தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் ஆனார் உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் ஆனார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டு இருக்கிறார்.

சினிமாவில் இருந்து அரசியல்

நடிகர் விஜய் நடித்த ‘குருவி’ படத்தை தயாரித்து, கடந்த 2008-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின். 2012-ம் ஆண்டு வெளியான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார்.

தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்தும், தயாரித்தும் வருகிறார். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சினிமா, அரசியல் இரண்டிலும் கால் தடம் பதித்தது போன்று, அவரது பேரனாகிய உதயநிதி ஸ்டாலினும் சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் காலடி எடுத்து வைத்தார். தி.மு.க. நடத்திய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தி.மு.க.வினரின் குடும்ப விழாக்களிலும் கலந்துகொண்டார்.

இதைத்தொடர்ந்து ‘முரசொலி’ நிர்வாக மேலாண்மை இயக்குனர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு ‘முரசொலி’ நாளிதழ் பவள விழாவை உதயநிதி ஸ்டாலின் முன்னின்று சிறப்பாக நடத்தி காட்டினார்

தேர்தல் பிரசாரம்

தி.மு.க.வில் அவருக்கு பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்றாலும், தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். தி.மு.க. நட்சத்திர பேச்சாளர் போன்று அவர் ஒவ்வொரு தொகுதியிலும் வலம் வந்தார்.

தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து, அதற்கான பரிசாக உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலினிடம் மூத்த நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தனர்.

இதையடுத்து அவருக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. அதற்கு ஏற்றார் போல் தி.மு.க. இளைஞரணி செயலாளர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் விலகப் போவதாக கடந்த மாதம் தகவல் வெளியானது.

அப்போது இந்த தகவலை மறுத்த அவர், ‘உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி கொடுப்பது பற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உரிய நேரத்தில் முடிவு எடுப்பார்’ என்று விளக்கம் அளித்தார்.

இளைஞர் அணி செயலாளர்

இந்தநிலையில் ஏற்கனவே எதிர்பார்த்தது போன்று தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. இளைஞரணி செயலாளராக பணியாற்றி வரும் மு.பெ.சாமிநாதன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கட்சியின் சட்டதிட்ட விதி 18,19 பிரிவுகளின்படி இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார்.

ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்கள் இவருடன் இணைந்து பணியாற்றுவார்கள். தி.மு.க. சட்ட திட்ட விதி 26- பிரிவு 1-ன்படி ஏற்கனவே உயர்நிலை செயல்திட்டக் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களுடன் மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்படுகிறார்.

கட்சி சட்டதிட்ட விதி 26-ன்படி தி.மு.க. இளைஞர் அணி இணைச்செயலாளராக பணியாற்றி வரும் சுபா சந்திரசேகர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு தி.மு.க. சட்டதிட்ட திருத்தக் குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட சட்டதிட்ட திருத்தக் குழு நிர்வாகிகளோடு இவர் இணைந்து பணியாற்றுவார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

41 வயதில் பதவி

1980-ம் ஆண்டு மதுரையில் நடந்த கூட்டத்தில் அப்போதைய தி.மு.க. தலைவர் கருணாநிதி கட்சியில் இளைஞரணி அமைப்பை புதிதாக உருவாக்கினார். தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். இப்பொறுப்பு 1984-ம் ஆண்டு தி.மு.க. இளைஞரணி செயலாளர் பதவியாக மாற்றம் செய்யப்பட்டது. தி.மு.க. இளைஞரணி செயலாளராகவும் மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.

மு.க.ஸ்டாலின் அப்பதவியில் 2017-ம் ஆண்டு வரை நீடித்தார். கருணாநிதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது, அவருக்கு செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து 33 ஆண்டுகள் தான் வகித்து வந்த இளைஞரணி செயலாளர் பதவியை மு.க.ஸ்டாலின் துறந்தார். அதன்பின்னர் தி.மு.க. இளைஞரணி செயலாளராக வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்டார். தற்போது அவர் விடுவிக்கப்பட்டு உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளராகி உள்ளார். மு.க.ஸ்டாலினுக்கு 31 வயதில் கிடைத்த இளைஞரணி செயலாளர் பதவி அவரது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு 41 வயதில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மு.க.ஸ்டாலினிடம் ஆசி

தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் பதவி கிடைத்தவுடன் உதயநிதி ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது தந்தையும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு சென்றார்.

அங்கு மு.க.ஸ்டாலின் மற்றும் தனது தாயார் துர்காவிடம் ஆசி பெற்றார். அப்போது அங்கு அவருக்கு தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தி.மு.க. இளைஞரணியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் அண்ணா அறிவாலயத்தில் மேள-தாளம் முழங்க இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

வைகோ வாழ்த்து

உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க.வில் இளைஞர் அணி என்ற புதிய அமைப்பை, கருணாநிதி உருவாக்கினார். அந்த அணியை கட்டமைக்கும் பணியை, மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டு, தமிழகம் முழுமையும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வலுவுள்ள அமைப்பாக வார்ப்பித்தார். அந்த அணியின் புதிய செயலாளராக, உதயநிதி ஸ்டாலினை நியமித்திருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன்.

உதயநிதி ஸ்டாலின், கலை உலகில் தமது திறமையை வெளிப்படுத்தி, தமிழக மக்களின் மனங்களில் ஒரு இடத்தை பெற்று இருக்கின்றார். முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குனராகவும் பொறுப்பு வகித்து வருகின்ற உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பையும் வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டுவார் என நம்புகிறேன். அவருக்கு என் பாராட்டுகளையும், நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பதே என்னுடைய இலக்கு- உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- எனக்கு கொடுக்கப்பட்டுள்ளதை பதவி என்று நான் சொல்லமாட்டேன். பொறுப்பாக கருதியே என்னிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்திருக்கிறார். என் மீது நம்பிக்கை வைத்து இந்த மிகப்பெரிய பொறுப்பை வழங்கியதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோல வாழ்த்துகளை தெரிவித்த மாவட்ட செயலாளர்களுக்கும், கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு இந்த பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. இது எனக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரமாகவும், பொறுப்பாகவும் நான் கருதவில்லை. ஒட்டுமொத்த தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன். நான் தொடக்கத்தில் இருந்து கூறி வருவது போன்று தொண்டர்களில் ஒருவராக இருப்பதையே விரும்புகிறேன். இந்த பொறுப்பில் நிறைய சவால்கள், பணிகள் இருக்கிறது. அதனை பேசுவதை விடவும் செயல்களில் காண்பிப்பதையே நான் விரும்புகிறேன்.

தி.மு.க.வை வளர்ப்பதற்கும், இளைஞரணியை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கும், இளைஞரணியில் மேலும் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பதே என்னுடைய முதலாவது இலக்காக இருக்கும். 2 படங்களுக்கான படப்பிடிப்புகள் இருக்கிறது. இருந்தாலும் எனக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகாக்க நேரத்தை ஒதுக்கி செலவிடுவேன். உள்ளாட்சி தேர்தலில் மேயர் வேட்பாளராக போட்டியிடுவது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Please follow and like us: