வண்ணாரப்பேட்டை – டி.எம்.எஸ். மெட்ரோ ரெயில் சேவை: மோடி, எடப்பாடி துவக்கி வைத்தார்கள்

வண்ணாரப்பேட்டை – டி.எம்.எஸ். மெட்ரோ ரெயில் சேவை: மோடி, எடப்பாடி துவக்கி வைத்தார்கள்

சென்னை, பிப்.10-–
திருப்பூரில் இன்று சென்னை டி.எம்.எஸ். – வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்கள். மேலும் பல்வேறு புதிய திட்டங்களுக்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
சென்னையில் முதல் கட்டமாக ரூ.19 ஆயிரத்து 58 கோடி செலவில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமானநிலையம் வரையிலான 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை இடையேயான 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2–வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடைபெற்று வந்தன.
மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தில், ஏற்கனவே 35 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிவடைந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதாவது, சென்டிரலில் இருந்து விமானநிலையம் வரையிலும், விமானநிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையிலும் ஏற்கனவே ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
விமானநிலையம் – வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் டி.எம்.எஸ்.சில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையிலான 10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மீதம் உள்ள வழித்தடத்தில் சுரங்கப்பாதை, ரெயில் நிலையங்களின் கட்டுமான பணிகள், சிக்னல்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து போக்குவரத்துக்கு தயார் நிலையில் உள்ளது. இதன் மூலம் சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் முழுமை அடைந்துள்ளன.
19 சுரங்கப்பாதை
ரெயில் நிலையம்
இதில் ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், சென்டிரல் 2–ம் அடுக்கு, ஐகோர்ட், மண்ணடி, வண்ணாரப்பேட்டை ஆகிய 7 ரெயில் நிலையங்கள் உள்ளன. மொத்தத்தில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் 19 ஏ.சி. சுரங்கப்பாதை ரெயில் நிலையங்கள், 13 உயர்த்தப்பட்ட ரெயில் நிலையங்கள் என மொத்தம் 32 ரெயில் நிலையங்கள் உள்ளன. பயணிகள் பாதுகாப்புக்காக பிளாட்பாரம் மேடை திரைக் கதவுகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
டி.எம்.எஸ். – வண்ணாரப்பேட்டை இடையேயான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் முழுமை அடைந்துள்ளது.
பணிகள் நிறைவடைந்த டி.எம்.எஸ். – வண்ணாரப்பேட்டை இடையேயான பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதற்கான விழா திருப்பூர் பெருமாநல்லூரில் இன்று நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் வண்ணாரப்பேட்டை – டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்தையும், மெட்ரோ ரெயில் நிலையங்களையும் தொடங்கி வைத்தார்கள்.
32 ரெயில் நிலையங்கள்
முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் மொத்தம் 32 ரெயில் நிலையங்கள் உள்ளன. மெட்ரோ ரெயில் 2 மார்க்கமாக செல்கிறது. அதாவது வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர்நீதிமன்றம், சென்ட்ரல், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, ஏ.ஜி. டி.எம்.எஸ்., தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, சின்னமலை, கிண்டி, ஆலந்தூர், நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம் மெட்ரோ, விமான நிலையம் வரை நேராக ஒரே மார்க்கமாக ரெயில் செல்கிறது.
சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் மெட்ரோ, நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, செனாய் நகர், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் டவர், திருமங்கலம், கோயம்பேடு, புறநகர் பஸ் நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், ஈக்காட்டு தாங்கல், ஆலந்தூர், பரங்கிமலை மெட்ரோ வரை மற்றொரு மார்க்கத்திலும் மெட்ரோ ரெயில் செல்லும்.
மேலும் சென்னை கே.கே.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 470 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டிடத்தையும்,
எண்ணூர் கடற்கரையில் உள்ள (பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்) பி.பி.சி.எல். முனையத்தையும்,
ரூ.393 கோடி செலவில் சென்னை துறைமுகத்தில் இருந்து மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு (சி.பி.சி.எல்.) குழாய் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அத்துடன் திருப்பூரில் புதிதாக கட்டப்பட இருக்கும் 100 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கும் அடிக்கல் நாட்டினார்.
சென்னை விமானநிலையத்தை மேம்படுத்தி நவீனப்படுத்தும் திட்டத்துக்கும், திருச்சி விமானநிலையத்தில் புதிதாக கட்டப்பட இருக்கும் ஒருங்கிணைந்த கட்டிடத்துக்கும் மோடி அடிக்கல் நாட்டினார்.
திருச்சி விமான நிலையம் 951 கோடியே 28 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த கட்டிடமாக கட்டப்பட்டு உள்ளது. இங்கு 48 ‘செக்–இன்’ கவுண்டர்கள், ஆயிரம் கார்கள் நிறுத்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம் 2 ஆயிரத்து 467 கோடியில் நவீனப்படுத்தப்படுகிறது. 140 ‘செக்–இன்’ கவுண்டர்கள், 2 ஆயிரம் கார்கள் நிறுத்த பல அடுக்கு மாடிகள் ஏற்படுத்தப்படும்.
விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சபாநாயகர் பி.தனபால் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க் கள், உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் இந்த விழாவை காணும் வகையில் சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு எதிரே சுமார் 2 ஆயிரம் பேர் அமரும் வகையில் பந்தல் போடப்பட்டு, அதில் பெரிய அளவிலான எல்.இ.டி., திரை அமைக்கப்பட்டு உள்ளது.
சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள 2 அடுக்குகளில் முதல் அடுக்கில் கோயம்பேடு மார்க்கத்தில் இருந்து வரும் ரெயில்கள் கையாளப்படுகின்றன. அதற்கு கீழ் சுமார் நூறு அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள 2-வது அடுக்கில் அண்ணாசாலை மார்க்கத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை நோக்கி வரும் ரெயில்கள் கையாளப்பட உள்ளன.
2-வது அடுக்கில் உள்ள பிளாட்பாரத்தில் எல்.இ.டி. திரையுடன் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் போக்குவரத்தை மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்ததும், அந்த மேடையில் இருக்கும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், எம்.சி.சம்பத் ஆகியோர் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரெயிலுக்கு பச்சை கொடி காட்டினார்கள்.
அவர்கள் கொடி அசைத்ததும் அந்த முதல் ரெயில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை நோக்கி புறப்பட்டது. ரெயிலில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்தனர். பின்னர் அதே ரெயில் வண்ணாரப்பேட்டையில் இருந்து டி.எம்.எஸ். வரை தொடர்ந்து சென்றது.
திருப்பூர் விழாவில் கலந்துகொள்வதற்காக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் கோவை வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பெருமாநல்லூர் வந்தார். ஹெலிபேடு தளத்தில் இருந்து கார் மூலம் விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருப்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ALSO READ:

காமராஜர் விரும்பியவாறு ஊழலற்ற ஆட்சியை அளித்து வருகிறோம் – திருப்பூரில் மோடி பெருமிதம்!

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *