தேச நலனுக்காகவே அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது: குடியரசுத் துணைத்தலைவர் எம். வெங்கைய நாயுடு

தேச நலனுக்காகவே அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது

உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்

“கவனித்தல் – கற்றல் மற்றும் தலைமையேற்றல்”  நூல் வெளியீட்டு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர்  வெங்கையா நாயுடு உரை

அரசியல் சட்டப்பிரிவு 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் கஷ்மீரில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும்: உள்துறை அமைச்சர் அமித் ஷா 

சென்னை, ஆகஸ்ட் 11, 2019

தேச நலன் கருதியே அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதாக குடியரசுத் துணைத்தலைவர்  எம். வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.

இது அரசியல் பிரச்சினை இல்லை என்றும், கஷ்மீர் மக்களுடன் இணைந்து, அங்கு இயல்பு நிலையை ஏற்படுத்துவதே தற்போதைய தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவின் இரண்டாண்டு பதவிக் காலத்தில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள், அவரது உரைகள் மற்றும் புகைப்படங்கள், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை சார்பில் தொகுக்கப்பட்டுள்ள, “கவனித்தல் – கற்றல் மற்றும் தலைமையேற்றல்” என்ற நூலினை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பல்துறை வல்லுநர்கள் மற்றும் பிரமுகர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து ஏற்புரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர் வெங்கைய நாயுடு, அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதற்கான மசோதா, அரசால் மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்டபோது, மாநிலங்களவைத் தலைவர் என்ற முறையில், இதனை எவ்வாறு நிறைவேற்றப் போகிறோம் என்பதில் தமக்கு தயக்கம் இருந்தது என்றார். ஆனால், எந்தவித இடையூறும் இன்றி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவுடன் இந்தச் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்று, அதனை உள்வாங்கி, நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையிலும், நாட்டின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதியிலும் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், நீதியைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட தொலைவுக்கு பயணம் செய்து அதிக பணம் செலவிடுவதை இதன்மூலம் தவிர்க்கலாம் என்றார். முதற்கட்டமாக, சென்னையில் உச்சநீதிமன்றக் கிளையை அமைக்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

மாநில உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளிலேயே வாதாட அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நீதிபதிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதோடு, அரசியல் சாசன வழக்குகளை விசாரிக்கவும், மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கவும் தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

நீதித்துறைமீது மக்கள் நம்பிக்கை இழக்காத வகையில், மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பண்டைக்காலத்தில் இந்தியாவில் நாலந்தா போன்ற பல முன்னணி பல்கைலைக் கழகங்கள் இருந்ததையும், நமது நாடு உலகத்திற்கே வழிகாட்டியாக திகழ்ந்ததையும் சுட்டிக்காட்டிய அவர், இந்தப் பெருமையை மீட்டெடுக்கும் வகையில் அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்கள் காரணமாக, உலக அரங்கில் வளர்ந்த நாடுகளுக்கு இணையான அங்கீகாரம் இந்தியாவிற்கு கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டிலிருந்து ஏழ்மை, எழுத்தறிவின்மை, சாதி-மத-பாலினப் பாகுபாடுகள் அகற்றப்பட்டு, சமத்துவம் நிலவச் செய்ய வேண்டியது அவசியம் என்றும்  வெங்கைய நாயுடு வலியுறுத்தினார்.

சாதாரண ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த தாம், விடாமுயற்சி, உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியதால், அரசியலிலும் பொதுவாழ்விலும் உயர்ந்த நிலையை எட்டியிருப்பதை சுட்டிக்காட்டினார். பின்தங்கிய குடும்பத்தில் பிறந்தவர்களான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரும் உயர்ந்த பதவிகளை எட்டியிருப்பதையும் அவர் எடுத்துரைத்தார். இளைய தலைமுறையினர் இதனை ஒரு முன்னுதாரணமாக ஏற்று, தங்களது லட்சியங்களை நிறைவேற்ற பாடுபட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தாய், தாய்நாடு, தாய்மொழி ஆகியவற்றை ஒருபோதும் மறக்கக்கூடாது என்று குறிப்பிட்ட அவர், தாய்மொழி என்பது கண்போன்றது என்றும் பிற மொழிகள் மூக்கு கண்ணாடி போன்றது என்றும் தெரிவித்தார். அதே வேளையில் எந்த மொழியையும் யாரும் எதிர்க்கவும் கூடாது, எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் கண்ணியத்துடன் நடந்துகொள்ள ஏதுவாக, சம்மந்தப்பட்ட கட்சிகளே விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் நூலை வெளியிட்டுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட வேண்டும் என்று மாணவராக இருந்தபோதே போராடிய வெங்கைய நாயுடு, பிற்காலத்தில் மாநிலங்களவைத் தலைவராக பதவியேற்று, அவையை வழிநடத்தும்போது, அந்த அவையிலேயே இந்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது சிறப்புக்குரியது என்றார்.

இந்தச் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம், கஷ்மீரில் தீவிரவாதம் முற்றிலும் ஒடுக்கப்படும் என்று தாம் முழுமையாக நம்புவதாக குறிப்பிட்ட உள்துறை அமைச்சர், இனி அங்கு வளர்ச்சி உத்வேகம் பெறும் என்றார். இந்தச்  சட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே நீக்கப்பட்டிருக்க வேண்டும் என்றாலும் தற்போது அந்தப் பிரிவு நீக்கப்பட்டதில் தமக்கு மாறுபட்ட கருத்து ஏதுமில்லை என்றும் தெரிவித்தார்.

துடிப்புடன் செயல்படக்கூடியவரான வெங்கைய நாயுடு, அவரது இரண்டாண்டு பதவிக்காலத்தில் 65 பொது நிகழ்ச்சிகள், மாணவர்களுடனான 35 சந்திப்புகளை மேற்கொண்டதுடன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த 97 நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருப்பதுடன், பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வழிகாட்டியிருப்பதாகவும் தெரிவித்தார். அவர் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது, நகர்ப்புற மக்களுக்கான பிரதமரின் வீட்டுவசதி திட்டம், பொலிவுறு நகரங்கள் ஆகிய இரண்டு மாபெரும் திட்டங்களை கொண்டுவந்தவர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

மாநிலங்களவைத் தலைவர் என்ற முறையில் அவர் நடுநிலை தவறாமல் கடமையாற்றி வருவதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மாநிலங்களவைத் தலைவர் என்ற முறையில்  வெங்கைய நாயுடு, எதிர்க்கட்சிகள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க அனுமதி வழங்கும் அதேநேரத்தில், அரசு தனது கொள்கை மற்றும் திட்டங்களை நிறைவேற்ற உறுதுணையாக இருந்து வருவதாக தெரிவித்தார்.

 அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதற்கான தீர்மானத்தை மாநிலங்களவையில் முதலில் நிறைவேற்றியதில், வெங்கைய நாயுடுவின் வழிகாட்டுதல் மற்றும் அணுகுமுறை பாராட்டத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெங்கைய நாயுடுவின் தனிப்பட்ட அணுகுமுறை காரணமாக, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தரப்பினரும் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கும் நிலையை ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டார்.

வாழ்க்கையின் அனைத்து தரப்பினருக்கும் வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் வெங்கைய நாயுடு திகழ்வதாக கூறிய ஜவடேகர், தாய், தாய்நாடு, தாய்மொழி ஆகியவற்றை முன்நிறுத்தி வருங்கால சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு ஊக்கமளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மேலும், முதுபெரும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. கஸ்தூரி ரங்கன், துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி, அப்பல்லோ மருத்துவக் குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி, விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன்,  இந்திய பேட்மின்டன் பயிற்சியாளர் பி. கோபிசந்த், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வெங்கைய நாயுடுவின் அரும்பணிகளை பாராட்டிப் பேசினர்.

விழா நிறைவில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர் அமித் கரே நன்றி தெரிவித்தார்.

இந்த நூல் வெளியீட்டு விழாவை ஒட்டி, வெங்கைய நாயுடுவின் இளமைக்காலம் முதல் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்காலம் வரையிலான பல்வேறு சந்திப்புகள். நிகழ்வுகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி ஒன்று மத்திய அரசின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை திரு. வெங்கைய நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

Also Read:

“காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது” – நடிகர் ரஜினிகாந்த்

Please follow and like us: