என்ஜிகே (NGK) சினிமா விமர்சனம் ரேட்டிங் 3/5

என்ஜிகே (NGK)

சினிமா விமர்சனம் ரேட்டிங் 3/5

ட்ரீம் வாரியார் பிச்சர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயிண்ட்மெண்ட் சார்பில்; எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் என்ஜிகே திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் செல்வராகவன்.
சூர்யா ,சாய்பல்லவி ,ரகுல் பிரீத் சிங், நிழல்கள் ரவி, உமாபத்மநாபன்,தேவராஜ்,இளவரசு, பொன் வண்ணன்,வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய், ராஜ்குமார் , பாலாசிங் ஆகியோர் நடித்துள்ளனர்.
; தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை- யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு-சிவகுமார் விஜயன், பாடல்கள்-கபிலன், விக்னேஷ்சிவன், உமாதேவி, எடிட்டிங்-பிரவீன்.கே.எல், தயாரிப்பு வடிவம்-ஆர்.கே.விஜய் முருகன், சண்டை-அனல்அரசு, நடனம்-கல்யாண், உடை-நீரஜா கோனா, பெருமாள் செல்வம், ஒலி-சச்சின், ஹரி, வண்ணம்-ராஜசேகர், புகைப்படம்-சிற்றரசு, ஒப்பனை-வி.ராஜா, தயாரிப்பு மேற்பார்வை-பி.எஸ்.ராஜேந்திரன், தயாரிப்பு நிர்வாகம்-அர்விந்த்ராஜ்; பாஸ்கரன், பிஆர்ஒ- ஜான்சன்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் முதுகலை பட்டதாரி பொறியாளரான சூர்யா நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தாலும் அதை விட்டு விட்டு இயற்கை விவசாயம் செய்கிறார். தன் பெற்றோர், மனைவி சாய் பல்லவியோடு மன நிறைவோடு வாழ்ந்து வருகிறார். இவரின் இயற்கை விவசாயத்தால் ஈர்க்கப்பட்டு பல படித்த இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட, சூர்யாவின் பொதுநல தொண்டால் அந்த தொகுதியில் நல்ல பெயருடன் வலம் வருகிறார். இந்நிலையில் இவரால் தொழிலில் பாதிக்கப்படும் ரசாயன உர வியாபாரிகள், கந்துவட்டிகாரர்கள் அரசியல் பின்பலத்துடன் வந்து மிரட்டுகின்றனர். இவர்களால் பல கஷ்டங்களை அனுபவிக்கும் சூர்யா தன் நண்பன் ராஜ்குமார் உதவியுடன் எதிர்கட்சி எம்ல்ஏ இளவரசு சிபாரிசில் பிரச்னை முடிவுக்கு வருகிறது. இதற்கு கைமாறாக தன் அரசியல் கட்சியில் இளைஞர்கள் சேர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார் எம்எல்ஏ இளவரசு. வேறு வழியின்றி அரசியல் கட்சியில் சேரும் சூர்யா, பல காரியங்களை எளிதாக சாதிக்கும் அரசியல் தலைவர்களின் பலத்தை அறிந்து படிப்படியாக உயர அதில் மும்முரமாக ஈடுபடுகிறார். முதலில் எதிர்கட்சி தலைவர் பொன்வண்ணனின் மூளையாக செயல்படும் கார்ப்பரெட் கம்பெனிகளை கைப்பிடியில் வைத்திருக்கும் ரகுல் பீரித்சிங்கின் அறிமுகம் கிடைக்க, அவரை வைத்து அரசியல் கட்சியில் முன்னேறுகிறார்.இறுதியில் சூர்யாவின் அரசியல் தலைவராகும் லட்சியம் நிறைவேறியதா? பல சோதனைகளை தாண்டி வெற்றி பெற்றாரா? இதனால் இழந்தது என்ன? என்பதே மீதிக்கதை.

நந்த கோபாலன் குமரனாக சூர்யா படம் முழுவதும் தன்னால் முடிந்தவரை ஒன் மேன் ஆர்மியாக படத்தை தன் நடிப்பால் ஈர்க்கச் செய்கிறார். அரசியல் கலந்த சமூக விழிப்புணர்ச்சி ஏற்படுத்த பாடுபடும் இளைஞனின் கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பாக நடித்திருப்பது சிறப்பு.
சாய்பல்லவி முதலில் அப்பாவியாக வந்து பின்னர் சந்தேகப்படும் மனைவியாக சில இடங்களில் மிகையாக நடித்திருக்கிறார். ரகுல் பிரீத் சிங் நவீனகால சாதுர்யமாக பேசி வேலைகளை முடிக்கும் அழகு பெண்ணாக வந்தாலும் இவரின் பங்களிப்பு சரியாக காட்டப்படவில்லை.
மேஜர் ஜெனரல் தந்தையாக நிழல்கள்ரவி, தாயாக உமா பத்மநாபன்,முதல்வராக தேவராஜ்,எம்எல்ஏவாக இளவரசு, எதிர்கட்சி தலைவர் பொன் வண்ணன், வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய், நண்பராக ராஜ்குமார் , பாலாசிங் மற்றும் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளத்தில் படம் முழுக்க சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் அதிர வைக்கும் பாடல்களும் பின்னணி இசையும் அசர வைத்து தாளம் போட வைக்கிறது.
குடும்பப் பின்னணியை காட்சிகளோடு ஒன்றிணைத்து காட்டிய விதம், சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள்,சமூக அக்கறை கலந்து அரசியல் பின்னணியில் அனைத்தையும் ஒன்றிணைத்து காட்சிக் கோணங்களை கொடுத்து பிரமிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன்.
எந்த காட்சியை இணைத்து படத்தை கோர்வை யாக கொடுப்பது என்று தடுமாறியிருக்கிறார் எடிட்டர் பிரவீன் கே.எல் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
எழுத்து, இயக்கம்-செல்வராகவன். ஏற்கனவே பார்த்த படங்களான அமைதிப்படை, ஆயுத எழுத்து, சமீபத்தில் வெளியான நோட்டா, எல்கேஜி ஆகிய படங்களின் கலவையாக அரசியல் சார்ந்த கதையை கொடுத்து அதில் வலுவான நடிகர்;;கள் இருந்தும் திரைக்கதையில் இருக்கும் தோய்வை சரிசெய்ய முடியாமல் தவித்திருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். அடிமட்ட நிலையில் இருக்கும் தொண்டன் எவ்வாறு முதல் மந்திரி பதவிக்கு வருகிறார் என்பதை சரிவர விவரிக்கப்படாமல் ஏனோ தானோ என்று தான்தோன்றித்தனமாக கொடுத்து சூர்யாவின் நேரத்தையும், உழைப்பையும் வீணடித்திருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். முதல் பாதி நம்பகத்தன்மையாக இருந்தாலும் இரண்டாம் பாதி நம்பமுடியாத வண்ணம் காட்சியமைப்புடன் சோதித்து விட்டார் இயக்குனர் செல்வராகவன்.
மொத்தத்தில் என்ஜிகே (NGK) சூர்யா ரசிகர்களுக்கான படம்.

Please follow and like us: