விஷால் பிடிவாதம் – தமிழக அரசு அதிருப்தி…?

விஷால் பிடிவாதம் – தமிழக அரசு அதிருப்தி…?

தியேட்டர் டிக்கட் கட்டணம் உயர்வு, கேளிக்கை வரிவிதித்தல் சம்பந்தமாக தமிழக அரசுக்கும் – திரைத்துறையினருக்கும் கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வந்தது.

2006க்கு பின் தமிழ் திரைப்பட துறையினர் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் மாறி மாறி முதல்வர் பொறுப்புக்கு வந்த போது அவர்களுக்கு பாராட்டு விழாக்களை நடத்தி காரியம் சாதிக்க முயற்சித்தார்கள். நடந்து முட்டி தேய்ந்ததே தவிர எந்த சலுகையையும் பெற முடியவில்லை.

எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு சினிமா துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அதே நேரம் சலுகைகளையும் தர விரும்புகிறது. அதன் வெளிப்பாடாக 10 சதவீத கேளிக்கை வரியை எட்டு சதவீதமாக குறைக்க ஒப்புக் கொண்டு உள்ளது.

டிக்கட் கட்டண உயர்வில் குளிரூட்டப்பட்ட தியேட்டர்களுக்கு குறைந்த பட்சம் 40 ரூபாய் அதிகபட்சம் 100, சாதாரண தியேட்டர்களுக்கு குறைந்த பட்சம் 30 அதிக பட்சம் 70 ரூபாய் என உயர்த்தி தர ஒப்புக் கொண்டுள்ளது அரசு.

தியேட்டர் லைசென்ஸ்களை புதுப்பிப்பதில் இருந்து வரும் தேவையற்ற நடைமுறை சிக்கல்களை நீக்கி தரவும் எடப்பாடி அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

கருணாநிதியும், ஜெயலலிதாவும் செய்து தர விரும்பாத பல கோரிக்கைகளை எடப்பாடி அரசு செய்து தர ஒப்புக் கொண்ட பின்னரும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் கேளிக்கை வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.அதுவரை புதிய படங்கள் ரீலீஸ் இல்லை என கூறி வருவது அரசாங்கத்தை கோபமுற வைத்திருக்கிறது.

திரைத்துறை சார்பில்பேச்சுவார்த்தையில் பங்கேற்றவர்களுக்கும் விஷால் முடிவு ஏற்புடையதாக இல்லை.

விஷாலை தவிர அனைவரும் அரசின் முடிவை ஏற்றுக் கொள்வது என்ற முடிவுக்கு வந்து விட்டாலும் விஷால் பிடிவாதத்தால் முடிவு எட்டப்படாமல் அரசாங்கம் பழைய நிலையே தொடரும் என அறிவித்துவிட்டால் தியேட்டர்கள் பாடு மிக மோசமாகி விடும் என்கின்றனர்தியேட்டர் உரிமையாளர்கள்.

விஷால் பிடிவாதம் அரசாங்கத்துடன் மோதல் போக்கை உருவாக்கி விடும். சினிமா தொழில் சிக்கலுக்குரியதாகி விடும் என்கின்றனர் திரைத்துறை அனுபவசாலிகள்.

Please follow and like us: