம்  மேலாண்மைக் கழகம்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்த அமைப்பின் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான திரு. பழ ராமசாமி, “நகரத்தார்கள் நேர்மைக்கும், நாணயத்துக்கும், ஒழுக்க நெறிகளுக்கும் பெயர் பெற்றவர்கள். ஆன்மிகப் பணிகளையும், அறப் பணிகளையும் அதிகளவில் மேற்கொண்டவர்கள்; சைவ நெறியைப் பரப்பியவர்கள்; தமிழுணர்வு மிக்கவர்கள். இவர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பொது அமைப்பிலிருந்து இப்பணியை மேற்கொண்டுள்ளோம்.

தேவகோட்டையைச் சேர்ந்த சத்திரத்தார் குடும்பத்தினர் தனிப்பட்ட முறையில் நடத்தி வந்த இந்த விழாவை தற்போது எங்கள் அமைப்பு கையில் எடுத்து அதற்கு புத்துயிர் கொடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.

அயோத்தியில் ஏப்ரல் 1, 2 ஆகிய தேதிகளில் ராம நவமி திருவிழாவினை பிரமாண்டமான முறையில் இந்த அமைப்பு கொண்டாடவுள்ளது. இதில் நீதியரசர் டாக்டர் மெ. சொக்கலிங்கம், கமலா திரையரங்க இயக்குனர் திரு. வி.என்.சிடி. வள்ளியப்பன், கல்வியாளர் திரு. குழ கருப்பையா உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொள்கின்றனர்.

நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 96 ஊர்களைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இதில் பெரிய ஊர்களான காரைக்குடி, தேவகோட்டை ஆகியவையும் அடங்கும்.

ஏறக்குறைய 1.5 லட்சம் மக்கள் தொகை உள்ள இந்த சமூகத்தினர், தமிழகத்தில் 140 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட கோயில்களை கட்டியுள்ளனர். அதுமட்டுமன்றி மியான்மர், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கோயில்களை இவர்கள் நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chariot from Tamil Nadu for Rama Navami Celebrations at Ayodhya

Please follow and like us: