2018-ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமி விருதுகள் அறிவிப்பு

2018-ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமியின் ஃபெலோஷிப் (அகாடமி ரத்னா) மற்றும் சங்கீத நாடக அகாடமி விருதுகள் (அகாடமி புரஸ்கார்) பெறுவோர் பட்டியலை சங்கீத நாடக அகாடமியின் பொதுக்குழு அறிவித்துள்ளது

இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அமைப்பான சங்கீத நாடக அகாடமியின் பொதுக்குழுக் கூட்டம், அஸ்ஸாம் மாநிலம், குவஹாத்தியில் 26, ஜுன் 2019 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலைத்துறை வித்தகர்களான ஜாஹிர் ஹுசேன், சோனல் மான்சிங், ஜதின் கோஸ்வாமி மற்றும் கே.கல்யாணசுந்தரம் பிள்ளை ஆகிய நான்கு பேர் சங்கீத நாடக அகாடமியின் ஃபெலோஷிப் (அகாடமி ரத்னா) பெறுவதற்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் தவிர, இசை, நடனம், நாடகம், பாரம்பரிய / நாட்டுப்புற / பழங்குடி இசை / நடனம் / நாடகம், பொம்மலாட்டம் போன்ற பிரிவுகள் மற்றும் ஒட்டுமொத்த பங்களிப்புக்காக 44 கலைஞர்களும், சங்கீத நாடக அகாடமி விருது (அகாடமி புரஸ்கார்) பெறுவதற்கு பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டனர்.

இசைப் பிரிவில், கர்நாடக வாய்ப்பாட்டுப் பிரிவில் அலமேலு மணி, மல்லாடி சூரிபாபு, கர்நாடக இசைக் கருவிகள் பிரிவில் நாதஸ்வர கலைஞர்கள் எஸ்.காசிம் & எஸ்.பாபு (கூட்டாக), வயலின் பிரிவில் கணேஷ் & குமரேஷ் (கூட்டாக), நடனப் பிரிவில் பரதநாட்டிய கலைஞர் ராதா ஸ்ரீதர் உள்ளிட்டோரும் விருதுபெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அகாடமி ஃபெலொஷிப் பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தலா 3,00,000 (மூன்று லட்சம்) ரூபாய் பரிசுத் தொகையும், அகாடமி விருது பெறுவோருக்கு தலா 1,00,000 (ஒரு லட்சம்) ரூபாய் பரிசுத் தொகையும், தாமிரப் பத்திரம் மற்றும் அங்கவஸ்திரமும் பரிசாக வழங்கப்படும்.

சங்கீத நாடக அகாடமி சார்பில் நடைபெறும் சிறப்பு விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவரால் இந்த விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படும்.

Please follow and like us: