சோனியாவே மீண்டும் தலைவர்: காங்கிரஸ் செயற்குழு முடிவு

சோனியாவே மீண்டும் தலைவர்: காங்கிரஸ் செயற்குழு முடிவு

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு மீண்டும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி பதவி விலகிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தியின் பதவி விலகல் ஏற்கப்பட்ட பின்னர், சோனியா காந்தி தேர்வானது அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் முடிந்த பின்னர், அக்கட்சியின் தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் ஹரிஷ் ராவத் ஆகியோர், சோனியா காந்தி தற்காலிக தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், ராகுல் காந்தியின் பதவி விலகல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்கள்.

ஏற்கனவே மோசமான நிலையில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு நேரு – காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே மீண்டும் தலைவர் பதவிக்கு வருவது உதவியாக அல்லாமல் சுமையாகவே இருக்கும் என்கிறார் அரசியல் ஆய்வாளரான வினோத் சர்மா.

தற்போது இடைக்கால தலைவராகத் தேர்வாகியுள்ள சோனியா காந்தியே மீண்டும் முழு நேரத் தலைவராத் தேர்வாக வாய்ப்புண்டு என்று கூறும் வினோத் சர்மா, தற்போதைய சூழலில் ஒரு செயல் தலைவரைக்கூட தேர்வு செய்ய முடியாத நிலையில் இருக்கும் காங்கிரஸ் கட்சியால் எவ்வாறு முழு நேரத் தலைவர் ஒருவரைத் தேர்வு செய்ய இயலும் என்று கேள்வி எழுப்புகிறார்.

உள்கட்சித் தேர்தலில் நேரத்தைச் செலவழிக்காமல் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தல்களுக்குத் தாயாராவதே காங்கிரஸ் கட்சிக்கு பலனளிக்கும் என்றும் வினோத் சர்மா கருதுகிறார்.

முகுல் வாஸ்னிக், மல்லிகார்ஜுன கார்கே, சச்சின் பைலட், ஜோதிராத்திய சிந்தியா உள்ளிட்டோர் தலைவர் பதவிக்கு பரிசீலனை செய்யப்படுவதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இரண்டாகப் பிரிக்கப்பட்டு தற்போது யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ள ஜம்மு & காஷ்மீர், மஹாராஷ்டிரடா, பிகார், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கிவரும் சூழலில் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விபரம்

மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்கள் மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ஆராய்ந்தது.

அதன்படி, ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு ராகுல் காந்தியிடம் கோரப்பட்டது. எனினும், தனது பதவி விலகலை திரும்ப பெற ராகுல் காந்தி மறுத்துவிட்டார்.

அதை தொடர்ந்து, காங்கிரஸ் காரிய கமிட்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முழு நேர தலைவராக ஒருவரை தேர்ந்தெடுக்கும் வரை சோனியா காந்தியிடம் இடைக்கால தலைவராக தொடர வேண்டுமென்று கோரிக்கை வைக்க ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு இடையில் வந்து ராகுல் காந்தி கலந்து கொண்டார், சோனியா இடைக்கால தலைவராக தேர்வு செய்த அறிவிப்பு வெளியாவதற்கு சற்று முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியில் காஷ்மீர் பிரச்சனை பற்றி விவாதிக்கப்பட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

இந்த கூட்டம் நடைபெற்ற வேளையில், ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் வன்முறை நிகழ்வதாகவும், சிலர் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் வந்தன. அதன் பின்னர் தான் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டதாக ராகுல் காந்தி கூறினார்.

Please follow and like us: