திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா!

ராகு பெயர்ச்சி விழாவையொட்டி ராகு பகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டதை படத்தில் காணலாம்.

திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் நாகநாதசாமி கோவில் உள்ளது. இங்கு நாகநாதசாமி, கிரிகுஜாம்பிகை அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். ராகு பகவான், நாக கன்னி, நாக வள்ளி ஆகிய 2 துணைவிகளுடன் மங்கள ராகுவாக தனி சன்னதியில் அருள்பாலித்து வருவது சிறப்பம்சம் ஆகும்.

நவக்கிரக பரிகார தலங்களில் நாகநாதசாமி கோவில், ராகுவுக்குரிய பரிகார தலமாக கருதப்படுகிறது. ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நாளில் இக்கோவிலில் ராகு பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ராகு பகவான் நேற்று மதியம் 1.24 மணிக்கு கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி நேற்று கோவிலில் ராகு பெயர்ச்சி விழா நடந்தது.

விழாவை முன்னிட்டு கோவிலில் கடந்த 11-ந் தேதி இரவு யாகசாலை பூஜைகள் தொடங்கின. 20-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினர். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை 2, 3-வது கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 8 மணிக்கு 4-வது கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதன் முடிவில் புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடானது.

அப்போது ராகு பகவானுக்கு பல்வேறு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து புனித நீரால் கட அபிஷேகம் நடந்தது. பெயர்ச்சி நேரமான 1.24 மணிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதையடுத்து ராகுபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, மகாதீபாராதனை நடந்தது. ராகு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் நாகநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவக்கிரகங்களில் முதன்மையான மூர்த்தி என்று போற்றப்படும் கேதுபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். கேதுபகவான் 1ணூ ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி பெயர்ச்சி அடைவது வழக்கம்.

அதன்படி நேற்று கேது பகவான் மதியம் 2.04 மணிக்கு மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். கேதுபகவான் பெயர்ச்சி அடைந்தபோது தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ராகு கேது மந்திரம்

ஓம் தம் ரம் ராஹவே

நமஹ ஓம் ஹம் கேம் கேதவே நமஹ

ஆற்றல் மிகுந்த இம்மந்திரங்களை ராகு – கேது பெயர்ச்சி அன்றும், சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில், சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரக சந்நிதியில் உள்ள ராகு மற்றும் கேதுவின் சிலைகளுக்கு சிவப்பு நிற பூக்களை வைத்து, கருப்பு எள் மற்றும் உளுந்தை சமர்ப்பித்து, இம்மந்திரங்களை 108 முறை கூறி வழிபடுவதால் பிற உயிரினங்கள் குறிப்பாக பாம்புகளை கொண்ட தோஷங்கள் நீங்கும். நெடுநாட்களாக இருக்கும் நோய்கள் நீங்கும். உங்களின் வெளிநாடுகளுக்கு செல்லும் முயற்சிகளில் இருப்பவர்களுக்கு அதில் வெற்றி உண்டாகும். ஒன்பது கோள்களில் நிழல் கிரகங்களாக இருப்பது ராகு மற்றும் கேது கிரகம். சூரியன் மற்றும் சந்திர கிரகணத்தின் போது ஏற்படும் நிழல்களே இந்த ராகு மற்றும் கேது கிரகங்கள் என ஜோதிடத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த இரு கிரகங்களும் மற்ற கிரகங்களான குரு மற்றும் சனி போல வலிமையான கிரகங்களே ஆகும். சூரியன் சந்திரன் போன்ற கிரகங்களின் தாக்கத்தையே முறியடிக்கும் சக்தி ராகு கேதுவுக்கு உண்டு என பொதுவாக ஒரு கருத்து உள்ளது. நவகோள்களில் “செவ்வாய்” கிரகத்தின் தன்மையை ராகுவும், “சனி” கிரகத்தின் தன்மையை கேதுவும் கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு கிடைக்க வேண்டிய குழந்தை பாக்கியத்திற்கு இந்த இரு கிரங்கங்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த ராகு கேது கிரகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல இடங்களில் இருந்தால் அவர்களுக்கு பல சிறப்பான நன்மைகள் ஏற்படும். அப்படி இல்லாதவர்கள் ராகு கேதுவுக்குரிய இம்மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து அத்தகைய நன்மைகளை பெறலாம்.

Please follow and like us: