நெடுநல்வாடை சினிமா விமர்சனம் ரேட்டிங் 4/5

நெடுநல்வாடை சினிமா விமர்சனம் ரேட்டிங் 4/5

பி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள நெடுநல்வாடை படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் செல்வகண்ணன்.
இதில் பூராமு, இளங்கோ, அஞ்சலி நாயர், அஜெய் நடராஜ், மைம்கோபி, ஐந்து கோவிலான், செந்தி, ஞானம் ஆகியோரின் தரமான நடிப்பில் வெளிவந்துள்ள படம் நெடுநல்வாடை.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-ஜோஸ்ஃபிராங்க்ளின், ஒளிப்பதிவு வினோத் ரத்தினசாமி, பாடல்கள்-கவிப்பேரரசு வைரமுத்து, படத்தொகுப்பு-மு.கா.விஸ்வநாதன், கலை-விஜய்தென்னரசு, சண்டை பயிற்சி-ராம்போ விமல், நடனம்-தினா, சதீஷ் போஸ், மக்கள் தொடர்பு-மணவை புவன்.
திருநெல்வேலியில் உள்ள கிராமத்தில் வசிக்கும் பூராமுவிற்கு இரண்டு பிள்ளைகள் மைம்கோபி, செந்தி. இதில் மகள் செந்தி வீட்டை விட்டு ஒடிப்போய் திருமணம் செய்து கொண்டு நீண்ட வருடம் கழித்து வாழவெட்டியாக இரண்டு பிள்ளைகளுடன் தந்தையிடம் அடைக்கலம் ஆகிறார். அண்ணன் மைம்கோபி தந்கை செந்தியை வெறுத்து ஒதுக்கினாலும், தந்தை பூராம் மகளை அரவணைத்து வாழ்வாதாரத்திற்கு உதவி செய்கிறார். பேரன் இளங்கோவிடம் அதிக அன்பும் பாசமும் கொண்டு வளர்கிறார். நல்ல வேலையில் சேர்ந்து தாய் செந்தியையும், தங்கையையும் இளங்கோ நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி படிக்க வைக்கிறார் பூராம். இளங்கோவும் நன்றாக படித்து முடிக்கிறார். இந்த நேரத்தில் இளம் பருவத்திலிருந்தே பழகும் அஞ்சலி நாயர் இளங்கோவை துரத்தி துரத்தி காதலிக்க தொடங்குகிறார். முதலில் இளங்கோ மறுத்தாலும் பின்னர் காதல் கை கூடுகிறது. இவர்களின் காதல் அஞ்சலியின் அண்ணனுக்கு தெரிந்து அஞ்சலிக்கு வேறொருவருடன் திருமண ஏற்பாட்டை அவசரஅவசரமாக ஏற்பாடு செய்கிறார். பேரனின் ஆசையை நிறைவேற்ற பெண் கேட்டு செல்லும் பூராமையும் அவமானப்படுத்தி அனுப்பிவிட, இளங்கோவையும் தீர்த்துக் கட்ட அஞ்சலியின் அண்ணன் திட்டம் தீட்டுகிறார். இந்த சதித்திட்டத்தை முறியடித்து அஞ்சலியை திருமணம் செய்து கொண்டாரா?இல்லையா? தாதா பேரனின் ஆசையை நிறைவேற்றினாரா? இளங்கோ காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தாரா? குடும்பத்தின் கௌரவத்தை காப்பாற்றினாரா? என்பதே பல திருப்பங்களுடன் கூடிய க்ளைமேக்ஸ்.
பூராம் செல்லையாவாக அச்சு அசலாக வாழ்ந்து படம் முழுவதும் மிகையில்லா நடிப்பாலும், நடை,உடை பாவனை, பேச்சு என்று அசாத்ய வைராக்கியம் நிறைந்த கிராமத்து மனிதராக மனதில் கம்பீரமாக நின்று விடுகிறார். மகனை கடித்து கொள்வதிலும் சரி, மகளிடம் பாசம் காட்டுவதிலும் சரி, பேரனை அரவணைத்து கொண்டாலும் முக்கியமான தருணத்தில் கண்டிப்புடன் நடந்து கொள்வதிலும் சரி, அஞ்சலியிடம் மன்றாடுவதிலும் சரி தனக்கு சரியென பட்டதை தீர்க்கமான பார்வையாலும், பேச்சாலும் சட்டென்று எடுக்கும் முடிவுகள் தான் படத்தின் திருப்புமுனைக்கு பெரும் பங்கு வகிக்கிறது. இவரின் நடிப்பிற்காக பல விருதுகள் காத்திருக்கின்றன.
இளங்கோ புதுமுகம் என்றாலும் தேர்த்த நடிப்பால் தாத்தாவின் சொல்லை தட்டாத பேரனாக, தாத்தாவை எதிர்த்து பேச முடியாமல் தவிக்கும் போதும், அறிவுரையை ஏற்று காதலை நிராகரிப்பதும், காதலியின் வற்புறுத்தலை மறுக்கவும் முடியாமல், மறக்கவும் முடியாமல் தத்தளிக்கும் போதும் இறுதியில் காதலா? குடும்பமா? என்பதில் எடுக்கும் முடிவு தான் இளங்கோவின் கதாபாத்திரத்தை தலை நிமிர வைத்து விடுகிறது.
அஞ்சலி நாயர் காதலியாக துள்ளலோடு, துடுக்கோடும் செய்யும் குறும்புகளில் ரசிக்க வைத்து விடுகிறார். நிஜத்தில் விமானப்பணிப்பெண்ணாக சென்று விட்டதால் நல்ல நடிப்பாற்றல் நிறைந்த நடிகையை இனி காணப்போவதில்லை.
கோபக்கார அண்ணனாக மைம்கோபி, அஞ்சலியின் அண்ணனாக கரார் பேர்வழியாக அஜெய் நடராஜ், ஐந்து கோவிலான், இளங்கோவின் தாயாக செந்தி, ஞானம் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.
கவிப்பேரரசுவின் பாடல் வரிகளில் நான்கு பாடல்களையும் ஜோஸ்ஃபிராங்களின் கச்சிதமாக கொடுத்து பிண்ணனி இசையிலும் அசர வைத்து விடுகிறார்.
வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு இயற்கை காட்சிகளை தன் காமிரா கோணங்களில் அள்ளித் தந்து. யதார்த்தமான கிராமத்து வாழ்க்கையை தத்ரூபமாக படம் பிடித்து படத்துடன் ஒன்றிட செய்து விடுகிறார்.
மு.காசிவிஸ்வநாதனின் படத்தொகுப்பு தோய்வில்லாத படத்தின் விறுவிறுப்பான காட்சிகளுக்கு உத்தரவாதம்.
இயக்கம்- செல்வகண்ணன். ஐம்பது நண்பர்கள் ஒன்று கூடி தயாரிப்பாளர்களாகி இயக்குனர் செல்வகண்ணனின் அபரிதமான ஆற்றலுக்கு ஊக்கமும், தைரியமும் கொடுத்திருப்பதிலேயே படத்தின் வெற்றியை ஊகித்து விடலாம். தனக்கு ஏற்பட்ட பல தடைகளை கடந்து தடங்கல்களை மீறி அவமானங்களை பொறுத்து கொண்டு தன் விடாமுயறிசியால் நல்ல கிராமத்து கதையை தாத்தா-பேரன் பாசத்தை வேறு ஒரு கோணத்தில் திரைக்கதையை கொடுத்து அசத்தி விட்டார் இயக்குனர் செல்வகண்ணன். முதல் காட்சியில் தாத்தா பேரன் வரவிற்காக எட்டு ஆண்டுகள் காத்திருக்க, அந்த ஏக்கத்திலேயே தன் கடைசி மூச்சு நிற்பதற்கு முன் தன் பேரனை பார்க்க துடித்துக் கொண்டிருக்கும் போதே ஃபிளாஷ்பேக்கில் கதை நகர்கிறது. இறுதியில் பேரன் தாத்தாவை பார்க்க வந்தாரா? எதற்காக இந்த பிரிவு? என்பதை நேர்த்தியாக, பல திருப்பங்களுடன் க்ளைமேக்ஸ் காட்சி வரை சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார் செல்வகண்ணன். இவரின் கடின முயற்சிக்கும், உழைப்பிற்கும் பாராட்டுக்களுடன் விருதுகளும் வந்து சேரும்.
மொத்தத்தில் நெடுநல்வாடை அப்பழுக்கற்ற தாத்தா பேரனின் பாசப் போராட்டத்தை வெற்றிப் பாதையில் நெடுந்தூரம் அனைவரையும் பேச வைக்கும் படம்.

மொத்தத்தில் தரமான பாசமுள்ள நேசமிகுந்த கிராமத்து வாழ்வியலை சொல்லும் படம் நெடுநல்வாடை.

Please follow and like us: