மிக மிக அவசரம் சினிமா விமர்சனம்

மிக மிக அவசரம் சினிமா விமர்சனம்

ரேட்டிங்

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி,குங்ஃபூ ஆறுமுகம் மற்றும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் இணைந்து தயாரித்திருக்கும் படம் மிக மிக அவசரம்.

இதில் ஸ்ரீபிரியங்கா, சீமான், கோரிப்பாளையம் ஹரீஷ், வழக்கு எண் முத்துராமன், ஈ.ராம்தாஸ், வெற்றிகுமரன், சரவணனசக்தி, ஆண்டவன் கட்டளை அரவிந்தன், லிங்கா, பிஆர்ஒ குணா,  வி.கே.சுந்தர் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை திரைக்கதை எழுதி இயக்கியருக்கிறார் சுரேஷ் காமாட்சி.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- கதை, வசனம்-ஜெகன்னாத், ஒளிப்பதிவு-பாலபரணி, இசை-இஷான் தேவ், பாடல்கள்-சேரன், எடிட்டர்-ஆர்.சுதர்சன், கலை-என்.கே.பாலமுருகன், ஒப்பனை-சசி, உடை-புஜ்ஜி பாபு, புகைப்படம்-குணா, தயாரிப்பு நிர்வாகி-இளையராஜா செல்வம், பிஆர்ஒ-ஜான்.

அழகான பெண் கான்ஸ்டபிள் ஸ்ரீபிரியங்கா அக்கா ;இறந்து விட்டதால் மாமா மற்றும் அக்கா மகளுடன் வசிக்கிறார். இதனிடையே உயர் போலீஸ் அதிகாரி ஸ்ரீபிரியங்காவை அடைய நினைத்து பல விதங்களில் தொல்லை கொடுக்கிறார். ஸ்ரீபிரியங்கா இவரைப் பற்றி புகார் கொடுக்க உயர் போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இதனால் ஆத்திரமடைந்த உயர் போலீஸ் அதிகாரி தன் நண்பர் சக போலீஸ் அதிகாரி முத்துராமன் மூலம் பழி வாங்க திட்டம் போடுகிறார். அதன்படி போலீஸ் அதிகாரி முத்துராமன் பாலத்தில் பந்தோபஸ்து என்ற பெயரில் ஸ்ரீபிரியங்காவை நாள் முழுவதும் எங்கேயும் நகர முடியாதவாறு நிற்க வைத்து விடுகிறார். பல மணி நேரம் பணி செய்தாலும் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் ஸ்ரீபிரியங்கா தவிக்கிறார். இறுதியில் ஸ்ரீபிரியங்காவிற்கு உதவி கிடைத்ததா? தன்னை டார்ச்சர் செய்யும் முத்துராமன்  கதி என்னவானது? முத்துராமன் வகையாக சிக்கி கொண்டது எதனால்? அவருக்கு கிடைத்த தண்டனை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஸ்ரீபிரியங்கா அச்சு அசலாக யதார்த்தமாக பெண் கான்ஸ்டபிள் வேடத்தில் பொருந்தியிருக்கிறார். அனைவரையும் அதட்டி, பணியை செவ்வென செய்யும் கன்னியமான கனிவான பெண் போலீசாகவும், அன்பான அக்கா மகளுக்கு தாயாகவும், குடிகார மாமாவை திருத்த முடியாமல் தவிக்கும் பெண்ணாகவும், காதலனை உதவிக்கு அழைத்து தன் இயலாமை சொல்லி புலம்பும் காதலியாகவும், வெய்யில் மற்றும் இயற்கை உபாதையால் கஷ்டப்படும் போது தன்னுடைய முகபாவங்களில் அசலான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார் ஸ்ரீபிரியங்கா. பாராட்டுக்கள்.

சில போலீஸ் அதிகாரிகளின் தவறான நடவடிக்கையால் ஒட்டு மொத்த போலீசையும் தப்பாக நினைக்கும் மனோபாவத்தை சுட்டிக் காட்டியும், சக பெண் போலீஸ்காரர்களை தப்பான எண்ணத்துடன் பார்க்காமல், அவமதிக்காமல் மரியாதை கொடுத்து நடத்தும்படி அறிவுரை கூறும் உயர் காவல்துறை அதிகாரியாக வருகிறார் சீமான்.

காதலனாக கோரிப்பாளையம் ஹரீஷ், மிரள வைக்கும் வில்லத்தனத்துடன் வழக்கு எண் முத்துராமன், உதவி செய்யும் கான்ஸ்டபிளாக ஈ.ராம்தாஸ், வெற்றிகுமரன், சரவணனசக்தி, ஆண்டவன் கட்டளை அரவிந்தன், லிங்கா, பிஆர்ஒ குணா,  வி.கே.சுந்தர் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

கதை, வசனம் ஜெகன்னாத்:- முதலில் தொலைபேசி வசன உச்சரிப்புக்களில் தொடங்கும் கதை, பின்னர் பல திருப்பங்களோடு செல்வதும், இறுதி வரை அதை சிதையவிடாமல் சிறப்பாக கொடுத்துள்ளார்.

பாலபரணியின் ஒளிப்பதிவு படத்தின் காட்சியமைப்பிற்கு உகந்தவாறு காட்சி கோணங்களை கொடுத்து செதுக்கியிருப்பது சிறப்பு.

இஷான் தேவின் இசை அசத்தல்.

ஆர்.சுதர்சனின் எடிட்டிங், என்.கே.பாலமுருகனின்  கலைவண்ணம் படத்தின் ஒட்டத்திற்கு கை கொடுக்கிறது.

திரைக்கதை, இயக்கம்:-சுரேஷ் காமாட்சி. சிம்பிளான ஒன் லைன் கதையை எவ்வளவு சுவாரஸ்யமாக கொடுக்க முடியும் என்பதற்கு இந்தப் படம் சாட்சி இதன் டைட்டிலே அத்தாட்சி. பெண் போலீஸ்  கான்ஸ்டபிள்கள் படும் துன்பங்களையும், தொந்தரவுகளையும், இடைஞ்சல் களையும் சமாளித்து பணி செய்கிறார்கள் என்பதைச் சொல்லும் படம். இது அனைத்து துறையில் வேலை செய்யும் பெண்களுக்கும் பொருந்தும். முதலில் படம் ஆரம்பிக்கும் போதே உரையாடல்களை வைத்து காட்சிகளை பார்க்கும் போது நினைப்பது வேறு நடப்பது வேறாகவும், தவறாக நினைக்கும் காட்சிகள் எல்லாம் படம் நகர நகர தெளிவு பிறப்பதும், ஒவ்வொரு கதாபாத்திரங்களும் வேறு கோணத்தில் நினைக்க வைத்து திரைக்கதையை திருப்பங்களோடு இயக்கி இறுதியில் இயற்கையே உதவி செய்வது போல் முடித்திருக்கும் விதம் அருமை. பெண் போலீஸ் எப்படி வீட்டிலும், பணி செய்யும் இடங்களிலும் கஷ்டப்பட்டு, அவமானப்பட்டு, சொல்ல முடியாமல் வெட்கப்பட்டு அவதிப்படுகிறார்கள் என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுரேஷ் காமாட்சி. இப்படத்தின் மூலம் அவதிப்படும் பெண் போலீஸ்களுக்கு மொமைல் டாய்லெட்  வசதி செய்வதற்கான விடிவு காலம் பிறக்கும் என்று நம்பலாம். சுரேஷ் காமாட்சியின் கடின உழைப்பிற்கும்,முயற்சிக்கும் கிடைத்த வெற்றி மிக மிக அவசரம். வெல்டன். அனைத்து தரப்பு மக்களும் பார்க்க வேண்டிய படம், அவசியமான படம்.

மொத்தத்தில் பெண்களின் வலியை, அவசரத்தை  தெளிவாக சொல்லி மிக மிக பொறுமையோடு வந்தாலும் மிக மிக அவசரமான வெற்றியை பெறும் என்பது உறுதி.

‘கலைப்பூங்கா’ ரேட்டிங் ‘மிக மிக அவசரம்’ படத்துக்கு 3 ஸ்டார்.

Please follow and like us: