சென்னை விமான நிலையத்தில் ரூ.24.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.24.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை, அக்டோபர் 06, 2019

சுங்கத் துறையின் விமான புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஞாயிறன்று மலேசியாவில் இருந்து ஏர்ஏஷியா விமானம் மூலம் வந்த யாசர் அராபத் முகமது யூசுப் (வயது 29) என்ற பயணி, சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது சந்தேகத்திற்கிடமான வகையில் பரபரப்புடன் காணப்பட்டார். இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் நடத்திய சோதனையின் போது, அவரது கால்சட்டை (பேண்ட்) பையில் மறைத்து வைத்து கடத்தி வந்த 70 கிராம் எடையுள்ள 3 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.2.76 லட்சமாகும். இது தவிர அவரது உடமைகளை சோதனை செய்தபோது, வானொலிப் பெட்டிக்குள் மறைத்து கடத்தி வந்த 165 கிராம் எடையுள்ள மேலும் 5 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.6.5 லட்சமாகும். மொத்தத்தில் அவரிடமிருந்து 235 கிராம் எடையுள்ள ரூ.9.26 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஏற்கனவே சனிக்கிழமை அன்று கோலாலம்பூரிலிருந்து பட்டிக் ஏர் விமானம் மூலம் சென்னை வந்த கமலா நரசிம்மராவ் என்ற பெண் பயணியை விமான நிலைய வெளியேறும் பகுதியில் சுங்கத் துறையினர் சோதனையிட்டபோது, அவர் தமது மலக்குடலில் மறைத்து வைத்து கடத்தி வந்த 385 கிராம் மதிப்புள்ள 7 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.15.2 லட்சமாகும்.

மொத்தத்தில் கடந்த இரு நாட்களில் ரூ.24.46 லட்சம் மதிப்புள்ள 620 கிராம் தங்கம் சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, மேல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Please follow and like us: