ஓ மை கடவுளே சினிமா விமர்சனம்

ஓ மை கடவுளே சினிமா விமர்சனம்

ரேட்டிங்

Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு & Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஓ மை கடவுளே”. இப்படத்தை இயக்கியுள்ளார் அஷ்வத் மாரிமுத்து.

அசோக்செல்வன் நாயகனாக நடிக்க ரித்திகா சிங் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க இவர்களுடன் விஜய் சேதுபதி, கௌதம் மேனன் மற்றும் சந்தோஸ் பிரதாப், ரமேஷ் திலக் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-லியான் ஜேம்ஸ், ஒளிப்பதிவு – விது அயன்னா, படத்தொகுப்பு – பூபதி செல்வராஜ், கலை இயக்கம் – இராமலிங்கம், உடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன், உடைகள் – முகம்மது சுபையர், சண்டைப் பயிற்சி – ராம்குமார், பாடல்கள் – கோ சேஷா, புகைப்படம் – ராஜா, தயாரிப்பு மேற்பார்வை – சேதுராமலிங்கம், பூர்னேஷ், நிர்வாக தயாரிப்பு – நோவா, பிஆர்ஒ – சுரேஷ் சந்திரா.

அசோக் செல்வன், ரித்திகா சிங், ஷா ரா சிறுவயது முதலே நண்பர்கள். ரித்திகா சிங்கை திருமணம் செய்து கொள்ள அவரது தந்தை எம்.எஸ்.பாஸ்கர் வற்புறுத்த தன் பள்ளித் தோழனான அசோக் செல்வனை யோசிக்க விடாமல் சம்மதம் வாங்கி மணக்கிறார். அசோக் செல்வனை தன் தந்தையிடமே வேலைக்கும் ரித்திகா சேர்த்து விடுகிறார். அசோக் செல்வனோ ரித்திகா சிங்கை மனைவியாக பார்க்காமல் தோழியாகவே நடத்துகிறார். இதற்கிடையே தன்னை சிறுவயதில் வசீகரித்த சீனியர் பள்ளித் தோழியான வாணி போஜனை அசோக் செல்வன் சந்திக்க நேரிடுகிறது. கௌதம் வாசுதேவ மேனனிடம் உதவி இயக்குனராக வேலை செய்யும் வாணி போஜனிடம் தான் நடிகனாக வேண்டும் என்ற நெடு நாள் ஆசையை வெளியிடுகிறார். அதனால் வாணி போஜன், அசோக் செல்வனை சினிமாவில் சேர்த்து விட உதவி செய்கிறார். இவர்கள் பழகுவதை தப்பாக நினைக்கும் ரித்திகாசிங், அதனை தட்டி கேட்க அசோக் செல்வன் சண்டை போட்டு விவாகரத்து கேட்கிறார். குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்க, அந்த சமயத்தில் ரமேஷ் திலக் அசோக் செல்வனை சந்தித்து விவாகரத்து வாங்கித் தருகிறேன் காதல் நீதிமன்றத்திற்கு வா என்று அழைக்கிறார். இதைக் கேட்டு ஆச்சர்யப்படும் அசோக் செல்வன் காதல் நீதிமன்றத்தில் கடவுள் விஜய் சேதுபதியை சந்திக்கிறார். இவரின் கதையை கேட்டு பரிதாபப்பட்டு கடவுள் விஜய் சேதுபதி அசோக் செல்வனிடம் கோல்டன் டிக்கெட்டை கொடுத்து புது வாழ்க்கையை அனுபவித்து பார் அதன் பின் விவாகரத்து வாங்கலாம் என்று சொல்லி அனுப்புகிறார். அதை மகிழ்ச்சியாக பெற்றுக்கொண்ட அசோக் செல்வன் கோல்டன் டிக்கெட்டை வைத்து திருமணத்திற்கு முன் இருந்த புதிய வாழ்க்கைக்கு செல்ல, அதன் பின் நடக்கும் சம்பவங்கள் அசோக் செல்வனுக்கு அதிர்ச்சியை அளித்ததா? ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதா? ஏமாற்றத்தை கொடுத்ததா? முடிவை மாற்றியதா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

அசோக் செல்வனும், ரித்திகா சிங்கும் படம் முழுவதும் தங்களது இயல்பான பங்களிப்பின் மூலம் கற்பனை கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர். இவர்களின் நண்பராக வரும் ஷா ரா இருவரின் நட்பையும், காதலையும் சிதைந்து விடமால் மதில் மேல் பூனையாக தவிக்கும் தவிப்பு யாருக்கும் சொன்னால் புரியாது.

சின்னத்திரை நடிகை வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி அழுத்தமான இயக்குனர் அவதாரத்தில் அதிசயித்திருக்கிறார்.
மற்றும் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதியும், ரமேஷ் திலக் கடவுளாகவும், சில காட்சியில் இயக்குனராக கௌதம் வாசுதே மேனனும், சந்தோஷ் பிரதாப்பும் சிறப்பித்திருக்கிறார்கள்.

லியோன் ஜேம்ஸ் இசையில் கோ சேஷாவின் பாடல்கள் எல்லாம் ரசிக்கும் வண்ணம் கொடுத்திருக்கிறார்.

விது அய்யன்னா காதல் கதைக்கான அத்தனை அம்சங்களையும் கலந்து கண்களுக்கு விருந்து படைக்கிறார்.

படத்தொகுப்பு – பூபதி செல்வராஜ், கலை இயக்கம் – இராமலிங்கம், சண்டைப் பயிற்சி – ராம்குமார் ஆகியோர் முக்கிய பங்களிப்பு படத்திற்கு பலம்.

இயக்கம் அஸ்வத் மாரிமுத்து. முதல் படத்திலேயே நட்பு திருமணத்தில் முடிந்தால், தோற்குமா? வெற்றி பெறுமா? என்பதை இருவரின் வாழ்க்கையை கோல்டன் டிக்கெட் மூலம் மாற்றி காட்டி இருக்கிற வாழ்க்கையே சிறப்பானது, விவாகரத்து எல்லாம் வீணானது அனுசரித்து போனால் வாழ்க்கை இன்பம் தான் என்பதை தெளிவாக கூறி இயக்கியிருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் பாதி திருமணத்திற்கு பின்பும், இரண்டாம் பாதி திருமணத்திற்கு முன்பும் காட்சிகளை மாற்றி அவர்களின் வாழ்க்கை மாறுவதை அந்தந்த காட்சிகளோடு இணைத்து சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார். இந்த கற்பனை கோல்டன் டிக்கெட் இக்கால இளம் வயதினருக்கு கிடைத்திருந்தால் பல விவாகரத்துக்கள் தடுக்கப்பட்டிருக்கும்.

மொத்தத்தில் நட்பு திருமணத்தில் ஆரம்பிக்க இடையில் மாயாஜாலம் காட்டி விவாகரத்தை தடுக்கும் காதல் படம் ஓ மை கடவுளே.

கலைப்பூங்கா ரேட்டிங் ”ஓ மை கடவுளே ” படத்துக்கு 3.5 ஸ்டார்.

Please follow and like us: