சுகாதார திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசுக்கு உலக வங்கி ரூ.2 ஆயிரம் கோடி கடன் – டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தானது

சுகாதார திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசுக்கு உலக வங்கி ரூ.2 ஆயிரம் கோடி கடன் – டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்திய அரசு, தமிழக அரசு மற்றும் உலகவங்கி இடையில், தமிழ்நாடு சுகாதார முறைமை சீரமைப்புத் திட்டத்துக்காக 287 மில்லியன் டாலர் கடனுக்கான ஒப்பந்தம் கையெழுத்து

புதுடெல்லி, 5 ஜூன் 2019

இந்திய அரசு, தமிழக அரசு மற்றும் உலக வங்கிக்கு இடையில், தமிழக சுகாதார முறைமை சீரமைப்புத் திட்டத்துக்காக 287 மில்லியன் டாலர் கடனுக்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. தமிழகத்தில் சுகாதார வசதியின் தரத்தை மேம்படுத்துதல், தொற்றாத நோய்களின் (NCD) சுமையைக் குறைத்தல், குழந்தை பிறப்பு தள்ளிப் போவதை சரி செய்யும் சிகிச்சை மற்றும் குழந்தைகள் சுகாதார சேவைகளில் உள்ள இடைவெளியை நீக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

நிதி ஆயோக் சுகாதார குறியீட்டு அடிப்படையில் இந்திய மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. சுகாதார சேவைகளில் பெருமளவு முன்னேற்றம் அடைந்திருப்பதன் மூலம் இது வெளிப்படுகிறது. 2005 ஆம் ஆண்டில் உயிருடன் பிறக்கும் ஒரு லட்சம் குழந்தைகளில், 90 குழந்தைகள் உயிரிழக்க நேரிடுகிறது என்ற விகிதாச்சாரம், 2015-16ல் 62 ஆகக் குறைந்துள்ளது. அதே காலக்கட்டத்தில் சிசு மரணம் ஆயிரம் குழந்தைகளில் 30 என்றிருந்த நிலை மாறி 20 எனக் குறைந்துள்ளது. உலக வங்கியின் முந்தைய ஆதரவுடன் 108 ஆம்புலன்ஸ் சேவைகள் வசதி மற்றும் அவசர கால மகப்பேறு மற்றும் அப்போது பிரசவித்த குழந்தைகள் நலன் மையங்கள் உருவாக்கப்பட்டது ஆகியவை இந்த முன்னேற்றங்களுக்கு முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. அவசரகால மகப்பேறு மையம் மற்றும் அப்போது பிரசவித்த குழந்தைகள் நல மையத்துக்குச் செல்வதற்கு, எந்த ஒரு தாயும் 30 நிமிடங்களுக்கு மேல் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்பதை இந்த வசதிகள் உறுதி செய்கின்றன. இந்த மையங்கள் வாரத்தின் எல்லா வேலை நாட்களிலும், 24 மணி நேரமும் செயல்படுகின்றன.

இத்தகைய நல்ல முன்னேற்றங்கள் உள்ளபோதிலும், குழந்தை பிறப்பு தள்ளிப் போவதை சரி செய்யும் சிகிச்சை மற்றும் குழந்தைகள் ஆரோக்கியம் உள்ளிட்ட அம்சங்களில் மாவட்ட அளவில் தரமான வசதிகள் கிடைக்காமல் உள்ளன. அதிகரித்து வரும் தொற்றா நோய்கள் பிரச்சினையும் தமிழகத்தில் அதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் ஏற்படும் இறப்புகளில் ஏறத்தாழ 69 சதவீதம் இந்த நோய்களால் ஏற்படுகிறது.

தமிழ்நாடு சுகாதார முறைமை சீரமைப்புத் திட்டம் பின்வரும் வகைகளில் மாநில அரசுக்கு ஆதரவு அளிப்பதாக இருக்கும்:

· கிளினிக்கல் நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்குதல்;

· அரசுத் துறையில் ஆரம்ப, துணைநிலை மற்றும் கடைநிலை ஆரோக்கிய சேவை வசதிகளுக்கு தேசிய அளவிலான அங்கீகாரம் பெறுதல்;

· தொடர் மருத்துவக் கல்வி மூலமாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்ரும் மருத்துவம் சார்ந்த அலுவலர்கள் திறனை பலப்படுத்துதல்;

· தரமான மற்றும் பிற தகவல்களை மக்களுக்கு கிடைக்கச் செய்வதன் மூலம் அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையில் கருத்தறியும் வசதியை பலப்படுத்துதல்.

அரசுத் துறையில் முதலீடு செய்வதன் மூலம் சுகாதார முறைமை செயல்பாடுகளை எப்படி அடுத்த நிலைக்கு கொண்டு செல்லலாம் என்பதற்கு ஒரு முன்மாதிரியை தமிழகத்தால் உருவாக்கி, மற்ற மாநிலங்களுக்கு கற்றுத் தர முடியும் என்று நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை கூடுதல் செயலாளர் திரு.சமீர்குமார் காரே தெரிவித்தார். இந்த முயற்சியில் மாநில அரசுக்கு உலக வங்கி உதவி செய்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் இந்திய அரசின் சார்பில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை கூடுதல் செயலாளர் திரு.சமீர்குமார் காரே, தமிழக அரசின் சார்பில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைச் செயலாளர் திருமதி.பீலா ராஜேஷ், உலக வங்கி சார்பில் இந்தியாவுக்கான அதன் இயக்குநர் திரு.ஹிஷ்சம் ஆப்தோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.

“நல்ல பலன்கள் கிடைப்பதற்காக நிறுவனம் சார்ந்த மற்றும் அரசுத் துறை அளவில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் வசதிகளை வலுப்படுத்துவதாக இந்தத் திட்டம் இருக்கும். உலகின் பிற பகுதிகளில் அரசு சுகாதார சேவை மேலாண்மையை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் நிலையில், வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும், பொறுப்புணர்வை பலப்படுத்தவும் தமிழகத்தில் நல்ல நடைமுறைகளும், புதுமை சிந்தனைகளும் அதிகரிக்கப் படுகின்றன” என்று உலக வங்கியின் இந்தியாவுக்கான இயக்குநர் திரு.ஹிஷ்சம் ஆப்தோ கூறினார்.

மக்கள் தொகை சார்ந்த கணக்கெடுப்புகளை ஊக்குவித்தல், தொற்றா நோய்கள் குறித்த விஷயத்தில் சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பு வசதிகள், கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுகளை மேம்படுத்துதல் ஆகிய அம்சங்களைக் கொண்டதாக இந்தத் திட்டம் இருக்கும். தங்களுடைய உடல்நிலைக்கு ஏற்ப தாங்களாகவே கையாளும் வகையில் நோயாளிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்படும். மன ஆரோக்கிய வசதிகளை பலப்படுத்தும் வகையில் ஆய்வக சேவைகள் மற்றும் ஆரோக்கிய சேவை அளிக்கும் திறன் ஆகியவை பலப்படுத்தப்படும். சாலை விபத்துகளில் காயம் அடைவோருக்கு சிகிச்சை அளிக்கும் பிரச்சினையைக் கையாள்வதற்காக, மருத்துவமனை கவனிப்பு வசதிகள் இத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும். நடைமுறைகள் பலப்படுத்தப்பட்டு, வாரத்தின் எல்லா வேலை நாட்களிலும் 24 மணி நேர அவசர சிகிச்சை வசதிகள் உருவாக்கப்பட்டு அதற்கான பதிவு வசதிகளும் உருவாக்கப்பட உள்ளன.

குழந்தை பிறப்பு தள்ளிப் போவதை சரி செய்யும் சிகிச்சை மற்றும் குழந்தை ஆரோக்கிய வசதியில் உள்ள இடைவெளியைக் குறைப்பது இந்தத் திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சமாக இருக்கும். ஒன்பது முன்னுரிமை மாவட்டங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். மாநிலத்தில் குழந்தைப்பேறு மற்றும் குழந்தை ஆரோக்கிய சிகிச்சை வசதி குறைவாக உள்ள மற்றும் ஒப்பீட்டளவில் மலைவாழ் மக்கள் தொகை அதிகமாக உள்ளவையாக இந்த மாவட்டங்கள் இருக்கும்.

“பலன்களுக்கான செயல்முறைத் திட்டம் என்பதன் மூலமாக அல்லாமல், பலன்கள் பெறுவதில் கவனம் செலுத்துவதாக (PforR) இந்தத் திட்டம் இருக்கும். செலவுகள் மற்றும் பயன்களுக்கு ஊக்கத் தொகை ஆகியவற்றை நல்ல முறையில் ஒருங்கிணைப்பதன் மூலம் நல்ல பலன்களைப் பெறுவதில் அதிக கவனம் செலுத்துவதாக இந்தத் திட்டம் இருக்கும்” என்று உலக வங்கியின் இந்தியாவுக்கான பிரிவின் மூத்த சுகாதார நிபுணரும், இந்தத் திட்டத்துக்கான பணிக் குழு தலைவருமான திரு.ரிபாத் ஹசன் தெரிவித்தார். சுகாதாரத் துறையில் PforR நடைமுறை பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்றும், மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியை இது உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Please follow and like us: