விவேகானந்தரின் வீர உரைகளை படித்து இளைஞர்கள் முன்னேற ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்

விவேகானந்தரின் வீர உரைகளை படித்து இளைஞர்கள் முன்னேற ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்

சென்னை, பிப்.16– விவேகானந்தரின் வீர எழுச்சி உரையை படித்து இளைஞர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.

சென்னை ராமகிருஷ்ண மடம் விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற விவேகானந்த நவராத்திரி நிறைவு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:–

நமது தாய்நாடாம் பாரத மணித் திரு நாடு, எல்லையில்லாப் பெருமைகளைக் கொண்ட திருநாடு ஆகும்.

முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும் தந்த வள்ளல் குணம் படைத்த, பாரி, பேகன் போன்ற மன்னர்களையும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறுவை மருத்துவ சிகிச்சை அறிந்த சுஸ்ருதர் போன்ற மருத்துவ அறிஞர்களையும், வான் வெளி அறிவியலை நன்கறிந்த ஆர்யபட்டர் போன்ற வானியல் விஞ்ஞானிகளையும்,

கணிதக் கலையில் ஒப்புவமை காட்ட முடியாத பாஸ்கராச்சாரியர் முதல் ராமானுஜர் வரையிலான கணித மேதைகளையும், தன் மகன் மீது தேர்க்காலினை ஏற்றி பசுவுக்கு நீதி வழங்கிய மனுநீதிச் சோழன் போன்ற நீதிமான்களையும், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழுக்கு இலக்கணம் எழுதிய மொழி வல்லுநர் தொல்காப்பியன், இரண்டே அடிகளில் மனித வாழ்வின் அத்தனை நெறிகளையும் அடக்கிய வள்ளுவப் பேராசான் போன்ற வாழ்வியல் வல்லுநர்களும் என உலகின் தலை சிறந்த ஒப்பில்லா மாமனிதர்களை தனது மக்களாகக் கொண்ட நாடு நமது இந்தியத் திருநாடு.

மக்களை தட்டி எழுப்பினார்

இத்திருநாட்டில் வாராது வந்த மாமணியாய், வரலாறு மறந்திட முடியாத வான்மதியாய், உறங்கிக் கிடந்த மக்களைத் தட்டி எழுப்பி, அவர்கள் யார் என்ற உண்மையை அவர்களுக்கு உணர்த்திய வீரச் சுடர் ஒளியாய், அவதாரம் எடுத்து வந்தவர்தான் சுவாமி விவேகானந்தர்.

சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும், சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்த சுவாமி விவேகானந்தர், வளர்ந்து கல்லூரியில் தத்துவம் பயின்றார்.

மேலை நாட்டுத் தத்துவங்களையும், ஐரோப்பிய நாடுகளின் வரவாற்றையும் படித்தறிந்த அவரது நெஞ்சில் எழுந்த, இறை உண்மைகளைப் பற்றிய, கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் தீர்வைத் தேடி, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை வந்தடைந்தார்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை தனது குருவாக ஏற்று, இறைவனைக் காண வேண்டும் என்று வந்த சுவாமி விவேகானந்தர், ஆறாண்டுகள் பயிற்சி பெற்று ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்று உணர்ந்தார்.

1886–ம் ஆண்டு, ஸ்ரீ இராமகிருஷ்ணர் இறந்த பின் வீரத் துறவியான விவேகானந்தர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் சுற்றிப் பயணம் செய்து இந்தியாவிலுள்ள அனைத்துப் பகுதிகளின் பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார்.

3 நாட்கள் தியானம்

தன்னுடைய இந்தப் பயணத்தின் நிறைவாக தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார் சுவாமி விவேகானந்தர்.

தமிழ்நாட்டுக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் உள்ள தொடர்பு சாதாரணமானது அல்ல, அது ஒரு நீண்ட வரலாறு.

1892–ம் ஆண்டு, டிசம்பர் 24–ம் நாள், தன் பயண முடிவில் தமிழகத்தின் குமரி முனைக்கு வந்த சுவாமி விவேகானந்தர், அங்கே கடல் நடுவே அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார்.

இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் குறித்து இந்த மூன்று நாட்களும் தியானம் செய்ததாக சுவாமி விவேகானந்தரே குறிப்பிட்டுள்ளார். அந்த தியானம் மேற்கொண்டது நம் தமிழ்நாட்டில் தான்.

அதன்பின் அங்கிருந்து சென்னைக்கு வந்த விவேகானந்தரிடம், 1893–ம் ஆண்டில் அமெரிக்காவில் நடைபெறும் உலக சமய மாநாட்டில் இந்து மதத்தின் சார்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர்கள் சென்னை நகர இளைஞர்கள் தான்.

அமெரிக்காவில் உரை

தமிழ்நாட்டின் இளைஞர்களின் வேண்டுகோளை ஏற்று சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார்.

1893–ம் ஆண்டு , சிகாகோ நகரில் நடைபெற்ற அந்த சர்வ மத மாநாட்டில், தங்கக்குடத்தில் வெள்ளிக்காசு கொண்டு தட்டினால் எழும் கிண்கிணி நாதம் போன்ற இனிமையான, அதேநேரம் வீரம் மிக்க, தனது வெண்கலக் குரலால், ‘‘சகோதர, சகோதரிகளே” என்று தொடங்கி அவர் ஆற்றிய உரை, உலகின் மூலை முடுக்குகளில் எதிரொலித்தது. இந்தியாவை நோக்கி, இந்து மதத்தை நோக்கி, உலக மக்களை கூர்ந்து பார்க்கச் செய்தது.

உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்திய சுவாமி விவேகானந்தர், அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு, 1897–ம் ஆண்டு இந்தியாவிற்குத் திரும்பிய போது, அவர் தனது சொந்த மாநிலமான கொல்கத்தாவிற்கோ அல்லது வேறு எந்த மாநிலத்திற்கோ போகவில்லை, திரும்ப வந்து முதன் முதலில் அவர் கால் பதித்த இடம் தமிழ்நாடு தான். அவருக்கு முதல் வரவேற்பை அளித்தது தமிழ்நாடு தான்.

இலங்கை மார்க்கமாக 26.1.1897 அன்று தமிழகத்தில் பாம்பன் குந்துகால் பகுதிக்கு வந்திறங்கிய, சுவாமி விவேகானந்தருக்கு அன்றைய ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார்.

அங்கிருந்து சென்னைக்கு வருகை தந்த சுவாமி விவேகானந்தர், பிப்ரவரி 6 முதல் 14–ம் தேதி வரை, தங்கி, எழுச்சியுரை ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லம் தான், இந்த விவேகானந்தர் இல்லம்.

இந்த இல்லத்தில் சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்த 9 நாட்களையும், விவேகானந்த நவராத்திரியாக ஒவ்வோர் ஆண்டும் சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் கொண்டாடி வருகிறது. அந்த ஆண்டு விழாவின் நிறைவு நாளைத்தான் இங்கு சீரோடும் சிறப்போடும் இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

மக்களுக்கு ஆற்றும் பணியே மகேசனுக்கு ஆற்றும் பணி என உணர்ந்த சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ணா மடத்தினை நிறுவி, அதன் மூலம் சமூகத் தொண்டாற்றினார். இன்று அதன் கிளைகள் உலகம் முழுவதும் பரவி, சுவாமி விவேகானந்தர் கண்ட கனவுகளை நனவாக்கிடும் வண்ணம் செயல்பட்டு, செம்மையாக சமூகத் தொண்டுகளை ஆற்றி வருகின்றன.

ஜெயலலிதா வழங்கிய இடம்

புரட்சித்தலைவி அம்மா, சுவாமி விவேகானந்தரால் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ண மடம் ஆற்றுகின்ற மக்கள் சேவைகளையும், சமூகப் பணிகளையும் கருத்தில் கொண்டு, கடந்த 2013–ம் ஆண்டில், அரசுக்குச் சொந்தமான விவேகானந்தர் இல்லம் அமைந்துள்ள இடத்தையும், அதன் அருகில் காலியாக உள்ள இடத்தையும் 99 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் மிகக் குறைந்த வாடகையில் ஸ்ரீராம கிருஷ்ண மடத்திற்கு, அம்மா வழங்கினார்.

மேலும், சுவாமி விவேகானந்தரின் 150–வது பிறந்த நாள் விழாவில், தற்போது இங்கு இயங்கி வருகிறதே சுவாமி விவேகானந்தர் பண்பாட்டு மையம் – அந்த மையத்திற்கு அன்று அடிக்கல் நாட்டி, அதனைக் கட்டுவதற்கு 2 கோடி ரூபாய் நிதியுதவியும் வழங்கி 2014–ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட சுவாமி விவேகானந்தர் பண்பாட்டு மையத்தினை அம்மா தன்னுடைய பொற்கரங்களால் திறந்து வைத்தார்.

அம்மாவின் கரங்களால் திறந்து வைக்கப்பட்ட விவேகானந்தர் பண்பாட்டு மையத்தில், கலை மற்றும் பண்பாட்டு பயிற்சி, கணினிப் பயிற்சி, யோகா பயிற்சி, தொன்மையான தஞ்சாவூர் ஓவியப் பயிற்சி, பன்மொழிப் பயிற்சி என பல்வகையான பயிற்சிகள் அளிக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதையும், இளைஞர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்று தங்களது வாழ்க்கையில் உயரும் வகையில் இந்த பயிற்சிகள் அனைத்து தரப்பினருக்கும் அளிக்கப்பட்டு வருவதையும் அறிந்து நான் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்.

இளைஞர்களுக்கு வேண்டுகோள்

நமது இளைஞர்களுக்கு, சுவாமி விவேகானந்தர் அன்று தெரிவித்த கருத்துக்கள், இன்றைக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது.

சுவாமி விவேகானந்தர், இளைஞர்கள் தம்முள் இருக்கும் ஆற்றல்களை உணரும்படி ஆற்றிய வீர உரைகளையும், பேசிய கருத்து மொழிகளையும், நன்கு படித்து, அறிந்து, உணர்ந்து, தங்களுக்குள் ஒளிந்திருக்கும் அறிவாற்றலையும், செயலாற்றலையும் வெளிக்கொண்டு வந்து, இன்றைய இளைஞர்கள், தங்கள் வாழ்க்கையில் முன்னேறிட வேண்டும்.

சிங்கம் கதை

இதைக் கூறும்போது, எனக்கு சுவாமி விவேகானந்தர் கூறிய கதை ஒன்று, நினைவுக்கு வருகிறது.

ஒரு காட்டில், ஒரு பெண் சிங்கம் இருந்ததாம். அந்த பெண் சிங்கம், நன்கு பருத்தும், கருவுற்று நிறைமாதமாகவும் இருந்தது. அது ஒரு சமயம், இரையைத் தேடி அலைந்து கொண்டிருந்த போது, ஓர் ஆட்டு மந்தையைப் பார்த்தது. உடனே அதன் மேல் பாய்ந்தது. அந்த முயற்சியில், அந்தச் சிங்கம் இறந்து விட்டது. இறப்பதற்கு முன், அது ஒரு சிங்கக் குட்டியை ஈன்றது.

தாயற்ற அந்தச் சிங்கக் குட்டியை, ஆடுகள் வளர்த்தன. அந்த சிங்கக் குட்டி, ஆடுகளுடனேயே வளர்ந்தது. புல்லையே தின்றது, ஆடுகளைப் போலவே கத்தியது.

காலப்போக்கில், அந்தச் சிங்கக் குட்டி நன்கு வளர்ந்து, ஒரு பெரிய சிங்கமாக மாறிவிட்டது. ஆனால், அந்தச் சிங்கம், தன்னை ஓர் ஆடு என்றே எண்ணிக் கொண்டிருந்தது. ஒரு நாள் வேறொரு சிங்கம், இரை தேடிக் கொண்டு அங்கு வந்தது. அங்கே, ஆடுகளுக்கு நடுவில் ஒரு சிங்கம் இருப்பதையும், அது ஆபத்துச் சமயத்தில், ஆடுகளைப் போலவே பயந்து ஓடுவதையும் கண்டு, புதிய சிங்கம் வியப்படைந்தது.

புதிய சிங்கம், அந்த ‘‘ஆட்டுச் சிங்கத்தை” நெருங்கி, நீ ஆடல்ல, சிங்கம் தான், என்று சொல்ல முயன்றது.

ஆனால், புதிய சிங்கம் தன்னை நெருங்கும் போதே, ஆட்டுச் சிங்கம் பயந்து ஒடியது. ஆகவே புதுச்சிங்கம், ஒரு நல்ல வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தது. ஒரு நாள், ஆட்டுச் சிங்கம் தூங்கிக் கொண்டிருப்பதைப் புதிய சிங்கம் பார்த்தது. புதுச்சிங்கம் அதை நெருங்கி, நீ ஒரு சிங்கம், என்று கூறியது.

அஞ்சி நடுங்கிய அந்த ஆட்டுச் சிங்கம், புதிய சிங்கம் சொல்வதை நம்பாமல், நான் ஓர் ஆடுதான், என்று சொல்லிக்கொண்டே, ஆட்டைப் போல கத்தியது.

புதுச்சிங்கம், ஆட்டுச் சிங்கத்தை ஓர் ஏரிக்கு இழுத்துச் சென்றது. ஆட்டுச் சிங்கத்தைப் பார்த்து, அதோ தண்ணீரில் பார், நம் இருவருடைய உருவங்களின் பிரதி பிம்பமும் தெரிகிறது, என்று கூறியது.

உடனே ஆட்டுச் சிங்கம், ஏரி நீரில் தென்பட்ட இரண்டு பிரதிபிம்பங்களையும், ஒத்துப் பார்த்தது. அது, புதுச் சிங்கத்தையும், தன்னுடைய பிரதி பிம்பத்தையும், பார்த்துக் கொண்டது. அடுத்த கணத்திலேயே, தானும் ஒரு சிங்கம் தான் என்ற உண்மையை, அது உணர்ந்து விட்டது. உடனே அது சிலிர்த்தெழுந்து, சிங்க நடை போட்டு, சிம்ம கர்ஜனை புரிந்து, தான் காட்டுக்கு ராஜா என்பதை, மற்ற மிருகங்களுக்கு உணர்த்தியது, என்று, அந்தக் கதையைக் கூறி,

“இளைஞர்களே, நீங்கள் சிங்கங்கள்! தூய்மையான, எல்லையற்ற, முழுமையான ஆன்மாக்கள்! பிரபஞ்சத்தின் சக்தி முழுவதும் உங்களுள்ளேயே இருக்கிறது!!” என்று முடிக்கிறார், சுவாமி விவேகானந்தர்.

நமது இளைஞர்களும், இளம் பெண்களும், சுவாமி விவேகானந்தர் கூறிய அந்தக் கதையை நன்கு மனதில் இருத்தி, தாங்கள் சிங்கங்களே என்று தங்கள் வலிமையை புரிந்து கொண்டு, வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

விழாவில் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தர் வரவேற்புரை ஆற்றினார்.இவ்விழாவில், கொல்கத்தா பேலூர் மடத்தில் அமைந்துள்ள அகில உலக ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மற்றும் இயக்கத்தின் துணைத்தலைவர் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி மகராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர், சென்னை பெட்ரோலியம் கார்பரேசன் நிறுவனத்தின் மேலான்மை இயக்குநர் எஸ்.என். பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர். நல்லி குப்புசாமி செட்டியார் நன்றியுரை கூறினார்.

Please follow and like us: