தைப்பூசம்: தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

தைப்பூசம்: தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

சென்னை, ஜன. 22– தைப்பூச விழாவையொட்டி தமிழகம் முழுவதும் இன்று முருகன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

முருகப்பெருமானின் வழிபாட்டில் தைப்பூச விரதம், பங்குனி உத்திர விரதம், கந்தசஷ்டி விரதம், கார்த்திகை விரதம் போன்ற விரதங்கள் முருக பக்தர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

தைப்பூசம் என்பது தை மாதம் பூச நட்சத்திரத்தோடு நிறைந்த முழுமதி கூடும் (பவுர்ணமி) மங்கள நாளில் முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் உயரிய வெற்றி விழாவாகும்.

உமாதேவியார், கொடிய அரக்கன் ‘தாரகன்’ என்பவனை கொன்று அழிக்க முருகப்பெருமானுக்கு வெற்றி வேல் வழங்கியது இந்நாளில் தான். முருகனின் வெற்றியை போற்றும் விதமாக தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. தைப்பூச விழா தமிழக முழுவதும் உள்ள முருகன் கோவிலில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வடபழனி

சென்னை வடபழனி முருகன் கோவிலில் தைப்பூச விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை நடைத்திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் மகா அலங்காரமும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்காவடி, புஷ்பகாவடி, பன்னீர் காவடி மற்றும் அலகு குத்தி வந்து சிறப்பு வழிபாடு செய்தனர். பக்தர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல் சென்னையில் உள்ள கந்தக்கோட்டம், குன்றத்துார் முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், குரோம்பேட்டை, குன்றக்குடி முருகன் கோவில், சைதாப்பேட்டை காரணீசுவரர் கோவில், பிரசித்தி பெற்ற மயிலம், திருப்போரூர், குமரக்கோட்டம், வல்லக்கோட்டை, பெரும்பேர் கண்டிகை, சிறுவாபுரி கோவில்களில் பக்தர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருத்தணி முருகன் கோவிலில் சுப்பிரமணி சுவாமிக்கு அதிகாலை அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பழனி

தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனியில் இன்று காலை வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி சர்வ அலங்காரத்துடன் இன்று அதிகாலை சண்முகநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி பெரியநாயகியம்மன் திருக்கோவில் அருகே உள்ள திருத்தேரில் எழுந்தருளினார். இதையடுத்து இன்று மாலை தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுக்கிறார்கள்.

தைப்பூசத் திருவிழாவையொட்டி எங்கு பார்த்தாலும் பக்தர்கள் பல்வேறு காவடியாட்டம், ஒயிலாட்டம், ஆடிப்பாடி முருகனுக்கு “அரோகரா” பக்தி கோஷத்துடன் சென்றனர். திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், நெல்லை, திருச்சி, திருப்பூர், கரூர், கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கு அருகே அமைக்கப்பட்ட சிறப்பு தரிசன வரிசைகள் வழியாக பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று பழனியாண்டவரை தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர்

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் தங்க சப்பரத்தில் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து சன்னதி தெரு வழியாக மீண்டும் கோயிலை சேர்கிறார். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் கோயில் கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பாரதி, தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளார்கள். திருச்செந்தூர் டி.எஸ்.பி. பாரத் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம்

முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் தைப்பூசத் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி கோவில் மலையடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் சன்னதிக்கு மேள தாளங்கள் முழங்க பூஜை பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அங்கு கோவிலின் கருவறையில் உள்ள பழனியாண்டவருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான மகா அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டன. விழாவையொட்டி மதுரையிலிருந்து ஏராளமான பக்தர்கள் பறவைக்காவடி எடுத்தும், பால்குடங்கள் சுமந்தும் திருப்பரங்குன்றத்திற்கு பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.

மருதமலை

முருகபெருமானின் திருத்தலங்களில் ஏழாம் படைவீடு என போற்றப்படும் மருதமலை முருகன் கோயிலில் தைப்பூச தேரோட்ட விழா நடைபெற்றது. பக்தர்களின் அரோகரா, அரோகரா என்ற பக்தி கோஷங்கள் முழங்க திருத்தேர் கோயிலை சுற்றி வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. பிறகு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சொர்ண அலங்காரத்தில் உள்ள முருக பெருமானை தரிசித்து அருள் பெற்றனர். கோயிலில் காலை 3.30 மணிக்கு கோ-பூஜை முடிந்தவுடன் நடை திறக்கப்பட்டு 16 வகை திரவியங்களான சந்தனாதி தைலம், பஞ்கவ்யம், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், பழவகைகள், கரும்புசாறு, இளநீர், சந்தனம், பன்னீர், விபூதி, சங்கு அபிஷேகம், ருத்ரகலசம் போன்றவைகளால் சுவாமிக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. 5.30 மணிக்கு நாள் முழுவதும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க சொர்ண அலங்காரம் செய்யப்பட்டது. கோவையை சுற்றியுள்ள முருக பக்தர்கள் விடிய, விடிய நடைபயணமாக தைப்பூச காவடி மற்றும் பால்குடம் ஏந்தி வந்தனர்.

இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் தைப்பூச விழா சிறப்பாக நடைபெற்றது.

Please follow and like us: