தமிழகத்தில் ஒரே நேரத்தில் 6 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்: முதலமைச்சர் பழனிசாமி நன்றி

தமிழகத்தில் ஒரே நேரத்தில் 6 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்: முதலமைச்சர் பழனிசாமி நன்றி

சென்னை, மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கடந்த ஆகஸ்டு மாதம் நிருபர்களிடம் பேசுகையில், ‘இந்தியா முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும், இதன் மூலம் 15 ஆயிரத்து 700 எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த புதிய மருத்துவ கல்லூரிகள் 200 முதல் 300 படுக்கை வசதி கொண்ட மாவட்ட மருத்துவமனையுடன் இணைந்து தொடங்கப்படும் என்றும், இதற்காக பொருளாதார விவகார அமைச்சரவை குழு ரூ.24 ஆயிரத்து 375 கோடி அனுமதித்து இருப்பதாகவும், இந்த புதிய கல்லூரிகள் அனைத்தும் 2021-2022-ம் ஆண்டில் தொடங்கப்படும் என்றும் அப்போது அவர் கூறினார்.

மத்திய மந்திரியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களை ஆய்வு செய்து முதற்கட்டமாக திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 இடங்களில் மருத்துவ கல்லூரி தொடங்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திரமோடிக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

ஒவ்வொரு முறை பிரதமரை சந்திக்கும் போதும், தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகளை உடனடியாக தொடங்க தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தனை சந்தித்து முதல்-அமைச்சரின் கோரிக்கையை எடுத்துக்கூறி உடனடியாக மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவும், நிதி ஒதுக்கீடு செய்யவும் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே அந்த 6 இடங்களிலும் மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு, தேவையான இடங்களை தேர்வு செய்து அறிக்கை அளிக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்- அமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை ஏற்று மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ கல்லூரி அமைய உள்ள இடத்தை தேர்வு செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இடம் தேர்வு சம்பந்தமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒப்புதலுக்கு தேவையான அனைத்து ஆவணங்களும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மத்திய சுகாதார அமைச்சகத்தின் 3 குழுக்களும் தமிழக அரசின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்தன.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

ஒவ்வொரு மருத்துவ கல்லூரியும் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.325 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு கல்லூரிக்கும் செலவிடப்படும் தொகையில் 60 சதவீத தொகையான ரூ.195 கோடியை மத்திய அரசும், மீதமுள்ள 40 சதவீத தொகையான ரூ.130 கோடியை மாநில அரசும் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அந்த வகையில், 6 மருத்துவ கல்லூரிகளும் மொத்தம் ரூ.1,950 கோடி செலவில் அமைக்கப்பட இருக்கின்றன.

தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு அனுமதி கொடுத்ததற்காக பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரி இல்லாத விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசின் அனுமதியும், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நிதி உதவியும் வழங்க பிரதமர் மோடியிடம் நான் கோரிக்கை வைத்து, அதற்கான முன்மொழிவுகள் குறுகிய காலத்தில் தமிழக அரசால் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மத்திய அரசு கோரியபடி மேற்படி மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க உடனடியாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, விரைவான நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையினை ஏற்று திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களிலும் அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டுக்கு ஒரே நேரத்தில் 6 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று நிகழ்வு ஆகும். இதற்கென ரூ.1,950 கோடி மதிப்பீட்டிற்கு அனுமதி வழங்கி, அதில் ரூ.1,170 கோடி வழங்க மத்திய அரசு அனுமதியும் அளித்து உள்ளது. தமிழ்நாடு அரசின் பங்காக ரூ.780 கோடி வழங்கப்படும்.

இதுவரை வரலாறு கண்டிராத இந்த சிறப்புமிக்க அனுமதியை வழங்கிய பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் எனது நன்றியை தமிழக மக்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Please follow and like us: