குப்பத்து ராஜா சினிமா விமர்சனம்

குப்பத்து ராஜா சினிமா விமர்சனம்
ரேட்டிங் 3.5/5 star

எஸ் ஃபோகஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சரவணன்.எம், எஸ்.சிராஜ், சரவணன்.டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘குப்பத்து ராஜா”. நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இந்தப்படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ்குமார், பார்த்திபன் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தில் பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, நாயகிகளாக நடித்துள்ளனர். எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு, சந்திரசேகர், ஆர்.என்.ஆர்.மனோகர், டிஆர்கே கிரண், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவு-மகேஷ்முத்துஸ்வாமி, படத்தொகுப்பு-பிரவீன்.கேஎல், கலை-டிஆர்கே-கிரண், சண்டைபயிற்சி-அன்பரிவ் மற்றும் திலீப் சுப்பராயன், பாடல்வரிகள்-லோகன், ப்ரோமோஸ்-டி.சிவநந்தீஸ்வரன், தயாரிப்பு மேற்பார்வை-எம்.அம்பிகாபதி, நிர்வாக தயாரிப்பு-கர்னராஜா, இணை தயாரிப்பு-படூர் ரமேஷ், மக்கள் தொடர்பு சுரேஷ்சந்திரா, ரேகா.
வடசென்னையில் உள்ள குப்பத்து மக்களின் காவலராக இருக்கிறார் பார்த்திபன் அவருக்கு உறுதுணையாக இருக்கிறார் நண்பர் எம்.எஸ்.பாஸ்கர்.ஆனால் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஜி.வி.பிரகாஷ்குமார் பார்த்திபனை எதிரியாகவே பார்க்கிறார். அங்கே வசிக்கும் பாலக் லால்வானியை ஜி.வி காதலிக்கிறார். ஜி.வியின் பக்கத்து வீட்டில் புதிதாக குடியேறுகிறார் பூனம் பாஜ்வா, இவரால் பாலக் லால்வானிக்கும் ஜி.விக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. பூனம் பாஜ்வாவிற்கு சேட் நடத்தும் சாக்லேட் கம்பெனியில் வேலையில் சேர்த்து விடுகிறார் ஜி.வி.
சேட்டு கடையில் வட்டி கட்டாத வாகனங்களை தூக்கி கொண்டு வரும் வேலையை செய்து வருகிறார் ஜி.வி. அதனால் ஏரியா கவுன்சிலர், ரௌடி கும்பல் என்று பல வகைகளில் பகை ஏற்பட அதையெல்லாம் சமாளித்து வருகிறார் ஜி.வி. இதனிடையே வளைகாப்பு விழாவில் ஏரியா கவுன்சிலருக்கும், எம்.எஸ்.பாஸ்கருக்கும் இடையே சண்டை ஏற்பட, மறுநாள் காலையில் எம்.எஸ்.பாஸ்கர் குப்பைத்தொட்டியில் அரிவாளால் வெட்டப்பட்டு இறந்து கிடக்கிறார். இதற்கு காரணம் கவுன்சிலர் தான் என்று ஜி.வி நினைத்து அடிதடியில் இறங்க அதை மறுக்கும் கவுன்சிலரை விட்டு விட்டுச் செல்கிறார். அதன் பின் பார்த்திபன், ரௌடிக் கும்பல் என்ற பல வகையில் விசாரித்து விட்டு தன் தந்தையின் கொலைக்கான காரணத்தை அறியாமல் தடுமாறுகிறார் ஜி.வி. இந்நிலையில் குப்பத்தில் இருக்கும் சிறுவன் காணாமல் போகிறான்.
எம்.எஸ்.பாஸ்கர் கொலை, சிறுவன் காணாமல் போனதையும் கண்டு பிடித்து தருமாறு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் முறையிடுகிறார் பார்த்திபன். போலீஸ் தீவிரமாக விசாரிக்க தொடங்கும் போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகிறது. சாக்லெட் கம்பெனி வெடித்து சிதறி அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் தீக்காயத்துடன் உயிருக்கு போராடும் நிலை உருவாகிறது. அந்த சாக்லெட் கம்பெனியின் முதலாளியான சேட்டும் தூக்கில் தொங்க விட்டு கொலை செய்யப்படுகிறார். இதற்கு காரணம் யார்? எம்.எஸ்.பாஸ்கரை கொன்ற உண்மையான குற்றவாளி யார்? சிறுவன் காணாமல் போனதன் மர்மம் என்ன? பார்த்திபன், ஜி.வி ஒன்று சேர்ந்து குற்றவாளிகளை கண்டு பிடித்தார்களா? என்பதே பரபரக்க வைக்கும் க்ளைமேக்ஸ்.
வட சென்னை இளைஞர் ராக்கெட்டாக ஜ.வி.பிரகாஷ்குமார் குடித்து விட்டு கும்மாளம் போடுவது, வலுக்கட்டாயமாக வம்பு இழுப்பது, நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, பாலக் லால்வானியை காதலிப்பது, பார்த்திபனிடம் சண்டை போடுவது, தந்தை எம்.எஸ்.பாஸ்கரிடம் உரிமையோடு பாசத்தோடு மிரட்டுவது என்று பக்கா மாஸ் கலந்து குப்பத்து இளைஞராகவே வாழ்ந்து அதகளம் பண்ணுகிறார். தன் தந்தையின் இறப்பிற்கு பிறகு டோட்டலாக மாறி கொலையாளியை தேடி அலைந்து திரியும் இடத்திலும், சண்டைக் காட்சியிலும் மனதில் நிற்கிறார்.
எம்.ஜி.ராஜேந்திரனாக எம்ஜிஆரின் தீவர ரசிகராக ரா.பார்த்திபன் குப்பத்து மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் தலைவனாகவும், நியாயத்தை தட்டிக் கேட்டு உதவிகள் செய்து வசன உச்சரிப்பிலும், நடை, உடை பாவனையிலும் அச்சு அசலாக வாழ்ந்து இருக்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கர் மகனின் மேல் பாசத்தை பொழிபவராகவும், அவனுக்கு வண்டி ஒன்று வாங்கி கொடுத்து அழகு பார்க்க வேண்டும் என்ற லட்சியத்தோடு உழைக்கும் பேரன்பு கொண்ட மனிதாராக வாழ்ந்திருக்கிறார். இவரின் கொலை தான் படத்தின் திருப்புமுனையாக அமைகிறது.
காமெடி நண்பராக கை சாமானாக யோகி பாபு சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்.
பாலக் லால்வானி கமலாவாக குப்பத்து பெண்ணின் அடாவடி பேச்சு, அசத்தல் நடனம் என்று பிச்சு உதறியிருக்கிறார். பூனம் பாஜ்வா கவர்ச்சியாக வந்து போகிறார்.
மற்றும் தோழியாக வரும் மதுமிதா, பண்டாரியாக சந்திரசேகர், தாஸாக வரும் கலை இயக்குனர் டிஆர்கே. கிரண் ஆகியோரின் நடிப்பு கச்சிதம்.
ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பி தாளம் போட வைத்து விடுகிறார்.
மகேஷ் முத்துஸ்வாமியின் ஒளிப்பதிவு மின்னல் வேகத்தில் காட்சிக் கோணங்களில் குப்பத்து மக்களின் வாழ்க்கையையும். சண்டைக்காட்சிகளையும். தொழிற்சாலை, குப்பத்து வீதிகள் என்ற பார்;த்து பார்த்து கொடுத்து அசர வைத்து விடுகிறார்.
பிரவீன்.கேஎல் படத்தொகுப்பும், டிஆர்கே-கிரண் கலையும் படத்திற்கு பலம். அன்பரிவ் மற்றும் திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் அதிர வைக்கிறது.
கதை, வசனம், இயக்கம் – பாபா பாஸ்கர்:- தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை கோர்வையாக திரைக்கேற்றவாறு காட்சிகளையமைத்து வட சென்னை இளைஞனின் சாதாரண வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்களை சிறப்பாக திரைக்கதையமைத்திருக்கிறார் இயக்குனர் பாபா பாஸ்கர். இதில் காதல், மோதல், நட்பு, பாசம், குடும்ப செண்டிமெண்ட், பகை,வெறுப்பு கலந்து கொடுத்து வட மாநிலத்தவர் இங்கு வந்து குடியேறி பணத்தால் இங்குள்ள மக்களை விலைக்கு வாங்கும் அவல நிலையையும், அவர்களையே பயன்படுத்தி சுயநலத்தோடு போதைப் பொருட்களை விற்று கொள்ளை லாபம் காணும் போக்கையும், மேம்போக்காக படத்தில் திணித்து எச்சரிக்கை செய்து இயக்கியிருக்கிறார் பாபா பாஸ்கர். பாராட்டுக்கள்.

மொத்தத்தில் குப்பத்து ராஜா பக்கா மாஸ் கலந்த கலக்கல் ராஜா.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *