காஞ்சீபுரத்தில் நின்ற கோலத்தில் அத்திவரதர் தரிசனம்

காஞ்சீபுரத்தில் நின்ற கோலத்தில் அத்திவரதர் தரிசனம்

காஞ்சீபுரம்,

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கியது.

அத்திவரதர்

முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும் (படுத்த நிலையில்) பிந்தைய 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் அருள்பாலிப்பார் என்று கோவில் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதாவது ஜூலை 1-ந்தேதி முதல் 24-ந் தேதி வரையிலான முதல் 24 நாட்களுக்கு சயன கோலத்திலும், 25-ந்தேதி முதல் இந்த மாதம் (ஆகஸ்டு) 17-ந் தேதி வரையிலான 24 நாட்களுக்கு நின்ற கோலத்திலும் அத்திவரதர் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி, அத்திவரதர் சயன கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வந்த நிலையில், திடீரென்று அத்திவரதர் சயன கோலத்தில் 31 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி அத்திவரதரின் சயனகோலம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.

பக்தர்கள் தரிசனம்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மத்திய மந்திரிகள், தமிழக அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள் என முக்கிய பிரமுகர்கள் பலரும் சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் திரளாக வந்து அத்திவரதரை தரிசித்தனர். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து சென்றனர். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் தரிசனம் நடைபெறுவதால் முதியோர்கள் பெருமளவில் வருகை தந்தனர்.

ஜூலை 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதரை 48 லட்சத்து 15 ஆயிரம் பக்தர்கள் தரிசித்தனர்.

நின்ற கோலம்

அத்திவரதரை நின்ற கோலத்தில் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கின. இந்த பணியில் 21 அர்ச்சகர்கள் ஈடுபட்டனர்.

அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி அளித்த அதே இடத்தில் பீடம் அமைக்கப்பட்டு, நின்ற கோலத்தில் அத்திவரதர் நள்ளிரவு 12 மணி அளவில் நிறுத்தப்பட்டார். நின்ற கோலத்தில் அத்திவரதரை தரிசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே கோவிலுக்கு வெளியே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர்.

அலைமோதிய கூட்டம்

இந்த நிலையில் சிறப்பு பூஜைகள் முடிவடைந்து அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்குள் வரிசையாக அனுமதிக்கப்பட்டனர். சந்தனம் மற்றும் நீல நிற பட்டாடையில் நின்ற கோலத்தில் அருள்பாலித்த அத்திவரதரை பக்தர்கள் தரிசித்தனர். நின்ற கோல தரிசனத்தின் முதல் நான் என்பதால் நேற்று ஏராளமானவர்கள் வந்து இருந்தனர். இதனால் மதியத்துக்கு பிறகு காஞ்சீபுரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதரை வழிபட்டவர்களும், நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் அத்திவரதரை தரிசிக்க நேற்று வந்து இருந்தனர். 2 கோலத்திலும் அத்திவரதரை தரிசித்தது வாழ்நாள் பாக்கியம் என்று பலர் பூரிப்பு அடைந்தனர்.

கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்

சயன கோல தரிசன வழிபாட்டின் போது கூட்டநெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் பலர் மயக்கம் அடைந்தனர். எனவே நின்ற கோல தரிசன வழிபாட்டில் அதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருக்கிறது.

பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கு வசதியாக பொது தரிசனத்துக்கு 3 வழிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. வயதானவர்கள், கர்ப்பிணிகள் செல்வதற்கு தனி வழி, சக்கர நாற்காலிகளில் செல்பவர்களுக்கு தனி வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

சயன கோலத்தில் அத்திவரதரை தரிசிக்க முடியாதவர்கள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் அத்திவரதரை தரிசிக்க வருவார்கள். ஏற்கனவே வழிபட்டவர்களும் நின்ற கோலத்தில் அத்திவரதரை தரிசிக்க ஆர்வம் காட்டுவார்கள். எனவே இனி வரும் நாட்களில் அத்திவரதரை தரிசிக்க வரும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்களுக்கு அன்னதானம்

அத்திவரதர் விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அன்னதானம் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. அன்னதான திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச்செயலாளர் பணீந்திர ரெட்டி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அன்னதான திட்டத்திற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.1 லட்சம் வழங்கி உத்தரவிட்டார். மேலும் பொதுமக்களிடம் இருந்து ரூ.10 லட்சம் நன்கொடையாக பெறப்பட்டு அன்னதான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அத்திவரதர் விழாவில் அன்னதானம் வழங்கிட 46 தன்னார்வ அமைப்பினருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அன்னதான திட்டத்திற்கு நன்கொடை அளிக்க விரும்புகிறவர்கள் மாவட்ட நிர்வாகத்திடமோ அல்லது ஆன்-லைன் மூலமோ வழங்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Please follow and like us: