ஹார்வர்டில் தமிழ் இருக்கை: விஷால் ரூ.10 லட்சம் நிதி

ஹார்வர்டில் தமிழ் இருக்கை: விஷால் ரூ.10 லட்சம் நிதி

ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் தமிழ் இருக்கைக்காக நடிகர் விஷால் ரூ. 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இது குறித்து நடிகர் விஷால் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
கடந்த 380 ஆண்டுகளாக இயங்கி வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக ஓர் இருக்கை அமைய அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் சம்பந்தமும் ஜானகிராமனும் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மூன்று கோடி பேர் பேசும் உக்ரைன் மொழிக்கும் ஒன்றரைக் கோடி பேர் பேசும் செல்டிக் மொழிக்கும் ஹார்வர்டில் இருக்கைகள் உள்ளன. ஹீப்ரு, சம்ஸ்கிருத மொழிகளுக்கும் இருக்கின்றன.
ஆனால், 8 கோடி பேர் பேசும் தமிழுக்கு இருக்கை இல்லை என்பது நாம் அனைவரும் கவலைப்பட வேண்டியது.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதற்கு நன்றிகள். தமிழுக்கு அங்கே ஓர் இருக்கை அமைக்க சுமார் ரூ. 40 கோடி தேவைப்படும் நிலையில் இதுவரை ரூ. 17 கோடி தான் சேர்ந்துள்ளது.
எனது சார்பில் ரூ. 10 லட்சம் செலுத்துகிறேன். உலகளாவிய தமிழர்கள் ஒன்றுபட்டு இதற்கான நிதி, விரைவில் சேர உதவ வேண்டும் மத்திய அரசும் இந்த வரலாற்றுச் சிறப்புக்கு உதவ வேண்டும்.

Please follow and like us: