மக்களிடையே தர்மசிந்தனை, சேவை மனப்பான்மையை வளர்க்க வேண்டும்: காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர்

பம்மல், சங்கரா மருத்துவ குழும விழா

மக்களிடையே தர்மசிந்தனை, சேவை மனப்பான்மையை வளர்க்க வேண்டும்:

காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர்

சென்னை, பம்மல், சங்கரா மருத்துவ குழுமம் சார்பில், பம்மல், பி.பி.ஜெயின் மருத்துவமனையின் பவள விழாவும், சங்கரா கண் மருத்துவமனையின் வெள்ளி விழாவும், காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர் முன்னிலையில், நேற்று நடந்தது.

இதில், சங்கரா மருத்துவ குழுமத்தின் செயலர், விஸ்வநாதன், கிண்டி, எம்.ஜி.ஆர்., பல்கலை துணைவேந்தர், சுதா சேஷையன், பொருளாளர், லக்ஷ்மணன், நிர்வாக அறங்காவலர், பி.பி.ஜெயின், நிர்வாக இயக்குனர், வி.சங்கர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

விழாவில் டாக்டர். சுதா சேஷையன் பேசியதாவது:கடந்த, 1970களில் பம்மல் மற்றும் நாகல்கேணி ஆகியவை, வளர்ந்து வந்த கிராம பகுதிகள். அந்த காலத்திலேயே, சங்கரா மருத்துவமனை துவக்கப்பட்டு, இன்று வரை மக்களுக்கு சேவை செய்து வருகிறது என்றால், அதற்கு, பலதரப்பட்டவர்களின் ஒத்துழைப்பு தான் காரணம். ராமாயணத்தில், ராமருக்கு அணில் உதவியது போல், ஏழை, எளியோருக்கு நாம் உதவ வேண்டும்.சங்கரா குழுமம் இந்த அளவிற்கு வளர காரணம், காஞ்சி பெரியவரின் ஆசீர்வாதம் தான். இவ்வாறு அவர் பேசினார்.

Pammal Sankara Group of Healthcare Institutions coral jubilee

காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர் பேசியதாவது:இன்று நடக்கும் இரண்டு விழாக்களும், காஞ்சிபுரம் மற்றும் சென்னைக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. 70க்கும் மேற்பட்ட மருத்துவ சேவைகளில் ஈடுபட்டு வரும் சங்கரா குழும நிர்வாகிகள், நன்கொடையாளர்கள், ஊழியர்களுக்கு மரியாதை செய்தது, பெருமை அளிக்கிறது. ஒடிசாவில், சங்கரா மருத்துவமனை துவக்கப்பட்டு இயங்கி வருகிறது. விரைவில், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களிலும், இந்த மருத்துவமனையின் கிளைகள் துவங்க உள்ளன.நம் நாட்டில், சேவை மனப்பான்மை இயற்கையாகவே உள்ளது. தனியாக கட்டடங்கள், மண்டபங்கள் கட்டி, சேவை செய்வதை, சங்கரா நிர்வாகம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.தமிழக மக்களின் மனதில், கருணை, ஈரம், பிறருக்கு உதவி செய்வது என்பது, அந்தந்த குடும்பத்தின் மூதாதையர்களால் கற்றுத் தரப்படுகிறது.தர்ம சிந்தனை, சேவை மனப்பான்மை வளர்க்கப்படுவது, கிராம, நகர இணைப்புகளுக்கு பாலமாக அமையும்.இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், பவள விழா குறித்த புத்தகத்தை காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர் வெளியிட்டார். சங்கரா குழும, மூத்த நிர்வாகிகள், நன்கொடையாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கவுரவிக்கப்பட்டனர்.

Please follow and like us: