“காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது” – நடிகர் ரஜினிகாந்த்

“காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது” – நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு 2 ஆண்டுகளில் செய்த பணிகளை ஆவணப்படுத்தும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” எனும் தலைப்பில் புத்தகம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புத்தகத்தை வெளியிட்டார்.

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர். 45 ஆண்டுகளுக்கு பிறகும் கூட என்னை நினைவு வைத்திருப்பவர். அவர் சிறந்த ஆன்மிகவாதி. அவர் தப்பித்தவறி அரசியலுக்கு வந்துவிட்டார்.

காஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவிற்கு வாழ்த்துக்கள். காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை திறம்பட கையாண்டது பாராட்டுக்குரியது. பாராளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது.

பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் கிருஷ்ணன், அர்ஜூனன் போன்றவர்கள். யார் கிருஷ்ணன், யார் அர்ஜூனன் என்பதை அவர்களே அறிவார்கள் என பாராட்டி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா விரைவில் தமிழில் பேசுவதாக கூறினார்.

அவர், “வெங்கைய நாயுடுவிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். சிறப்புச் சட்டம் 370-ஐ நீக்க, போராடியவர்களில் மிக முக்கியமானவர் வெங்கையா நாயுடு. நான் இங்கு அமைச்சராகவோ, பாஜக தலைவராகவோ வரவில்லை. நான் வெங்கைய நாயுடுவின் மாணவனாக இங்கு வந்துள்ளேன். இந்த விழாவில் தமிழில் பேச நினைத்தேன். ஆனால் என்னால் இயலவில்லை. ஆனால் சென்னையில் அவர் ஒரு நாளாவது தமிழில் நிச்சயமாக பேசுவேன்,” என்றார்.

Please follow and like us: