சிம்ஸ் மருத்துவமனையில், டான்ஸானியா நாட்டைச் சேர்ந்த 38 வயது நோயாளிக்கு வெற்றிகரமாக நடந்த அரிய சிகிச்சை!

சிம்ஸ் மருத்துவமனையில், டான்ஸானியா நாட்டைச் சேர்ந்த 38 வயது நோயாளிக்கு வெற்றிகரமாக நடந்த அரிய சிகிச்சை!

  • வாயில் சிறுகட்டியாகத் தோன்றி, வளர்ந்து முகத்தோற்றத்தை உருமாற்றிய அமெலோபிளாஸ்டோமா நோய் பாதிப்புக்குச் சிகிச்சை!
  • 14 ஆண்டுகளாகத் தொடர்ந்த முகம் மற்றும் மனவலிக்கு, 14 நாட்களில் முழுமையான தீர்வை வழங்கியது, சிம்ஸ் மருத்துமனை!

சென்னையின் தனிச்சிறப்பு மிக்க மருத்துவமனைகளில் ஒன்றாகவும், பல அரிதான நோய்களுக்கு நவீன சிசிச்சை முறைகளை மேற்கொண்டுவரும் தமிழக மருத்துவமனைகளில் ஒன்றாகவும் சிம்ஸ் மருத்துவமனை (SIMS Hospital – SRM Institutes for Medical Science) விளங்கி வருகிறது. இங்கே அண்மையில்,  அமெலோபிளாஸ்டோமா  (Ameloblastoma) என்ற நோய் பாதிப்புக்கு உள்ளான, டான்ஸானியா (Tanzania) நாட்டைச் சேர்ந்த 38 வயதுள்ள நோயாளி ஒருவருக்கு, முழுமையான சிசிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆண்டுகளாக முகத்தசைகளில் வலி, வாயசைத்தால் வலி, தெளிவாகப் பேசவும், உணவு உண்ணவும் போராட்டம்…. என்பதையெல்லாம் தாண்டி – முகத்தை மறைக்காமல் வெளியில் தலைகாட்ட முடியவில்லையே என்ற மன இறுக்கத்தையும் அந்த நோயாளி அனுபவித்து வந்தார். அவரது கீழ் தாடையில் இருந்த சுமார் 1 கிலோ எடை கொண்ட கட்டியை நீக்கி, அதனால் ஏற்பட்ட பிற பாதிப்புகளையும் தீர்த்து, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால், இன்று அவர் மகிழ்ச்சியும், மனநிறைவும் பெற்ற மனிதராகியிருக்கிறார். அவரது நாட்டில், இந்த நோயைச் சரியாகக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சை அளிக்க வாய்ப்புகள் இல்லாததால், மேற்கண்ட சொல்லொண்ணா சிரமங்களை அவர் அனுபவிக்க நேர்ந்தது. இந்நோயின் பாதிப்பால், அவரது தாடையில் வீக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. எனவே அந்நாட்டு அரசு, இதற்கான முழுமையான ஆய்வுகளைச் செய்து சிகிச்சை அளித்து சீராக்கும்படி, அந்த நோயாளியை சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.

டான்ஸானிய நோயாளியின் மருத்துவ நிலை, அதற்கு தேவைப்பட்ட சோதனை முறைகள், அளிக்கப்பட்ட சிகிச்சை போன்றவை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிம்ஸ் மருத்துவமனையின் மண்டை ஓடு, முக எலும்பு மற்றும் தசை சீரமைப்பு அறுவை சிசிச்சை (Craniofacial, Aesthetic and Plastic Surgery) பிரிவின் தலைமை மருத்துவர் கே. ஸ்ரீதர், “எங்களது முதல்கட்ட ஆய்வில் டான்ஸானிய நோயாளிக்கு வாயில் ஒரு பந்து அளவுக்கான பெரிய கட்டி இருப்பதால் ஏற்பட்டுள்ள வீக்கம், அதனால் அவரது முகத் தோற்றம் மாறியிருப்பது மற்றும் அதையொட்டி கடுமையான வலியிருப்பதைத் தெரிந்து கொண்டோம். அடுத்த கட்டப் பரிசோதனைகளில், அந்தக் கட்டி, அமெலோபிளாஸ்டோமா என்ற நோய் என்பதையும், அந்தக் கட்டியின் அளவு பெரிதாக இருப்பதால், சிக்கலான அறுவை சிசிச்சை மூலம்தான் அதை நீக்க வேண்டும் என்பதோடு, அதனால் பாதிப்புக்கு உள்ளான முக வடிவத்தையும், அதற்கான எலும்புகளையும் வெட்டி…, ஒட்டி சீரமைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதை உணர்ந்து கொண்டோம். மேலும், இந்தப் பணிகளைச் செய்யும்போது, கூடவே அவரது இயல்பான முக வடிவம் மீள்வதை உறுதி செய்வதோடு, அவரது குரல், உணவுப் பாதை போன்ற எதிலும் பாதிப்பு ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்ள பல்வேறு கணக்குகளும் அவசியமானது.

அந்த வகையில், அவரது கீழ்தாடையை முற்றிலுமாக சீரமைக்க வலது மற்றும் இடது புற தாடை எலும்புகளில் திருத்தங்கள் தேவைப்பட்டன. எனவே அதை 4 துண்டுகளாக சித்திரித்து வடிவமைக்க, கம்ப்யூட்டரில் அவ்வடிவத்தை உருவாக்கி செயல்பாட்டைச் சோதிக்க வேண்டிவந்தது. அதன் இறுதியில்தான் இயல்பான மனித முகவடிவத்தை உருவாக்க முடிந்தது.

இந்தப் பணிகளில் தசை மற்றும் எலும்பு சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள், முக வடிவமைப்பு சிகிச்சை நிபுணர்கள், செயற்கை பற்களைப் பொருத்தும் நிபுணர்கள், கணினி மூலமான வடிவமைப்பு பணியில் தேர்ச்சி பெற்ற நிபுணர் என பலரோடு, அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்து அளிப்பதில் தேர்ச்சி பெற்ற ஒரு குழுவும் தேவைப்பட்டது.

இதனை கணினி மூலம் உருவக அறுவை சிகிச்சை செய்து சரிபார்த்தபின்தான் நிஜமான இறுதி அறுவை சிகிச்சைப் பணி தொடங்கியது. அதுதான் டான்ஸானிய நோயாளி மீண்டும் இயல்பு வாழ்க்கையைப் பெறத் தேவையான முழுமையான சிகிச்சையாக அமைந்தது. இனி அவர், மற்றவர்களைப் போலவே பேசவும், உணவு உட்கொள்ளவும், அச்சமின்றி சமூகத்தை எதிர்கொள்ளவும் முடியும். இதற்காக, முப்பரிமாண வடிவ வகையில், கம்ப்யூட்டர் தொழில்நுட்ப மாதிரிகளைக் கொண்டு, அறுவை சிகிச்சையின் ஒவ்வொரு கட்டத்தையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. இவ்வகையான கணினி வடிவமைப்பு மாதிரி முயற்சிகளால், அறுவை சிகிச்சையின் போது மருத்துவத் தேவைக்கான துல்லியத்தை எட்ட முடிகிறது. இதற்கான நேரமும் கணிசமாக குறைகிறது. நோயாளியைப் பொறுத்தவரை, அவரது குரல் மற்றும் உருவத் தோற்றம் இரண்டிலும் திருப்திகரமான பழைய நிலையை எட்ட முடிந்துள்ளது. அது மட்டுமல்லாமல் அவருக்கு இந்த அறுவை சிகிச்சையின் போதே அந்த எலும்பில் பற்களும் பொருத்தப்பட்டது” என்று தெரிவித்தார்.

சிம்ஸ் மருத்துவமனையின் சர்வதேச தொடர்புகள் குறித்து பேசிய அதன் துணைத் தலைவர் மருத்துவர் ராஜூ சிவசாமி, “வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வரும் ஒவ்வொரு நோயாளிக்கும் – சிம்ஸ் மருத்துவமனை செய்து கொண்டுள்ள சர்வதேச ஒப்பந்தங்களால் ஆக வேண்டிய காரியம் மிக எளிதாக முடிகிறது. அதோடு, சிம்ஸ் மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் – பல முன்னேறிய நாடுகளில் உள்ளவர்களுக்கு இணையான திறமையுள்ளவர்களாக இருப்பதோடு, மேற்கத்திய நாடுகள் பலவற்றை ஒப்பிடும்போது இங்கே குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கவும் முடிகிறது. இதனால் இந்தியா தற்போது பல் மருத்துவச் சுற்றுலாவிற்காகவே வருகை தரும் நாடாக, மாற்றம் கண்டு வருகிறது” என்றார்.

அதோடு, சிம்ஸ் மருத்துவமனைக்கு வெளிநாட்டில் இருந்து வரும் நோயாளிகள் பெற வாய்ப்புள்ள வசதிகளைப் பட்டியலிட்டார். “நோயாளி சார்பில் சிம்ஸ் மருத்துவமனைக்குச் செய்யப்படும் முதல் தொலைபேசி அழைப்பில் தொடங்கி, சிகிச்சை பெற்று திருப்தியுடன் தாயகம் திரும்பி, மீண்டும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மறு பரிசோதனைகள் செய்துகொள்வது வரை தொடர்கிறது. இதில் சிகிச்சைக்காக இந்தியா வந்தவுடன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது, சிகிச்சை முறைகள் தொடர்பான ஆவணங்களை உருவாக்குவது, சிகிச்சைக்கான செலவுகளை மதிப்பிட்டு, அதற்கான ஏற்பாடுகளில் உதவுவது, இந்தியா வருவதற்கான அனுமதி (விசா பெறுதல்) பெறும் நடைமுறைகளில் உதவுவது, இந்தியாவில் காலடி வைத்தபின் மருத்துவமனை வந்தடைவது, சிகிச்சை பெற்றபின் தாய்நாடு செல்ல திட்டமிடுவது, விமான நிலையத்துக்கு செல்வது மட்டுமின்றி, தாயகம் திரும்பிய பின்னர் மேற்கொள்ள வேண்டிய சோதனைகள், கண்காணிப்பு பணிகளில் உதவுவது என அனைத்திலும் எங்களது மருத்துவமனைப் பணியாளர்கள் உதவுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது” என்று  மருத்துவர் ராஜூ சிவசாமி தெரிவித்தார்.

SIMS Hospital gives a new lease of life to a 38-year old Tanzanian affected by ameloblastoma

Please follow and like us: