தமிழக சூரிய மின்சார உற்பத்தி திறன் 4 ஆண்டுக்குள் 9000 மெகாவாட்டாக உயர்த்தப்படும்

தமிழக சூரிய மின்சார உற்பத்தி திறன் 4 ஆண்டுக்குள் 9000 மெகாவாட்டாக உயர்த்தப்படும்

சென்னை, பிப்.8, தமிழகத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி திறனை 2023க்குள் 9000 மெகாவாட்டாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

2011 ம் ஆண்டு முதல், மாநில மற்றும் மத்திய தொகுப்பு மின் திட்டங்கள், மின் கொள்முதல் மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி ஆகியவற்றின் மூலம் 13,619 மெகாவாட் மின்சாரத் திறன் மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு, மாநிலத்தின் தற்போதைய ஒட்டு மொத்த மின் திறன் 30,191 மெகாவாட் ஆக உள்ளது. அதிகரித்து வரும் மின் தேவைக்கேற்ப 13,000 மெகாவாட் அளவிற்கு மாநிலத்தின் அனல்மின் திட்டங்களை 91,880 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைத் தவிர, 2,500 மெகாவாட் அளவிற்கான புனல்மின் திட்டங்கள் 8,831.29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.

மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வௌிக்கொணர்ந்து மின்வினியோக மையங்களுக்கு வினியோகிக்கும் சங்கிலித் தொடரில் மின் தொடரமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. 2011 ம் ஆண்டு முதல் 464 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் 12,636 சுற்று கிலோ மீட்டர் நீளமுள்ள மிக உயர் மின்னழுத்தப் பாதைகள் இயக்கி வைக்கப்பட்டுள்ளன. ஊரக மற்றும் நகரங்களின் மின் பகிர்மான உள்கட்டமைப்பை மேம்படுத்த ‘தீனதயாள் உபாத்யாயா கிராம ஜோதி யோஜனா’ மற்றும் ‘ஒருங்கிணைக்கப்பட்ட மின் மேம்பாட்டுத் திட்டங்களின்’ மூலமாக, ஒருமித்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பசுமை எரிசக்தியை மேம்படுத்தும் நோக்கத்தில், தேனி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 1,125 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 250 மெகாவாட் திறன் கொண்ட மிதக்கும் சூரியசக்தி மின் திட்டங்களும், 2,350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 மெகாவாட் திறன் கொண்ட கடலாடி மிக உய்ய சூரிய மின்னழுத்தப் பூங்கா திட்டமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும். சாகுபடிக்கு பயன்படாத சமுதாய மற்றும் பட்டா நிலங்களில், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், பசுமைச் சூழல் நிதியத்தின் கீழ் உள்ள நிதியிலிருந்து, 5 மெகாவாட் திறன் கொண்ட சிறிய அளவிலான ஊரக புதுப்பிக்கத்தக்க மின் பூங்காவுடன் ‘அம்மா பசுமை கிராமம்’ என்ற நிலையான மின் கிராமங்களை, தமிழ்நாடு மின் மேம்பாட்டு முகமை ஏற்படுத்தும். அண்மையில் முதலமைச்சரால் வௌியிடப்பட்ட 2019 தமிழ்நாடு சூரிய ஔி மின்சக்தி கொள்கை, மாநிலத்தின் சூரிய ஔி மின்சக்தி உற்பத்தித் திறனை, 2023 ம் ஆண்டுக்குள் 9,000 மெகாவாட் அளவிற்கு உயர்த்த வழிவகை செய்யும்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் 22,815 கோடி ரூபாய் கடனை மாநில அரசு ‘உதய்’ திட்டத்தின் கீழ் ஏற்றுக் கொண்டது. இதன் விளைவாக, ஆண்டிற்கு வட்டிச்செலவினம் 1,779.42 கோடி ரூபாய் அளவிற்கு அரசுக்கு அதிகரித்துள்ளது.

இந்தக் கடன் தொகை ஐந்து ஆண்டுகளில் அரசு மானியமாக மாற்றப்பட வேண்டும். இதுவரை, 9,126 கோடி ரூபாய் உதய் திட்டக் கடனை மானியமாக மாற்றியுள்ளதுடன், 2019 2020 ம் ஆண்டில் 4,563 கோடி ரூபாய் கடனையும் இந்த அரசு மானியமாக மாற்றும். விவசாயம் மற்றும் இதர நுகர்வோர்கள் உட்பட பல்வேறு வகையான நுகர்வோருக்கு வழங்கப்படும் மின் மானியம் தொடர்ந்து வழங்கப்படும். இதற்காக 8,118.25 கோடி ரூபாய் இந்த வரவு செலவு தி்ட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 2020 ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் எரிசக்தித் துறைக்கு 18,560.77 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Please follow and like us: