டி.எம்.எஸ் – வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில்: மோடி, எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்கள்

டி.எம்.எஸ் – வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில்: மோடி, எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்கள்

தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் பிரதமர் நாளை பயணம்

விசாகப்பட்டினம், மங்களூர், படூர் ஆகிய இடங்களில் உள்ள அவசர கால பெட்ரோலியப் பொருட்கள் கிடங்கு வசதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

தார்வாட் ஐஐடி, தார்வாட் ஐஐஐடி ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது.

பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைப்பார்.

புதுதில்லி, பிப்ரவரி 09, 2019

ஆந்திரப்பிரதேசத்தில் குண்டூர், தமிழ்நாட்டில் திருப்பூர், கர்நாடகாவில் ஹூப்ளி ஆகிய இடங்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (10.02.2019) பயணம் மேற்கொள்கிறார். இந்த மாநிலங்களில் பல வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைப்பார்.

ஆந்திரப்பிரதேசத்தில் பிரதமர்

முதலாவதாக ஆந்திரப்பிரதேச மாநிலம் குண்டூருக்கு செல்லவிருக்கும் பிரதமர், இங்குள்ள எடுக்கார் புறவழிச்சாலையில் பல திட்டங்களை தொடங்கி வைப்பார்.

நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை மேம்படுத்த, விசாகப்பட்டினத்தில் இந்திய அவசரகால பெட்ரோலியப் பொருட்கள் கிடங்கு நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள 1.33 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்ட அவசரகால பெட்ரோலியப் பொருட்கள் கிடங்கினைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

ஆந்திரப்பிரதேசத்தின் கடற்கரைப் பகுதிக்கு அப்பால், கிருஷ்ணா கோதாவரி படுகையில் அமைந்துள்ள இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகத்தின் (ஒஎன்ஜிசி) வசிஷ்டா மற்றும் எஸ்-1 மேம்பாட்டுத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைப்பார்.

கிருஷ்ணாப்பட்டினத்தில் பாரத பெட்ரோலிய நிறுவனத்தின் (பிபிசிஎல்) புதிய முனையம் அமைப்பதற்கு அவர் அடிக்கல் நாட்டுவார்.

ஆந்திரப்பிரதேசத்திலும், அதன் அண்டை மாநிலங்களிலும் எரிவாயு அடிப்படையிலான தொழில் பிரிவுகளைத் தொடங்குவதற்கு இந்த திட்டங்கள் பெரும் ஊக்கமளிக்கும்.

இதன்பின்னர், பிரதமர் தமிழ்நாட்டில் உள்ள திருப்பூருக்கு புறப்பட்டுச் செல்வார்.

தமிழ்நாட்டில் பிரதமர்

தமிழ்நாட்டின் திருப்பூரில் உள்ள பெருமாநல்லூர் கிராமத்தில் பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைப்பார்.

திருப்பூரில் ஈ எஸ் ஐ சி மருத்துவமனைக்கு அவர் அடிக்கல் நாட்டுவார். 100 படுக்கைகளைக் கொண்ட இந்த மருத்துவமனை திருப்பூரிலும், அதன் அருகே உள்ள பகுதிகளிலும் ஈ எஸ் ஐ சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ள ஒரு லட்சம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்யும்.

திருச்சி விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த புதிய கட்டுமானத்திற்கும், சென்னை விமான நிலையத்தின் நவீனமயத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

சென்னையில் உள்ள ஈஎஸ்ஐசி மருத்துவமனையை அவர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். 470 படுக்கைகளைக் கொண்ட இந்த மருத்துவமனையின் வசதிகள் அனைத்து விதமான பிரிவுகளிலும், தரமான சிகிச்சையை அளிப்பதாக இருக்கும்.

இந்த நிகழ்ச்சியின் போது, பிபிசிஎல்-ன் எண்ணூர் கடலோர முனையம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்.

சென்னை துறைமுகத்தில் இருந்து மணலியில் உள்ள சென்னை பெட்ரோலிய நிறுவனத்தின் (சிபிசிஎல்) சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் புதிய கச்சா எண்ணெய் குழாய் பாதையையும் பிரதமர் மோடி தொடங்கி வைப்பார். விரிவான பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளப் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையுடன் கச்சா எண்ணெய்யைக் கொண்டு செல்வதை உறுதிப்படுத்தும், இந்தக் குழாய் வழிப்பாதை தமிழ்நாடு மற்றும் அதன் அண்டை மாநிலங்களின் தேவையையும் பூர்த்தி செய்யும்.

சென்னை வண்ணாரப்பேட்டை – டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் இறுதி கட்ட வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை நாளை தொடங்கப்பட உள்ள இந்த மெட்ரோ ரெயில் சேவையை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து தொடங்கி வைக்கிறார்கள். அதோடு அந்த வழித்தடத்தில் ஆயிரம்விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், ஐகோர்ட்டு, மண்ணடி மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ சுரங்கப்பாதை ரெயில் நிலையங்களையும் மோடி, எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து திறந்து வைக்க உள்ளனர்.

10 கிலோமீட்டர் தூரமுள்ள இந்தப் பிரிவு சென்னை மெட்ரோ முதல் கட்டத்தின் ஒரு பகுதியாகும்.

விழாவில் மத்திய மந்திரிகள் ஹர்தீப்சிங் புரி, பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.சி.சம்பத் முன்னிலை வகிக்கிறார்கள்.

இதன் பிறகு பிரதமர் கர்நாடகாவின் ஹூப்ளிக்குப் புறப்பட்டுச் செல்வார்.

கர்நாடகாவில் பிரதமர்

பிரதமரின் நாளைய பயணம் கர்நாடகாவின் ஹூப்ளியில் நிறைவடையும். ஹூப்ளியில் உள்ள கப்பூரில் பல திட்டங்களை அவர் தொடங்கி வைப்பார்.

தார்வாடில் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்திற்கும் (ஐஐடி), இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்திற்கும் (ஐஐஐடி) பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

இந்த நிகழ்ச்சியின் போது தார்வாடில் உள்ள நகர எரிவாயு விநியோகத் திட்டத்தை அவர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். குடிமக்களுக்கு தூய்மையான எரிபொருள் கிடைப்பதை அதிகப்படுத்துவதற்காக நாடுமுழுவதும் எரிவாயு விநியோக கட்டமைப்பை விரிவுபடுத்த மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மேலும் ஒரு நடவடிக்கையாக 1.5 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்ட மங்களூர் அவசரகால பெட்ரோலியப் பொருட்கள் கிடங்கு (எஸ்பிஆர்) வசதியையும், படூரில் 2.5 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்ட கிடங்கு வசதியையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

சிக்ஜாஜூர்-மயக்கொண்டா பிரிவில் 18 கிலோமீட்டர் தூர இரட்டை ரயில்பாதை மற்றொரு முக்கிய அம்சமாகும். தென்மேற்கு ரயில்வேயில் பெங்களூரு – ஹுப்பாலி வழித்தடத்தில் 190 கிலோமீட்டர் தூரம் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணியின் ஒரு பகுதியாக ஹூப்ளி-சிக்ஜாஜூர் திட்டம் இருக்கும். முக்கியமான இந்த வழித்தடத்தில் பெங்களூருவில் இருந்து ஹுப்பாலி, பெலாகரி, கோவா, புனே, மும்பை ஆகியவற்றை இணைக்கும் இரட்டை ரயில்பாதையால் போக்குவரத்துத் திறன் அதிகரிக்கும். மேலும், ரயில்களின் இயக்கம் விரைவுபடும்.

ஹோஸ்பேட்-ஹூப்ளி-வாஸ்கோடகாமா இடையேயான 346 கிலோமீட்டர் தூர மின்மயப் பணியையும் பிரதமர் தொடங்கி வைப்பார். இதன்மூலம் பயணநேரம் குறைவதோடு, டீசல் பயன்பாடும் குறையும். இதனால் கரியமில வாயு வெளியேறுவதால் ஏற்படும் காற்றுமாசும் குறையும்.

அனைவருக்கும் வீடு என்ற தமது கருத்தை மனதில் கொண்டு தார்வாடில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள 2,384 வீடுகளின் இணையம் வழியான கிரஹப்பிரவேசத்தையும் பிரதமர் பார்வையிடுவார்.

Please follow and like us: