அவசர மருத்துவ சிகிச்சைக்கு புதிய செயலி அறிமுகம்ஆம்புலன்ஸ் வீடு தேடி வந்து அழைத்து செல்லும்

அவசர மருத்துவ சிகிச்சைக்கு புதிய செயலி அறிமுகம்ஆம்புலன்ஸ் வீடு தேடி வந்து அழைத்து செல்லும்

சென்னை, சென்னையில் அவசர மருத்துவ சிகிச்சைக்கு ‘ஸ்பாட் ரஷ்’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியில் உள்ள ‘எமர்ஜென்சி’ என்ற பட்டனை அழுத்தினால் அவசர சிகிச்சை தேவைப்படுபவரின் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் விரைவாக வந்து சேரும். இதன்பின்பு ஆம்புலன்ஸ் மூலம் சம்பந்தப்பட்ட நபர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவார். அங்கு அவருக்கு விரைவான சிகிச்சை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த செயலி பல் மருத்துவர் எம்.குமரன், ஜெரோம் அந்தோணி தாஸ் மற்றும் குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி அறிமுக விழா சென்னையில் நேற்று நடந்தது. மலேசிய தூதரக அதிகாரி முசாபர்ஷா ஹனாபி, ரெயில்வே டி.ஐ.ஜி. வி.பாலகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையத்தின் டாக்டர் எலிசபெத், கற்பகவிநாயகா மருத்துவக்கல்லூரியின் மருத்துவ இயக்குனர் சத்தியநாராயணன், ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரி முத்துசாமி ஆகியோர் செயலியை அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தனர்.

இலவச சேவை

இந்த செயலியின் செயல்பாடு மற்றும் பயன்கள் குறித்து அதனை உருவாக்கிய குழுவினர் கூறியதாவது:-

மருத்துவ உதவி கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தால் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. இதுபோன்ற காரணத்தால் எந்த உயிரிழப்பும் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த செயலியை உருவாக்கி உள்ளோம். இந்த செயலியை பொறுத்தமட்டில் இலவசமான சேவையை வழங்கவே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை ஒவ்வொருவரும் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ளலாம். யாரும் உதவிக்கு இல்லாத போது அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் இந்த செயலியில் உள்ள எமர்ஜென்சி என்ற பட்டனை அழுத்தினால் போதும். பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் பகுதிக்கு மிக அருகில் இருக்கும் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் உடனடியாக வந்து விடும்.

சுய விவரங்களை பதிவிட வேண்டும்

இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும்போது சம்பந்தப்பட்ட நபரின் பெயர், முகவரி, செல்போன் எண், உறவினர்கள் விவரம், அவர்களது செல்போன் எண் போன்ற எல்லா விவரங்களையும் பதிவிட வேண்டும்.

இந்த பதிவு அடிப்படையில் தான் ஆம்புலன்ஸ் யாருடைய உதவியும் இல்லாமல் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்களின் செல்போனுக்கும் தானாகவே தகவல் சென்று விடுகிறது. அதேபோன்று சாலையில் நடக்கும் விபத்துகளுக்கும் அவசர சிகிச்சை தேவைப்படின் இந்த செயலியில் உள்ள ‘ஹெல்ப் அதர்ஸ்’ என்பதை தேர்வு செய்து ஆம்புலன்சை வரவழைக்கலாம்.

விரிவுபடுத்தப்படும்

இந்த அவசர சிகிச்சைக்காக சென்னை மாநகர பகுதி மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த செயலி செயல்பாடு வரும்காலங்களில் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Also Read:

SPOTRUSH App to help people in medical emergencies

Please follow and like us: