மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம்

மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம்

ரேட்டிங் 3.5/5

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து சக்தி பிலிம் ஃபாக்டரி வெளியீட்டிருக்கும் மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் சரவண ராஜேந்திரன்.
மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திருபாதி நாயகன் நாயகியாகவும், வேல ராமமூர்த்தி, ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், மாரிமுத்து, பூஜா, கபிர் துஹான் சிங், அங்கூர் விகல், சன்னி சார்லஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்;கள்:- இசை – ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு – செல்வகுமார்.எஸ்.கே., படத்தொகுப்பு – பிலோமின் ராஜ், கலை – சதீஷ்குமார், பாடல்கள் – யுகபாரதி, ஒலி வடிவமைப்பு – அழகியகூத்தன் – சுரேன், ஆடை வடிவமைப்பு – பிரவீன்ராஜா.டி, நடனம் – பாபி ஆன்டனி, சண்டை பயிற்சி – பில்லா ஜெகன், தயாரிப்பு மேற்பார்வை – டி.ஆறுமுகம், நிர்வாகத் தயாரிப்பு – முகேஷ் சர்மா, இணைத் தயாரிப்பு – வி.கே.ஈஸ்வரன் – வினீஷ் வேலாயுதன், கதை, வசனம் – ராஜூ முருகன், மக்கள் தொடர்பு-பி.யுவராஜ்.
1990 கால கட்டத்தில் கொடைக்கானல் பூம்பாறையில் ராஜ கீதம் என்ற கேசட் கடை நடத்தி வருகிறார் மாதம்பட்டி ரங்கராஜ் (ஜீவா). இந்த கடையில் இளையராஜாவின் காதல் பாட்டுக்கள் தான் அந்த ஊர் இளைஞர்களுக்கு ரிங்டோனாக மாறி காதல் ஜோடிகளை சேர்த்து வைக்கிறது. ஜாதி வெறி பிடித்த மாரிமுத்துவின்(ராஜாங்கம்) மகனான ரங்கராஜ் அதைப் பற்றி கவலைப்படாமல் காதல் ஜோடிகளை சேர்த்து வைக்கிறார்.இதனால் சர்ச் ஃபாதர் வேல ராமமூர்;த்தி(அமலதாஸ்) மாரிமுத்துவை அழைத்து மகனுக்கு அறிவுரை கூறச் சொல்கிறார்.இந்த சமயத்தில் அந்த ஊரில் வட நாட்டு மெஹந்தி சர்க்கஸ் கம்பெனி வருகிறது.
அந்த சர்க்கஸ் கம்பெனியை நடத்தும் சன்னி சார்லஸ்சின் மகள் தான் ஸ்வேதா திருபாதி (மெஹந்தி). சர்க்கஸில் மரப்பலகையின் முன் ஸ்வேதா நிற்க அவர் மேல் படாமல் கத்தி வீசும் சாகசத்தை செய்கிறார் அன்கூர் விகால் (ஜாதவ்).ரங்கராஜிற்கு ஸ்வேதாவை பார்த்தவுடன் காதல் மலர அன்கூர் விகால் இந்த காதலுக்கு உதவி செய்கிறார். இளையராஜாவின் பாடல்களையும், இந்தி பாடல்களையும் போட்டு ஸ்வேதாவை ரங்கராஜ் காதலில் விழ வைக்கிறார். சன்னி சார்லஸ்சிடம் ஸ்வேதாவை திருமணம் செய்ய பெண் கேட்டு செல்கிறார் ரங்கராஜ்.ஸ்வேதா மீது படாமல் கத்தி வீசி ஜெயித்து காட்டினால் பெண் கொடுப்பதாக சன்னி சார்லஸ் சொல்ல, அதற்காக பயிற்சி எடுக்கிறார் ரங்கராஜ். ஆனால் அதை சாதிக்க முடியாமல் ரங்கராஜ் தடுமாறுகிறார். அதனால் இரவோடு இரவாக ஸ்வேதாவுடன் ரங்கராஜ் சர்ச் ஃபாதர் வேல ராமமூர்த்தியின் உதவியுடன் ஊரை விட்டே ஒடுகிறார். இதை அறிந்து மாரிமுத்து இவர்களை தேடி வந்து ஸ்வேதாவை அடித்து விட்டு மகன் ரங்கராஜையும் அடித்து அழைத்துச் செல்கிறார். இதனால் அவமானமடையும் சன்னி சார்லஸ் மகள் ஸ்வேதாவை அழைத்துக் கொண்டு வடநாட்டிற்கு சென்று விடுகிறார்.
ஸ்வேதாவை தேடி வடமாநிலங்களில் பயணிக்கும் ரங்கராஜ் அவரை காணாமல் மீண்டும் கொடைக்கானலுக்கே வந்து குடித்துக் கொண்டு பித்து பிடித்தாற் போல் அலைகிறார்.
இன்னொருபுரம் ஸ்வேதாவை வற்புறுத்தி திருமணம் செய்து வைத்து விடுகிறார் தந்தை சன்னி சார்லஸ். மகள் பூஜாவும் பிறக்க, கணவனின் கொடுமை தாங்காமல் தனிமையில் வாடுகிறார் ஸ்வேதா. தாயின் அன்பை புரிந்து கொள்ளும் மகள் பூஜா ரங்கராஜை தேடி கொடைக்கானல் பூம்பாறைக்கு வந்து கண்டுபிடித்து தாயை பார்க்க அழைத்துச் செல்கிறார். இறுதயில் இளமைகால ஸ்வேதாவை திருமணம் செய்து கொண்ட நபர் யார்? யார் சதி செய்து இவர்களை இளமைக்காலத்தில் பிரித்தது? நடுத்தர வயதில் மீண்டும் காதலர்கள் இருவரும் ஒன்று சேர்த்தார்களா? என்பதே சஸ்பென்ஸ் நிறைந்த க்ளைமேக்ஸ்.
ஜீவாவாக மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டு வித காலகட்டங்களின் கெட்டப்பில் அச்சு அசலாக தன்னால் முடிந்த வரை நடை, உடை, பாவனையில் ரசிக்க வைத்து விடுகிறார். இளமை கால ரகுமானை ஞாபகப்படுத்தும் சாயலில் இருந்தாலும் முதல் படத்திலேயே கனமான கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக செய்திருக்கிறார். பாராட்டுக்கள்.
மெஹந்தியாக ஸ்வேதா திருபாதி வடநாட்டு சர்க்கஸ் பெண்ணாக முதலில் காதலை மறுத்தாலும், பின்னர் காதலுக்காக வீட்டை விட்டு சென்று, அவமானப்பட்டு, தந்தையின் கெடுபிடியாலும். தப்பிக்க முடியாத சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு தன் இயலாமையை நினைத்து வருந்தும் கதாபாத்திரம் அற்புதமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
அமலதாஸாக சர்ச் ஃபாதர் கதாபாத்திரம் முதலில் கண்டிப்பானவராக தோன்றினாலும் பின்னர் காதலர்களின் பாதுகாவலான மாறும் வேல ராமமூர்த்தி, நண்பராக ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், முரட்டு குணம் கொண்ட பிடிவாத தந்தையாக மாரிமுத்து, மகள் நிஷாவாக பூஜா,கபிர் துஹான் சிங், ஜாதவாக நண்பராக இருந்து வில்லனாக மாறும் அங்கூர் விகல், ஸ்வேதாவின் தந்தை சன்னி சார்லஸ் ஆகியோர் நடிப்பு படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகிக்கின்றனர்.

இசைஞானி இளையராஜாவின் இன்னிசை காதல் பாடல்களோடு யுகபாரதியின் பாடல் வரிகள் இணைந்து படத்தின் இசையை ரவிக்கும் விதமாக புது மெருகோடு கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்.
செல்வகுமாரின் ஒளிப்பதிவு படத்தின் இருவித காலகட்டங்களின் வேறுபாட்டை அழகாக தன் காட்சிக் கோணங்களில் படம் பிடித்து ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியுள்ளார் என்றால் மிகையாகாது.
பிலோமின் ராஜின் படத்தொகுப்பு கச்சிதம். படத்தின் கதை வசனத்தை எழுதியிருக்கும் ராஜூ முருகன் மெல்லிய காதல் கை வண்ணம் மனதை தொடுகிறது. மற்றும் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்;களின் பங்கு பாராட்டுக்குரியது.
இயக்கம்- சரவண ராஜேந்திரன். தாயின் காதலை சேர்த்து வைக்க புறப்படும் மகளின் பயணத்தில் ஃபிளாஷ்பேக் காட்சிகளாக திரைக்கதையமைத்து 1990 மற்றும் 2010 கால கட்டங்களை திறம்பட வேறுபடுத்தி வித்தியாசமான சர்க்கஸ் கலந்த காதல் கதையை இயக்கியிருக்கிறார் சரவண ராஜேற்திரன். ஜாதி வெறி, காதல் எதிர்ப்பு, பெண்களை ஒடுக்கும் சமுதாய சூழல், நட்பு, குடும்ப செண்டிமெண்ட் கலந்து புது வித கோணத்தில் சில்லென்ற உறைய வைக்கும் காதல் கதையை தோய்வில்லாமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில் மெஹந்தி சர்க்கஸ் வெற்றி வாகை சூடும் தென்னிந்திய மூழ்காத டைட்டானிக் சாகச காதல் காவியம்.

Please follow and like us: