இந்தியன் வங்கியின் கடந்த ஆண்டு நிகர லாபம் ரூ.322 கோடி தலைவர் பத்மஜா சுந்துரு தகவல்

இந்தியன் வங்கியின் கடந்த ஆண்டு நிகர லாபம் ரூ.322 கோடி தலைவர் பத்மஜா சுந்துரு தகவல்

சென்னை, இந்தியன் வங்கியின் நிர்வாகக்குழு இயக்குனர்கள் கூட்டம் வங்கியின் தலைவர் பத்மஜா சுந்துரு தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. செயல் இயக்குனர்கள் எம்.கே.பட்டாச்சார்யா, வி.வி.செனாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், 2018-2019-ம் நிதி ஆண்டு மற்றும் 4-வது காலாண்டின் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கைக்கு நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்தது. பின்னர் இந்தியன் வங்கி தலைவர் பத்மஜா சுந்துரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியன் வங்கியில் கடந்த நிதி ஆண்டில் 4 லட்சத்து 29 ஆயிரத்து 972 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதில், ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் டெபாசிட்டாக பெறப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டைவிட தனிநபர் பரிவர்த்தனை 13 சதவீதமும், விவசாயம் மூலம் 25 சதவீதமும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூலம் 15 சதவீதமும் வர்த்தகம் அதிகரித்துள்ளது.

கடந்த நிதி ஆண்டில் ரூ.21,068 கோடி வருமானமாக கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டைவிட இது 8 சதவீதம் அதிகம். வட்டி மூலம் மட்டும் ரூ.19,185 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது 12 சதவீதம் கூடுதல். 2018-2019-ம் நிதி ஆண்டின் நிகர லாபம் ரூ.322 கோடி.

கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. ரூ.13,300 கோடி அளவிற்கு வாராக்கடன் உள்ளது. முந்தைய ஆண்டைவிட வாராக்கடன் வெகுவாக குறைந்துள்ளது. வாராக்கடனை வசூலிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இணையதளம் மூலமான வங்கி சேவையும் 4 மடங்கு உயர்ந்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் இந்தியன் வங்கியின் செயல்பாடு மிக சிறப்பாக உள்ளது. மருத்துவம், சுகாதாரம் போன்ற சமூக பணிகளிலும் இந்தியன் வங்கி தனது பங்களிப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்தியன் வங்கி தனது சிறந்த சேவைக்காக 4 விருதுகளை பெற்றுள்ளது. சுயஉதவி குழுக்களுக்கான சேவையில் தொடர்ந்து 10-வது ஆண்டாக இந்தியன் வங்கி விருது பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Please follow and like us: