96 சினிமா விமர்சனம் (4.5/5)

96 சினிமா விமர்சனம்

ரேட்டிங் 4.5/5

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் வெளிவந்துள்ள 96 படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சி.பிரேம்குமார்.

இதில் விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, ஜனகராஜ், பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ்,ஆதித்யா பாஸ்கர், கௌரி ஜி.கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்;கள்:-ஒளிப்பதிவு -சண்முகசுந்தரம், இசை-கோவிந்த் வஸந்தா, எடிட்டிங் – கோவிந்தராஜ்,கலை – வினோத் ராஜ்குமார், பாடல்கள்-உமாதேவி, கார்த்திக் நேத்தா,படம் வெளியிடு- 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார், பிஆர்ஒ-மௌனம் ரவி.

நாற்பது வயதை தொட்ட பிரம்மச்சாரி ராம்(விஜய் சேதுபதி) இயற்கையை தேடி பயணிக்கும் புகைப்படக் கலைஞர். புகைப்படக்கலை நுணுக்கங்களைப் பற்றி சொல்லிக் கொடுக்க தன் மாணவ-மாணவிகளுடன் சொந்த ஊரான தஞ்சாவூர் வருகிறார். அப்பொழுது தான் படித்த பள்ளிக்கு சென்று தன் பழைய நினைவுகளை நினைத்துப் பார்க்கிறார். அதன் பின் அந்த பள்ளியில் படித்த நண்பர்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைகிறார். 96 பேட்ச் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சென்னையில் சந்திக்க ஏற்பாடு செய்கின்றனர். இந்த சந்திப்பிற்காக சிங்கப்பூரிலிருக்கும் ஜானு (த்ரிஷா) நண்பர்களைப் பார்க்க தனியாக சென்னை வருகிறார்.

ப்ளாஷ்பேக்:- பத்தாவது படிக்கும் போதே கூச்ச சுபாவம் கொண்ட ராம் பேசிக் கொள்ளாமலேயே ஜானுவை விரும்புகிறார். இதை அறிந்தாலும் ஜானு அதை வெளிக்காட்டாமல் ராமை வம்புக்கிழுத்தாலும்; அன்பாகவே பழகுகிறார். பள்ளி விடுமுறை முடிந்து அனைவரும் பள்ளிக்கு வர ராம் மட்டும் வராமல் போகிறார். அதனால் ராமைச் தேடிச் செல்லும் நண்பர்களுக்கு ராமின் குடும்பம் கடன் தொல்லை காரணமாக வீட்டை விற்று விட்டு சென்னைக்கு சென்று விட்டதாக அறிகின்றனர். அதன் பின் தன் பழைய காதல் நினைவுகளுடன் ஜானுவும் கல்லூரிப் படிப்பை முடித்து திருமணம் ஆகி சிங்கப்பூரில் செட்டிலாகிவிடுகிறார்.

பத்தாம் வகுப்பில் பிரிந்தவர்கள் இருபத்தி இரண்டு வருடங்கள் கழித்து சென்னையில் சந்திக்கின்றனர். இவர்களின் விடலைப்பருவ காதல் நினைவில் இன்றும் இருக்கின்றனரா? இருவரின் பாதைகள் வெவ்வெறு திசையில் சென்று விட்ட போதிலும் பல வருடங்கள் கழித்து சந்திக்கும் போது ஏற்பட்ட மாற்றம் என்ன? தங்கள் வயதிற்கேற்ற முதிர்ச்சியுடன் நடந்து கொண்டார்களா? பழைய நினைவுகளுடன் பிரிந்து சென்றார்களா? இல்லையா? என்பதே தத்ரூபமான நடிப்பில் உணர்ச்சிகளை சொல்லும் க்ளைமேக்ஸ்.

புகைப்படக்கலைஞர் ராம்(எ)கே.ராமச்சந்திரனாக விஜய்சேதுபதி தன் இளமைக்கால பள்ளி காதல் நினைவுகளின் தாக்கத்தில் வலம் வந்தாலும், வெளியில் கண்டிப்பான புகைப்பட ஆசிரியராகவும், தோற்றத்தில் நரை முடி தாடியுடன் முதிர்ச்சியாக தெரியும் வண்ணம் காட்டிக்கொண்டாலும் மனதளவில் அதே கூச்ச சுபாவம் கலந்த குணத்துடன் த்ரிஷாவை பார்க்கும் போதெல்லாம் காதல் கலந்த பயத்துடன் த்ரிஷாவுடன் மரியாதையோடு பேசுவது, பழகுவது என்று பல பரிணாமங்களை வெளிப்படுத்துகிறார். நல்லவேளை நன்றாக நடிக்கிறார் என்று இளமை பருவத்தில் இவரையே போடாமல் இருந்தார்களே அதற்கு மேலும் ஒரு கைதட்டல் இயக்குனருக்கு கொடுக்கலாம். எது அவருக்கு பொருந்துமோ அதை தெகட்ட தெகட்ட மிகையில்லாமல் கொடுப்பதில் விஜய் சேதுபதிக்கு ஈடு வேறு யாரும் கிடையாது. த்ரிஷாவை எட்டி நின்றே மனதிற்குள் காதலித்து அவருக்கு வேறெருவருடன் திருமணம் முடிந்து செல்லும் வரை தொந்தரவு செய்யாமல் மௌனமாகவே தன் மனதிற்குள் காதலை புதைத்து வைத்து 22 வருடங்கள் கழித்து அதே நினைப்புடன் காதலை கண்ணியமாக வெளிப்படுத்தும் விதம் அசத்தலான நடிப்பில் அனைவரையும் கவர்ந்து விடுகிறார். நாற்பது வயதில் வெட்கம், கூச்சம், காதல் உணர்ச்சிகளைவும், தான் விரும்பிய பாடலை கடைசியாக த்ரிஷா பாடும் போது தட்டுத் தடுமாறி ஒடி வரும் காட்சியும் இறுதியில் பிரியாவிடை பெற்றுச்செல்லும் போதும் நச்சென்று சோகத்தையும் நம்மிடையே விட்டுச் செல்கிறார்.

ஜானு(எ) ஜானகி தேவியாக த்ரிஷா குறும்புத்தனத்துடன் விஜய் சேதுபதியை கலாய்ப்பதும், பின்னர் தன் வெற்றி பெறாத காதலை நினைத்து அழுது புலம்புவதும், நினைவாக சேகரித்த பொருட்களை பார்த்து ஏங்குவதும், விஜய் சேதுபதியை இளமையாக மாற்றி ரசிப்பதும், கல்லூரியில் படிக்கும் போது தேடி தூது விடுவது விஜய் சேதுபதி என்று அறியாமல் கடிந்து கொள்வதும் என்றும் இளமை துள்ளலுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். விஜய் சேதுபதி சொன்ன காட்;சியை அப்படியே மாற்றி மாணவிகளிடம் கற்பனையில் காதல் வெற்றி பெற்றது போல் நிஜமாக நடந்தால் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் விதம் அற்புதம். விபரீதமாக நடந்து விடாமல் விஜய் சேதுபதி தயங்கும் போதெல்லாம் ஒரு அதட்டலில் உயர்வான எண்ணத்துடன் அந்தக் காட்சியையே தன் வசப்படுத்திவிடுகிறார் த்ரிஷா. திருமணமான பெண்ணின் மனநிலையை வெளிப்படுத்தி க்ளைமேக்சில் கண் கலங்கி செல்லும் காட்சியில் முத்திரை பதிக்கிறார்.

நண்பர்களாக தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் கொஞ்ச நேரமே வந்தாலும் கலகலக்க வைக்கின்றனர்.பள்ளியின் காவலாளியாக காவல் தெய்வம் ஜனகராஜ், சிறு வயது பள்ளி மாணவர் விஜய் சேதுபதியாக எம்.எஸ்.பாஜ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர், சிறு வயது பள்ளி மாணவி த்ரிஷாவாக கௌரி ஜி.கிருஷ்ணா ஆகிய இருவரின் பங்களிப்பு பாதி படத்தின் முக்கியமான காட்சிகளுக்கு உயிரொட்டமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு தூண்களாக இருக்கிறார்கள்.

சண்முக சுந்திரத்தின் ஒளிப்பதிவு இயற்கை காட்சிகள் நிறைந்த பாடல், இளமைப்பருவத்தில் பள்ளிக்கூடம், வகுப்பறை, சந்தித்த இடங்கள், வயதான பிறகு சந்திக்கும் வீடு, ஹோட்டல், கார், மெட்ரோ ரயில் பயணம், சலூன் என்று ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க ரசிக்க கொடுத்து காட்சிக் கோணங்களில் அசத்தியிருக்கிறார்.
கோவிந்த் வஸந்தாவின் இசையில் எட்டு பாடல்கள் மனதை வருடினாலும் இளையராஜாவின் பழைய இரண்டு, மூன்று பாடல் வரிகள் அதையெல்லாம் மறக்கடிக்க வைத்து விடுகிறது என்பது தான் உண்மை.

எடிட்டர்-கோவிந்தராஜ் சில காட்சிகளை கத்திரி போட்டிந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக சென்றிருக்கும்.

எழுத்து, இயக்கம்:-சி.பிரேம் குமார். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தை ஒளிப்பதிவு செய்த சி.பிரேம் குமார், இதில் 96 பக்கத்தை சாரி படத்தை தன் இயக்கத்தால் மனதை புரட்டிப் போட்டு விட்டார். 90களின் காதல் எந்த சூழ்நிலையிலும் மலரும் நினைவுகளான தெரியும் வண்ணம் சிறப்பான திரைக்கதையால், தெளிந்த நீரோடைப்போல் கம்பி மேல் நடப்பது போன்று ஜாக்கிரதையாக கையாண்டிருக்கிறார். எந்த சமரசத்திற்கும் இடமளிக்காமல், கண்ணியமாக இளம்வயதில் நட்பு காதலாக மாறுவதும் அதே காதல் பல வருடங்களுக்கு பிறகு நட்பாக பிரிவது போன்று காட்சிப்படுத்தி மற்றுமொரு காதல் கோட்டை, ஆட்டோகிராப், பவர் பாண்டி ஸ்டைலில் காதல் கதையை கொடுத்து வெற்றிப் பாதையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். வெல்டன்.

மொத்தத்தில் எந்த வயதினரையும் பார்க்க மறந்த-நினைவில் நிற்கும் நண்பர்களை தேடிப் பிடித்து மீண்டும் சந்திக்க தூண்டும் படம் 96.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *