ஆண்தேவதை விமர்சனம் ரேட்டிங் 3/5

ஆண் தேவதை விமர்சனம்

ரேட்டிங் 3/5

சிகரம் சினிமாஸ் சார்பில் அகமத் பக்ருதீனுடன் இணைந்து ஆண் தேவதை படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார் தாமிரா.

இதில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, காளி வெங்கட், சுஜா வருணி, பேபி மோனிகா,மாஸ்டர் கவின் பூபதி, ஹரீஷ் பேராடி,இளவரசு, அபிஷேக், அறந்தாங்கி நிஷா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஆண் தேவதை”.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-ஜிப்ரான், ஒளிப்பதிவு-விஜய் மில்டன்,எடிட்டிங் – காசி விஸ்வநாதன்,கலை இயக்கம் – ஜாக்சன், சண்டைப்பயிற்சி – ரன் ரவி, உடை- கீர்த்திவாசன், ஷோபியா சவுரிராஜன்,நடனம்-ராதிகா, தயாரிப்பு நிர்வாகம்- அண்ணாமலை, பி.ஆர்.ஓ – ஜான்.

காதலித்து திருமணம் செய்து கொள்ளும் சமுத்திரகனி-ரம்யா பாண்டியன் தம்பதிக்கு ஒரு ஆண்-ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறக்கிறது. குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு இருவரும் வேலைக்கு செல்ல பல பிரச்னைகள் உருவாகிறது. இதனால் குழந்தைகளை கவனித்துக் கொள்ள ரம்யா பாண்டியனை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சமுத்திரகனி கூற அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் ரம்யா. அதனால் சமுத்திரகனி தன் வேலையை விட்டு விட்டு குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்கிறார். ரம்யா சம்பாதிப்பதில் மும்முரமாக இருக்க, சமுத்திரகனி குழந்தைகளை கண்ணும் கருத்துமாக வளர்கிறார். பெரிய அபார்மெண்டில் வாடகை வீட்டில் குடியிருந்தாலும், சொந்தமாக வீடு, கார் வாங்க வேண்டும் என்ற ஆசை ரம்யா பாண்டியனுக்கு ஏற்படுகிறது. பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக இருக்கும் ரம்யா பாண்டியனின் நடவடிக்கையும் மாற, கணவன்-மனைவியிடையே சண்டை உண்டாகி பெண் குழந்தையுடன் வெளியேறுகிறார் சமுத்திரகனி. அதன் பின் சமுத்திரகனி தனியாக சென்று வாழ்ந்தாரா? நல்ல வேலை கிடைத்து நல்ல நிலைமைக்கு வந்தாரா? ரம்யா பாண்டியனின் ஆசை நிறைவேறியதா? கணவன்-மனைவி ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

இரண்டு குழந்தைகளின் அப்பா இளங்கோவாக சமுத்திரக்கனி பரபரப்பான வாழ்க்கையை வெறுத்து, குடும்பத்தை பொறுப்பாக கவனிக்கும் வீட்டுக்கணவனாக தன் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். பம்பரமாக வேலை செய்து மனைவி, குழந்கைளை கவனித்துக் கொள்வதோடு, அபார்ட்மெண்ட் பெண்களிடமும் அன்பாக பழகும் மனிதராகவும்,மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தவுடன் தன் மகளை பாதுகாத்து பத்திரமாக பார்த்துக் கொண்டு அவ்வப்போது அறிவுரைகளை வழங்கும் ஆண்களை பெருமை சேர்க்கும் கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்து ஆண்களை கௌரவப்படுத்தியிருக்கிறார்.

அம்மா ஜெஸ்ஸியாக ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தில் வந்த மல்லிகா உருமாறி, மாடர்ன் பெண்ணாக, ஐடி கம்பெனியில் வேலை செய்யும் நாகரிக வாழ்க்கையை வாழ துடிக்கும் பெண்ணாக அசத்தியிருக்கிறார்.

ராதாரவி, காளி வெங்கட், சுஜா வருணி, பேபி மோனிகா, மாஸ்டர் கவின் பூபதி, ஹரீஷ் பேராடி,இளவரசு, அபிஷேக், அறந்தாங்கி நிஷா ஆகியோர் பங்களிப்பு படத்திற்கு பலம்.

ஜிப்ரானின் இசை, விஜய் மில்டன் ஒளிப்பதிவும் படத்திற்கு இரு தூண்களாக தாங்கி பிடிக்கிறார்கள்.

இயக்கம்:-தாமிரா. அமைதியான வாழ்க்கையை வாழ துடிக்கும் கணவன், ஆடம்பரமாக வாழ துடிக்கும் மனைவி இடையே குழுந்தை வளர்ப்பு மாட்டிக் கொள்ள, பொருளாதார சூழலை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கை எத்தகைய இக்கட்டான சூழ்நிலைக்கும், அவமானத்திற்கும் வழி வகுக்கிறது என்பதை அழகாக சென்னை பின்னணியில் திரைக்கதையமைத்து பேராசை பெருநஷ்டம் என்பதை இடித்துரைத்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் தாமிரா. இருக்கிறதை வைத்துக் கொண்டு வாழு பறக்கிறதுக்கு ஆசைப்படாதே என்பதே படத்தின் மெசேஜ்.

மொத்தத்தில் இன்றைய நாகரிக உலகில் குடும்பத்தை மறந்து பணத்தை தேடி ஒடிக் கொண்டியேறிருந்தால் நிம்மதியை இழந்து மிஞ்சுவது ஏமாற்றமும், அவமானமும் தான் என்பதை சொல்லும் படம் ஆண்தேவதை.

Please follow and like us: