இலங்கையில் கிறிஸ்தவ ஆலயங்கள், ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் நடந்ததொடர் குண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை 215 ஆக உயர்வு

இலங்கையில் கிறிஸ்தவ ஆலயங்கள், ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் நடந்ததொடர் குண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை 215 ஆக உயர்வு

கொழும்பு, ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள், ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் நேற்று இப்பண்டிகையை கிறிஸ்தவர்கள் கொண்டாடினர். இலங்கையிலும் கிறிஸ்தவர்கள் வழக்கம்போல் உற்சாகமாக ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினர். தேவாலயங்களில் பிரார்த்தனைகள் நடந்தன.

இந்நிலையில், நேற்று காலை இலங்கை நேரப்படி 8.45 மணியளவில், தலைநகர் கொழும்பு நகரில் கொச்சிகடே பகுதியில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதே நேரத்தில், கொழும்பு அருகே கடலோர நகரமான நிகாம்போவில் உள்ள புனித செபஸ்தியார் தேவாலயத்திலும் குண்டு வெடித்தது.

இந்த குண்டு வெடிப்புகளால், அங்கு பிரார்த்தனை செய்து கொண்டிருந்த கிறிஸ்தவர்கள் சிலர் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, புனித செபஸ்தியார் தேவாலயத்தின் ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அதில், “நமது தேவாலயத்தில் குண்டு வெடித்துள்ளது. இங்கு உங்கள் குடும்ப உறுப்பினர்கள் இருந்தால், நேரில் வாருங்கள், உதவுங்கள்” என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, அடுத்த சில நிமிடங்களில் கொழும்பு நகரில் தி ஷாங்கரிலா, சின்னமன் கிராண்ட், தி கிங்க்ஸ் பெரி ஆகிய 3 ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சீயோன் தேவாலயத்திலும் குண்டுகள் வெடித்தன.

இந்த சொகுசு ஓட்டல்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் ஓட்டல்கள் ஆகும்.

நேற்று பிற்பகல் 2 மணியளவில், கொழும்பு புறநகரில் மிருகக்காட்சி சாலைக்கு அருகே ஒரு குண்டு வெடித்தது. அதில் 2 பேர் பலியானார்கள். கொழும்பு புறநகரான உருகொடவட்டாவில் ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்த நுழைந்தபோது, உள்ளே இருந்தவன் மனித வெடிகுண்டாக மாறி, குண்டு வெடிக்கச் செய்தான். இதில் 3 போலீசார் பலியானார்கள்.

ஆக, மொத்தம் 8 இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.

இந்த குண்டு வெடிப்புகளில் மொத்தம் 215 பேர் பலியானார்கள். அவர்களில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, டென்மார்க், ஜப்பான், பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.

500-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் வெளிநாட்டினரும் அடங்குவர்.

நிகாம்போவில் தேவாலயத்தில் நடந்த குண்டு வெடிப்பில் சுமார் 100 பேர் காயம் அடைந்தனர். மட்டக்களப்பு தேவாலயத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.

நிகாம்போ தேவாலய குண்டு வெடிப்பு குறித்து அதன் பாதிரியார் எட்மண்ட் திலகரத்னே உருக்கமான தகவல்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

ஈஸ்டர் என்பது சிறப்பான நாள் என்பதால், கிராமங்களில் இருந்தெல்லாம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர். பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்த 3 பாதிரியார்களில் 2 பேர் கண்ணாடி சிதறல்கள் தாக்கி படுகாயம் அடைந்தனர்.

தேவாலய சுவரில் சதை துண்டுகள் தெறித்து கிடக்கின்றன. தேவாலயத்துக்கு வெளியிலும் உடல் பாகங்கள் கிடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தொடர் குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து, அனைத்து போலீசாரின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விடுமுறையில் சென்ற டாக்டர்கள், நர்சுகள் மற்றும் சுகாதார பணியாளர்களை உடனே பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டது.

இன்றும், நாளையும் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கலவர தடுப்பு போலீசார், சிறப்பு அதிரடிப்படை போலீசார் உள்பட ஏராளமான போலீசார் விமான நிலையத்தை சுற்றிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.

மத வழிபாட்டு தலங்களை சுற்றிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க வாட்ஸ்-அப், பேஸ்புக், வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இது தற்காலிக நடவடிக்கைதான் என்று அதிபரின் செயலாளர் உதய சேனவிரத்னே தெரிவித்தார்.

காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை இலங்கை அரசு பிறப்பித்துள்ளது. மறுஉத்தரவு வரும்வரை ஊரடங்கு நீடிக்கும் என்று இலங்கை அரசின் செய்தித்தொடர்பாளர் குணசேகரா கூறினார்.

மேலும், சம்பவம் குறித்து விவாதிப்பதற்காக பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான அவசர கூட்டத்தை இலங்கை அரசு கூட்டி உள்ளது.

தொடர் குண்டு வெடிப்புகளால் கொழும்பு உள்பட நாடு முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று அதிபர் சிறிசேனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முற்றிலும் எதிர்பாராத சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்ததாகவும், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க பாதுகாப்பு படையினர் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் சிறிசேனா கூறியுள்ளார்.

அதுபோல், பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

இது ஒரு கோழைத்தனமான தாக்குதல். நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இலங்கை அரசு உடனடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த துயரமான நேரத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தாக்குதலால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததை பார்த்ததாக இலங்கை பொருளாதார விவகார மந்திரி ஹர்ஷா டி சில்வா தெரிவித்தார்.

முன்னாள் அதிபர் ராஜபக்சேயும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

இது ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல். இதன் பின்னணியில் யார் இருந்தாலும் கடுமையாக தண்டிக்க வேண்டும். இத்தகைய வன்முறையையும், பயங்கரவாதத்தையும் சகித்துக் கொள்ள மாட்டோம். இவற்றுக்கு எதிராக ஒரே குரலில் ஒன்றுபட்டு நிற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு உலக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, “இந்த தாக்குதல் உண்மையிலேயே வேதனை அளிக்கிறது. எல்லோரும் அச்சமின்றி மத நம்பிக்கையை பின்பற்றுவதை உறுதி செய்ய நாம் பாடுபட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

“இது ஒரு கொடிய பயங்கரவாத தாக்குதல்” என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியுள்ளார். எல்லாவகையான பயங்கரவாதங்களையும் நிராகரிப்பதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கூறியுள்ளார்.

ஐரோப்பிய யூனியன் தலைவர் அன்டோனியோ தஜானி, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெருசலேம் நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Please follow and like us: