NITT: ரூ. 190 கோடி முதலீட்டில் உயர் ஆய்வு மையத்தையும், அக். 5 அன்று, அமைச்சர் திறந்து வைக்கிறார்!

திருச்சி, என்.ஐ.டி. கல்வி நிறுவனத்தின் ‘செறிவுமிகு செயல் திட்டத்தினை’ வெளியிடுகிறார், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர்!

ரூ. 190 கோடி முதலீட்டில் உயர் ஆய்வு மையத்தையும், அக். 5 அன்று, அமைச்சர் திறந்து வைக்கிறார்!

சென்னை,  திருச்சிராப்பள்ளி, தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (National Institute of Technology, Tiruchirappalli – NITT) ஏற்றமிகு எதிர்கால வளர்ச்சியினை உறுதி செய்யும் நோக்கத்துடன், அடுத்த 5 ஆண்டுகளுக்கான புதிய ‘செறிவுமிகு செயல் திட்டத்தினை’ (5-year Strategic Plan), மத்திய அரசின் மாண்புமிகு மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், அக். 5 அன்று நிறுவன வளாகத்தில், தொடங்கி வைக்க உள்ளார்.

எதிர்கால தொழில்நுட்பங்களில் உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் பன்னாட்டு அளவில் பிற பல்கலைக்கழகங்கள், பிற ஆராய்ச்சி நிறுவனங்களுடன் கூட்டிணைவினை மேற்கொண்டு என்.ஐ.டி.டி. நிறுவனத்தின் நிர்வாகத்தை மேம்படுத்தவும், அதிக வருவாய் பெருக்கத்திற்கான வழிகளை ஏற்படுத்தவும் இந்தப் புதிய செயல் திட்டம் வழி வகுக்கும்.

“மண்டல பொறியியல் கல்லூரி (Regional Engineering College) என்று முன்னாளில் அழைக்கப்பட்டு, தற்போது தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சிராப்பள்ளி என்ற பெயரில் இயங்கி வரும் இந்நிறுவனம், ஆராய்ச்சி முடிவுகள், தொழில் ஆலோசனை மூலம் வருவாய் ஈட்டுதல், கல்வி மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் தனித்துவமிக்கதாக விளங்குகிறது. மேலும் இந்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களின் தர வரிசை கட்டமைப்பினால் (National Institutional Ranking Framework – NIRF), கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து முதன்மையான தேசிய தொழில்நுட்பக் கழகமாக (Best NIT in India) சான்றளிக்கப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டுக்கான ‘டைம்ஸ்’ உயர் கல்வி தர வரிசையில், உலகிலுள்ள தலைசிறந்த 1000 உயர் கல்விக் கழகங்களில் என்.ஐ.டி.டி.-யும் இடம் பெற்றுள்ளது” என்று சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது என்.ஐ.டி. திருச்சிராப்பள்ளியின் இயக்குனர் பேராசிரியை மினி ஷாஜி தாமஸ் (Dr Mini Shaji Thomas) தெரிவித்தார்.

“உலகின் மிகச் சிறந்த 500 பல்கலைக்கழகங்களின் தர வரிசையில் என்.ஐ.டி.டி. இடம்பெற வேண்டுமென்ற இலக்கினை முன் வைத்து இப்புதிய ‘செறிவுமிகு செயல் திட்டம்’ (2019-2024) முனைப்புடன் நடைமுறைப்படுத்தப்படும்” என்று டாக்டர் மினி தாமஸ் கூறினார். பொருண்மை இணைய தொழிற்நுட்பம் (Internet of Things), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இயைந்த வளர்ச்சி (Sustainable Development), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சார்ந்த கண்டுபிடிப்புகள் (Innovations in Harnessing Renewable Energy) ஆகிய வளர்ந்து வரும் துறைகளில் தமக்கென ஒரு தனி இடத்தை இந்நிறுவனம் தக்க வைத்துக் கொள்வதற்கு இத்திட்டம் பெரிதும் உதவும்.

வெளிநாடுகளிலிருந்து பேராசிரியர்களைப் பணியமர்த்தவும், பிறநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையைப் பெருக்கவும் இந்நிறுவனம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஆராய்ச்சியைப் பொறுத்தவரை, புதிய பல் துறை ஆய்வுக் கூடங்கள் மற்றும் துறையிடை ஆய்வகங்கள் ஆகியவை கூடுதலாக உருவாக்கப்பட்டு அவை உயர் ஆய்வு மையங்களாக (Centres of Dynamic Excellence) மேம்படுத்தப்படும்.

இம்முயற்சிகளின் தொடர்ச்சியாக, பன்னாட்டு நிறுவனமான சீமன்ஸ் (SIEMENS) உதவியுடன் என்.ஐ.டி.டி.-யில் ரூ. 190 கோடி முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள உற்பத்திக்கான உயர் ஆய்வு மையத்தினை (Centre of Excellence in Manufacturing) மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைக்க உள்ளார். இந்த உயர் ஆய்வு மையத்தின் உருவாக்கத்திற்காக இதன் தொழில்நுட்பப் பங்காளாரான சீமன்ஸ் நிறுவனம் 90% முதலீட்டினையும், என்.ஐ.டி.டி. 10% பங்கினையும் அளித்துள்ளது.

இந்நிறுவனத்தைச் சுற்றிலும் அமைந்துள்ள தொழிற்சாலைப் பணியாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் உயர் தொழில்நுட்பத் திறனை அளிப்பதற்கு இந்த உயர் ஆய்வு மையம் முழு வீச்சுடன் செயல்படும். பல துறைகளுக்கான கற்றல் சூழலை உள்ளடக்கிய தொழில்நுட்பம், அறிவியல், மேலாண்மை, பொறியியல் ஆகிய துறைகளில் தனித்துவமிக்க நிறுவனமாக இது செயல்படும். தொழில்நுட்பத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அளிப்பதில் இந்நிறுவனம் பெற்றுள்ள சிறந்த அனுபவத்தைக் கொண்டு, திட்பமான தொழில்நுட்பக் கல்விச் சூழலை உருவாக்குவதே இந்த மையத்தின் முதன்மை நோக்கமாகும்.

தற்போதைய சூழலில் தொழில் துறை தேவைகளுக்கும், தொழில்நுட்பக் கல்விக்குமான இடைவெளியைக் குறைத்து தொழில் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் பொறியியல் பட்டதாரிகளை பணிக்கு தயாரான முறையில் அவர்களை உருவாக்குவதில் பெரும் பங்களிப்பை இம்மையம் செய்யவுள்ளது.

மேலும் சீமன்ஸ் நிறுவனமும், என்.ஐ.டி.டி.-யும் இணைந்து கற்றல் சார்ந்த புதிய செயல் திட்டங்களை வடிவமைத்து, இம்மையத்தின் மூலம் செயல்படுத்தவுள்ளன. பொறியியல், பல்தொழில் நுட்பம், தொழிற்பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, அதிக வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும். இத்தகைய பயிற்சிகளை அளிப்பது மட்டுமல்லாமல், தொழில் நிறுவனங்களுக்கான ஆலோசனை வழங்குதல், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி சேவைகளை உள்ளடக்கி இந்த மையம் செயல்படவுள்ளது.

தொழிற்சாலைகளுக்குத் தேவையான வடிவமைப்பு மற்றும் மதிப்பு சான்றளித்தல், மேம்பட்ட தயாரிப்பு முறைகள், சோதனை மற்றும் உயர் செயலாக்கம், தானியங்கி தொழில் நுட்பம், மின்சாரம் மற்றும் ஆற்றல் சேமிப்பு, செயல்முறை கருவியியல், எந்திர மின்னியல், சி.என்.சி. எந்திரங்கள், சி.என்.சி. கட்டுப்பாட்டுக் கருவிகள், எந்திரனியல் (Robotics), விரைந்த மாதிரி உருவாக்கம் (Rapid Prototyping), பொருண்மை இணையம் ஆகிய துறைகளில் தொழில் முறை ஆராய்ச்சிகள் மற்றும் வளர்ச்சி சேவைகளை இம்மையம் மேற்கொள்ளும்.

உடனடி விற்பனைக்கு ஏற்ற பொருள் உருவாக்கத்தை அடையாளப்படுத்தவும், அதைச் சார்ந்த ஆராய்ச்சி, பகுப்பாய்வு, தோற்ற உருவாக்கம் ஆகிய தலைப்புகளின் கீழ் வாழ்வின் நிகழ்கால சிக்கல்களுக்கு தீர்வு காணக்கூடிய தயாரிப்புகளை மாணவர்கள் உருவாக்குவதற்கான ஓர் உறுதியான அடித்தளத்தை அமைக்க இது உதவும்.

“பன்னாட்டுத் தொழில்நுட்ப திருவிழாவான ‘பிரக்ஞான் 2019’-இன் (Pragyan 2019) ஒரு பகுதியாக வன்பொருள் போட்டியினையும் (Hardware Hackathon) மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார். பிரக்ஞான் அமைப்பானது ஐ.எஸ்.ஓ. 9001 மற்றும் 20121 சான்றளிக்கப்பட்ட தொழில்நுட்ப மேலாண்மை அமைப்பாக என்.ஐ.டி.டி.-யில் செயல்பட்டு வருகிறது. புதுமையான தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு திறன்களை மாணவர்கள் வெளிப்படுத்துவதற்கு சிறந்த தளமாக இந்நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வன்பொருள் போட்டிக்கான இணைய தளத்தையும் மாண்புமிகு அமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார்.

என்.ஐ.டி.டி. மாணவர்களுக்கான போட்டிகள், கண்காட்சி ஆகியவற்றை நடத்தும் ‘சங்கம்’ (Sangam), பல்வேறு கல்லூரிகளுக்கான கண்காட்சி, போட்டிகளை நடத்தும் ‘இன்ஜீனியம்’ (Ingenium) ஆகிய அமைப்புகள் பிரக்ஞான்-உடன் இணைந்து இயங்கி வருகின்றன. அந்த வரிசையில் வன்பொருள் போட்டி ஒரு முக்கிய நிகழ்வாக தற்போது சேர்க்கப்பட்டுள்ளது” என்று டாக்டர் மினி தாமஸ் தெரிவித்தார்.

இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது என்.ஐ.டி.டி.-இன் டி.&பி. (T&P) துறைத் தலைவர் முனைவர் ஏ.கே. பக்தவச்சலம், என்.ஐ.டி.டி.-சீமன்ஸ் உயராய்வு மையத்தின் தலைவர் முனைவர் துரை செல்வம், அமர்டெக் (AMARTech) நிறுவனத்தின் திரு. அரவிந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

ALSO READ:

HRD Minister Prakash Javadekar to Launch NIT,Tiruchirappalli’s Strategic Plan

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *