கைதி விமர்சனம்

கைதி விமர்சனம்

ரேட்டிங்

ட்ரீம் வாரீயர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு மற்றும் விவேகானந்தா பிக்சர்ஸ் சார்பில் திருப்பூர் விவேக் இணைந்து தயாரித்திருக்கும் படம் கைதி.

இதில் கார்த்தி, நரேன், பேபி மோனிகா, தீனா, ஜார்ஜ் மரியம், அர்ஜுன்தாஸ், ஹரீஷ் உத்தமன், ரமணா, ஹரிஷ்பிராடி, அருண் அலெக்ஸ்சாண்டர், அம்ஜத், வத்சன் சக்ரவர்த்தி, உதயா, லல்லு, கிஷோர் ராஜ்குமார், தீப்தி, மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடித்து கைதி படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-சத்யன், சூரியன், இசை-சாம்.சி.எஸ்., எடிட்டிங்-பிலோமின்ராஜ், கலை-என்.சதீஷ்குமார், சண்டை-அன்பறிவு, பாடல்வரிகள்-சரண்யா கோபிநாத், வசனம்-பொன் பார்த்திபன், லோகேஷ் கனகராஜ், புகைப்படம்-அமீர், உடை-பிரவீன் ராஜா, ஒப்பனை-ராஜூ, ஒலிகலவை-கண்ணன் கன்பத், தயாரிப்பு மேற்பார்வை-பி.எஸ்.ராஜேந்திரன், நிர்வாக தயாரிப்பு-அரவிந்த்ராஜ் பாஸ்கரன், பிஆர்ஒ- ஜான்சன்.

போலீஸ் அதிகாரி பிஜோய் (நரேன்) மற்றும் அவரது குழு போதைபொருள் கடத்தும் கும்பலிடம் இருந்து பல ஆயிரம் கோடி மதிப்புள்ள போதை பொருளை  பறிமுதல் செய்து அதை ஒரு பழைய கமிஷனர் அலுவலகத்தில் ரகசிய இடமான பதுங்கு குழியில் பாதுகாப்பாக வைக்கின்றனர். போலீஸ் கைப்பற்றிய போதைப் பொருளை எப்படியாவது மீட்க வேண்டும், அதே சமயம் அதற்கு காரணமான பிஜோய் மற்றும்  நான்கு போலீஸ் அதிகாரிகளை கொல்ல வேண்டும் என்று போதைக் கும்பலின் மூளையாக விளங்கும் அன்புதாஸ் (அர்ஜூன் தாஸ்) திட்டம் போடுகிறார். அந்த போதைக் கும்பலின் செயல்பாடுகளை உளவாளி ஒருவர் அவ்வபோது தகவல்களாக பிஜோயிடம் (நரேன்); தெரிவிக்கிறார்.அதே நேரத்தில் போதை கும்பலின் கையாளான போலீஸ் அதிகாரி ஒருவர் பிஜோய் குழுவினருக்கு  தெரியாமல் மதுவில் மயக்க மருந்து கலந்து கொடுக்க மயங்கி விழும் போலீஸ் அதிகாரிகளின் உயிரை காப்பாற்ற என்ன செய்வதேன்று தெரியாமல் தவிக்கிறார் பிஜோய்.

இந்நிலையில் 10 ஆண்டுகள் ஆயுள் சிறைக் கைதியாக இருந்து விட்டு வெளியே வரும் தில்லி (கார்த்தி) தன் 10வயது பெண் குழந்தையை பார்க்க காப்பகம் செல்லும் வழியில் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்து கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து வாகனத்தில் கை விலங்குடன் வைக்கின்றனர். வில்லன் கும்பலால் உயிருக்கு போராடும் போலீஸ் கூட்டத்தைக் காப்பாற்ற வேண்டும், போதைப் பொருள் நகரத்தில் ஊடுறுவதைத் தடுக்க வேண்டும், இன்னும் 4 மணிநேரத்தில் எப்படி போலீஸ் அதிகாரிகளை லாரியில் மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல முடியும் என்று உடைந்த கையோடு திண்டாடுகிறார் பிஜோய் (நரேன்).யாரும் உதவிக்கு இல்லாத சூழலில் காரத்தியின் உதவியை நாடுகிறார் நரேன். முதலில் உதவ மறுக்கும் கார்த்தி, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக லாரியை ஒட்ட முன் வருகிறார். போதைப் பொருள் கும்பலால் காவல் நிலையத்தைத் தகர்க்க முடிந்ததா? கார்த்தி அனைத்து காவலர்களையும் அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்றிவிட்டு தன் மகளைப் பார்த்தாரா? போதைப் பொருளைத் தவிர இன்னோரு விஷயத்திற்காக கமிஷனர் அலுவலகத்தை சூறையாட நினைக்கும் கும்பலின் முக்கியமான காரணம் என்ன? அதையும் கார்த்தி எப்படி முறியடித்தார்? என்பதே மீதிக் கதை.

டில்லியாக கார்த்தி ரிலீஸ் ஆன ஆயுள் தண்டனைக் கைதியாக நடுத்தர வயதில் நெற்றியில் பட்டையும் சாதரண வேட்டி,சட்டையுடன் படம் முழுவதும் அசால்டான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.  மகளை முதல் முறையாக பார்க்க ஆர்வத்துடன் ஏக்கத்தில் இருக்கும் தந்தையாகவும், குரலை   மொபைலில் கேட்டும் பதில் சொல்ல முடியாத தவிப்பிலும், அதன் பின் வில்லன்களின் சண்டையால் மகளை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றாலும் படத்தையாவது பார்க்கலாம் என்ற ஏக்கத்தின் உச்சத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார்.நரேனிடம் ஒவ்வொரு உதவிக்கு ஈடாக மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய போராடும் அப்பாவாகவும், அதே சமயம் போலீஸ் அதிகாரிகளை இக்கட்டான சூழ்நிலையிலும் கைவிடாமல் சண்டையிட்டு போராடி  வெற்றி பெறும் பல காட்சிகளில் நடிப்பில் ஜொலித்து படத்திற்கு உயிரோட்டம் தந்துள்ளார். வசனத்திலேயே மனைவியின் ஃபிளாஷ்பேக் காட்சிகளை விவரிக்கும் கார்த்தியின் நடிப்பும், மகளை பார்க்க முற்படும் துடிப்பும் லாரியின் ஒட்டத்தை போல விறுவிறுவென்று இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளிலும் வெல்டன் கார்த்தி.

பிஜோய் என்ற போலீஸ் அதிகாரியாக நரேன் கைதேர்ந்த நடிப்பிலும், மனிதநேயமிக்க செயலிலும் தனித்து நின்று மீண்டும் முத்திரை பதித்திருக்கிறார்.

புது கான்ஸ்டபிள் நெப்போலியனாக ஜார்ஜ் மரியம் முதிர்ச்சியான பங்களிப்பை கொடுத்து முக்கியமான கதாபாத்திரத்தில் அனைவரின் மனதில் பதிந்து தனித்து இறுதி வரை நிற்கிறார்.

கார்த்தியின் மகள் அமுதாவாக நடித்திருக்கும் பேபி மோனிகா, அர்ஜுன்தாஸ், ஹரீஷ் உத்தமன், ரமணா, ஹரிஷ்பிராடி, அருண் அலெக்ஸ்சாண்டர், அம்ஜத், வத்சன் சக்ரவர்த்தி, உதயா, லல்லு, கிஷோர் ராஜ்குமார், தீப்தி, மாளவிகா அவினாஷ் என பலரும் இருந்தாலும் அனைவருமே முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார்கள்.

விஜய் டிவி தீனா தனக்கு கொடுக்கப்பட்ட சிறப்பான கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இயல்பாகவும், அடக்கமாகவும், அதே சமயம் காமெடி வசனங்களை சில இடங்களில் அள்ளித்தெளித்தும் நெகிழ்ச்சியோடும் மிகசிறப்பாக நடித்துள்ளார்.

சத்யன் சூர்யன் ஒரு இரவில் நடக்கும் கதைக் களத்தை அதற்கேற்ற காட்சிக்கோணங்களிலும், லாரி சேசிங் காட்சிகளையும். சண்டைக்காட்சிகளையும், கமிஷனர் அலுவலகத்திலும் உள்ளேயும், வெளியேயும் நடக்கும் சம்பவங்களையும் சிறப்பான ஒளிப்பதவின் மூலம்  காட்சிப்படுத்தி பிரமிக்க வைத்து விடுகிறார்.
பிலோமின் ராஜ்; எடிட்டிங் கச்சிதம். இசை அமைப்பாளர் சாம் சி.எஸ் அவர்களின் பங்களிப்பு படத்தின் திரைக்கதை ஒட்டத்திற்கு மிகப்பெரிய பலம்.
படம் ஆரம்பம் முதல் முடிவு வரை  சண்டைக்காட்சிகள் பெரிய அதிர்வுடன் கொடுத்துள்ளார் அன்பறிவு மாஸ்டர்.

எழுத்து, இயக்கம்- லோகேஷ் கனகராஜ். சில உண்மைசம்பவங்களை பின்னணியாக வைத்து ஒரு இரவில் போதைக் கும்பலை பிடிக்கவும், போலீஸ் அதிகாரிகளை காப்பாற்றவும் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்கும் விடுதலை பெற்ற ஆயுள் கைதியின் சாகசத்தோடு தந்தை மகள் செண்டிமெண்டையும் கலந்தது தான் கைதியில் சாரம்சம்.இதில் பரபரப்பான ஃபிளாஷ்பேக் காட்சிகள் இல்லை, கதாநாயகி இல்லை, பாடல்கள் இல்லை, ஆனால் ஒரு கைதி, மகள், போலீஸ், போதைக்கும்பல், கமிஷனர் அலுவலகம், லாரி, ஆக்ஷன் இதை வைத்தே ஒரு படத்தை எவ்வளவு சுவாரஸ்யமாகவும், நுணுக்கமாகவும் கொடுக்க முடியும் என்ற வித்தை தெரிந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார். இவரின் உழைப்பிற்கு ஈடாக கார்த்தியின் நடிப்பு படத்திற்கு இரட்டிப்பு வெற்றியை ஈட்டு தந்துள்ளது.

மொத்தத்தில் ஆக்ஷன் ‘கைதி’ தீபாவளியில் வசூல் வேட்டையில் வெற்றி சரவெடியில் அதிர வைத்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

‘கலைப்பூங்கா’ ரேட்டிங் ‘கைதி’ படத்துக்கு 4 ஸ்டார்.

Please follow and like us: