அக்னி தேவி சினிமா விமர்சனம்

அக்னி தேவி

சினிமா விமர்சனம் ரேட்டிங் 2/5

சாந்தோஷ் ஸ்டுடியோஸ் மற்றும் ஜாய் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜான் பால்ராஜ் மற்றும் ஸ்டாலின் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

பேருந்து நிலையத்தில் நடக்கும் ஒரு பெண் நிருபரின் படுகொலையை விசாரிக்க வருகிறார் போலீஸ் அதிகாரி பாபி சிம்ஹா. இந்த விசாரணையை தொடர்ந்து நடத்த விடாமல் உயர் போலீஸ் அதிகாரியும், பொதுப்பணித்துறை அமைச்சரான மதுபாலாவும் பல விதங்களில் தடைகளை ஏற்படுத்துகின்றனர். இதற்கு காரணம் என்ன? உண்மைகளை மூடி மறைக்கும் காரணம் என்ன? நிரபராதியை குற்றவாளியாக்கி தண்டனை கொடுப்பது ஏன்? பாபி சிம்ஹாவையே கொல்ல திட்டம் தீட்டுவது ஏன்? இவைகளை தாண்டி பாபி சிம்ஹா தன் கடமையை செய்து முடித்தாரா? என்பதே மீதிக்கதை.
பாபி சிம்ஹாவின் தோற்றம், மிடுக்கு கச்சிதமாக பொருந்தினாலும் டப்பிங் குரல் எடுபடவில்லை.
மதுபாலா பெண் அமைச்சராக, அதிகாரத்தையே கையில் வைத்துக் கொண்டு, அமைச்சர்களை ஆட்டிப்படைப்பதும், கீழ்படிய வைப்பதும் என்று பண்ணும் அலப்பறைகள் அவர் பண்ணும் அஷ்ட கோணல்கள் பார்க்க முடியவில்லை. அவரை மாற்றுத் திறனாளியாக காட்டி பேசும் வசனங்களும், செய்கையும் ஒவர் ஆக்டிங்கால் எரிச்சலடைய வைத்துவிடுகிறார்.
ரம்யா நப்பீசன் எதற்காக வந்து போகிறார் என்பதே தெரியவில்லை. மற்றும் நண்பராக சதீஷ், நேர்மையான அரசியல்வாதியாக எம் எஸ் பாஸ்கர், டெல்லி கணேஷ், லிவிங்ஸ்டன், சஞ்சய், போஸ் வெங்கட் ஆகியோரின் நடிப்பு பரவாயிலலை ரகம்.
ஜனாவின் ஒளிப்பதிவும், ஜேக்ஸ் பிஜாயின் இசையும் ஒகே.
இயக்கம் – தயாரிப்பாளர் ஜெ பி ஆர் , ஷாம் சூர்யா. நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் மரணம், பணமதிப்பிழப்பால் அப்பாவி மக்கள் பரிதவிப்பும். கண்டெய்னர் லாரிகளில் புது நோட்டுக்கள் அரசியல்வாதிகள் மாற்றப்படுவதும், அடிமட்டத் திலிருந்து மிதிபட்டு அதுவே வெறியாகி அரசியல்வாதியாகி, அமைச்சராகி அதிகாரத்திமிரால் ஆட்டம் போடும் பெண் அமைச்சர், அவருக்கு அடிபணிந்து செயலாற்றும் போலீஸ் இலாகா, கொலை செய்வதற்காகவே பயிற்சி எடுக்கும் இளம் சிறார்கள், அவர்களை பயன்படுத்தி கொலை குற்றங்களை செய்யும் அரசியல்வாதிகள், கத்தியில் விஷத்தைதடவி கொலை செய்யும் தந்திரம் என்று அனைத்தையும் ஒரே கதையில் திணித்து எதை விடுவது, எதை எடுப்பது யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள்? என்று திணறி குழப்பி விட்டு கதையை நகர்த்தியிருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள் ஜெபிஆர் மற்றும் ஷாம் சூர்யா. ராஜேஷ்குமாரின் கதைகள் படிப்பதில் இருக்கும் சுவாரசியம் படத்தை காட்சிபடுத்துதலில் எப்பொழுதுமே சொதப்பல்கள் ஏற்படுகிறது. இருந்தாலும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து இயக்கியிருந்தால் படம் பேசப்பட்டிருக்கும். ஏற்கனவே படத்தை வெளியிட பல தடங்கல்கள், தடைகற்களால் திக்குமுக்காடி இருக்கும் தயாரிப்பாளர்களின் நிலையால் இந்த சொதப்பல்கள் நேரிட்டிருக்கலாம்.

மொத்தத்தில் அக்னி தேவி பிரகாசிக்கவில்லை.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *